Pages

18 July 2009

வேலுபிரபாகரனின் காதல் கதை!



ஓஷோவின் ஏதோ ஒரு புத்தகத்தில்...

காமத்தைக் கடக்க காமத்தில் மூழ்கு.. காமத்தில் மூழ்காமல் மறுகரைக்கு செல்லவே முடியாது.

*********


காமம்! இந்த ஒற்றைச்சொல்லிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஓராயிரம் பிரச்சனைகளை ஒன்றரை மணிநேரத்தில் ஒட்டுமொத்தமாய் சொல்ல முயற்சித்திருக்கிறார் வேலு பிரபாகரன். ஒரு நல்ல உரையாடலை அல்லது விவாதத்தை முன் வைத்திருக்க வேண்டிய ஒரு ஒன்லைனரை வைத்துக்கொண்டு மூன்றாம்தர பிட்டுப்பட வெலவலில் ஒரு காவியம். இசை இளையராஜா.

நான் வயதிற்கு வந்திருந்த சமயத்தில் இந்த திரைப்படம் பூஜையின்றி தொடங்கப்பட்டிருக்கக் கூடும். ரிலீஸ் ஆவதற்குள் ஆண்டுகள் பல கடந்திருக்கின்றன. ஒரு சில நிர்வாணக்காட்சிகள் படத்தில் இருந்தமையால் படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் இருந்ததாய் பல முறை வே.பி மீடியாக்களில் கண்ணீர்விட்டு கதறியிருக்கிறார். அதுவும் முழுநிர்வாணம் கூட கிடையாது செமி தான். இப்படம் வெளியாக ரஜினிகாந்த் கூட உதவியதாய் கூட ஒரு வதந்தியோ செய்தியோ உண்டு. அது தவிர ஒருமுழுப்படத்தையும் எடுத்துவிட்டு அது சொல்ல வந்த கருத்தை சென்ஸாருக்குச் சொல்லவே இன்னொரு படத்தையும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்திருக்கிறது. அதனால் படம் பப்படமாய் இருக்கிறது.

காமம் மறைக்கப்பட வேண்டியதா! இந்தியாவின் கலாச்சாரம் காமத்தை மூடிவைத்து அதன் மீது அதீத வெறியை ஒவ்வொரு ஆணிடமும் உருவாக்கி , வெறும் காமத்தை மட்டுமே தேடுகின்ற ஒரு மடச் சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறது என படத்தின் ஆரம்பத்திலேயே மைக்கைப் பிடித்து பேசத்துவங்குகிறார் வே.பி. இறுதிக்காட்சியில் இளம்பருவத்தில் இளம்வயது பாலியல் குற்றங்களையும் ஏக்கங்களையும் தவிர்க்க அரசாங்கமே அனுமதிக்கப்பட்ட மாற்று ஏற்பாடுகள் ( லைசண்ஸ் தரப்பட்ட விபச்சார விடுதிகள் ) செய்து தரவேண்டும் எனவும் முழங்குகிறார்! இது தவிர நடுவில் மீடியாக்களையும் சாடுகிறார். மீடியாக்கள் பெண்ணின் தொப்புளையும் மார்பகங்களையும் காட்டி ஆண்களின் காமத்தை தூண்டுகின்றன என்கிறார்.ஆனால் இந்த படத்தின் பெரும்பகுதிகளில் விதவிதமாய் அதையே மூன்று பெண்களை வைத்து காட்டியிருப்பது முரண்.

மற்றபடி கதை? - முன்று பெண்கள் - ஒரு ஜாதிவிட்டு ஜாதி காதல் - ஒரு கள்ளக்காதல் - ஒரு கைவிடப்பட்ட பெண்ணின் காதல் - அதை சுற்றி காமம் - பின் அனைத்தும் பலி - அனைவரும் பலி - கடைசியில் வே.பி காதல் எல்லாம் சும்மா காமம்தான் உண்மை என கருத்து சொல்லி படத்தை முடிக்கிறார்.

மேற்ச்சொன்ன கதையை ஒரு டைரக்டர் படமாக எடுக்க அந்த படத்திற்கு எதிர்ப்பு .. அவரை யாரோ கத்தியில் குத்திவிட , அதை விசாரிக்கும் போலீஸ்...ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா முடியல!

இசை இளையராஜா. நீங்கள் இளையாராஜா ரசிகராக இருந்தால் தயவு செய்து இந்த படத்தை பார்க்க வேண்டாம் இசைராஜாவை வெறுத்துவிடும் வாய்ப்பிருக்கு! பிட்டுப்படங்களுக்கு இசையமைக்கும் ஏ.டி.ஜாயை விட அருமையான இசை. பிண்ணனி ஓஹோ!

இது தவிர வே.பி, சில்க் ஸ்மிதாவுடனான தனது காதலையும் அவரும் ஸ்மிதாவும் மணமுடித்துக்கொண்டதையும் பின் பிரிந்து போனதையும் படத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மை எனவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

நிர்வாணம் காட்டுகிறேன் பேர்வழி என வே.பி அக்கால கர்ணன் படங்களில் உபயோகப்படுத்திய டிரான்ஸ்பரன்ட் வெள்ளை உடையில் நாயகிகளை நீரில் நனைத்து உரித்துக் காட்டுகிறார். படத்தில் வரும் அனைத்து பெண்களும் பாலியலில் ஈடுபடுகின்றனர். நிர்பந்தத்தால். அவர்களது காமம் அல்லது காதல் குறித்து ஒன்றும் சொல்லவில்லை.

வே.பிரபாகரனின் முந்தைய திரைப்படங்களான கடவுள் , புரட்சிக்காரன் திரைப்படங்கள் கூட ஓரளவு அதன் சொல்லும் கருத்தை தெளிவாய் சொன்னதற்காகவாவது பார்க்கலாம். இத்திரைப்படம் சொல்ல வந்த கருத்திலிருந்து விலகி ஏதேதோவாகி சொல்லவந்த கருத்தை நேரடியாய்ச் சொல்லாமல் நீட்டி முழக்கிச் சொல்லிச்செல்கிறது.

இது தவிர இத்திரைப்படம் ஆணின் பார்வையிலேயே அதிலும் வேலுபிரபாகரனின் பார்வையில் காமமின்றி காதலில்லை. காதலே பொய் , காமமே மெய் என வேதாந்தம் சொல்லி முடிக்கிறது.

உடல்அரசியல் குறித்த டின்டோ பிராஸின் படங்கள் சொல்லும் அதே செய்தியை நம்மூர் லோக்கல் மசாலா சேர்த்து மண் வாசனையோடு சொல்ல முயன்று தோற்றிருக்கிறார் வே.பி. ஆனால் பேசாப்பொருளைப் பேசதுணிந்ததற்காக அவரைப் பாராட்டலாம்.

மற்றபடி படம்? - பிட்டுப் பார்க்காதே என்கிற அறிவுரையும் நாலேமுக்கால் பிட்டும்..