16 July 2009
அமெரிக்கா எந்திரன் - டொய்ங்ங்ங்ங்!
உங்கள் வீட்டு டிவி,பிரிட்ஜ்,பைக்,கார் மற்றும் இன்ன பிற உலோக தட்டுமுட்டு சாமான்கள் ஒரு ரோபோ(ROBOT) அல்லது பல குட்டி குட்டி ரோபோட்டுகளாக உருமாறி உங்களை தூக்கிப் போட்டு தூர்வாறினால் எப்படி இருக்கும். அப்படி உருமாரும் ரோபோட்டுகளை வைத்துக்கொண்டு மின்னல்வேகத்தில் ஒரு பிரமிப்பான திரைப்படத்தை கொடுத்திருக்கின்றனர் டிரான்ஸ்பார்மர் படக்குழுவினர்.
நூற்றுக்கணக்கான ரோபோட்டுகள். அத்தனையும் விதவிதமாய் சரவணாஸ்டோர்ஸ் பாத்திரக்கடை போல பளபளா கலகலா சலசலக்க அதிர வைக்கின்றது. உண்மையாகவே எல்லாமே விதவிதமான பாத்திரங்கள்தான்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்? .
அனைத்தும் அடித்துக்கொண்டு மோதுகின்றன. நிஜமாகவே தீப்பொறி பறக்கிறது. கர்ஜிக்கின்றன நமது இருக்கைகள் அதிர்கிறது. பல கோடிகளை வாரி இறைத்து அசால்ட்டாக எடுத்திருக்கின்றனர். படம் முழுக்க பிரமிப்பு பிரமிப்பு .
டிராண்ஸ்பார்மர்ஸ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இந்த வாரத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் அதே நக்கல் வசனங்கள் , அதிரடி சரவெடி பஞ்ச் டயலாக் பேசும் அபார ரோபோட்டுகள். ரோபோட் வில்லன். ரோபோட் நாயகன் . இவர்களுக்கு நடுவில் ஒரு மனித ஹீரோ. சோகக்காட்சியிலும் அதீத கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ஜலபுல ஜங்கா ஹீரோயின் மேகான் பாக்ஸ் ( ம்ம் பெருமூச்சைத்தவிர எதுவும் சொல்ல இயலவில்லை). வேறென்ன வேண்டும் மைக்கேல் பேயின் இந்த இரண்டாவது படைப்பில். முழு நீள மசாலா சைன்ஸ் பிக்சன். கதையின் அதீத பூச்சுற்றலும் அதனூடே ஓடும் சுமால் சுமால் நகைச்சுவைகளும் சுஜாதா கதை படிக்கும் சுவாரஸ்யம் தரும் அம்சங்கள். மைக்கேல் பே ( படத்தின் இயக்குனர் ) சுஜாதா கதைகள் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் படத்தின் தயாரிப்பு அமெரிக்க சுஜாதா ஸ்பீல்பெர்க் ஆயிற்றே.
டிராண்ஸ்பார்மர்ஸ் முதல் பாகத்தில் தப்பியோடிய ஜோரோ என்னும் கெட்ட ரோபோட் மீண்டும் தன் படைகளை திரட்டிக்கொண்டு பூமியை தாக்க வருகிறது. நமது சப்பை ஹீரோவும் அவரது கவர்ச்சிக்காதலியும் ஆப்டிமஸ் என்னும் ரோபோக்கள் கிரக மன்னரும் இணைந்து எதிரிகளின் இந்த திட்டமிட்ட திடீர் தாக்குதலையும் , ரோபோக்களின் மூதாதையர்கள் மறைத்து வைத்திருக்கும் சூரியனை தின்னும் மெஷினை அழிப்பதும் படத்தின் கிளைமாக்ஸ்.
விறுவிறுப்பு, சுறுசுறுப்பு - திரைக்கதை. படம் ஆரம்பித்த முதல் பிரேமிலிருந்து கடைசி காட்சியில் பெயர் போடும் வரை விடாது துரத்தும் வேகம். முதல்பாகத்தை காட்டிலும் ஒரளவு முந்திச்செல்கிறது.
டொய்யாங்ங்ங்ங்... அதிரும் சவுண்ட் எபஃக்ட். காது கிழிகிறது. படம் பார்ப்பவரின் சேர்கள் அதிர்கிறது. ரோபோக்கள் சண்டையிட அவர்களுக்கு நடுவில் பதட்டமாய் பாப்கார்ன் சாப்பிடும் உணர்வு!. அதற்கே ஒரு டொய்யாங்ங் சேர்த்துக்கொள்ளலாம்.
கிராபிக்ஸ் கலைஞர்களின் நொங்கைபிதுக்கி வேலை வாங்கியிருப்பார்கள் போல. இரண்டு காட்சிகளில் ஒன்றேமுக்காலே அரைக்கால் காட்சி , முழுக்க முழுக்க கிராபிக்ஸ். அதிலும் அத்தனை வித ரோபோட்டுகள் அத்தனையும் வேறு வேறு நிறம் . வேறு வேறு உடலமைப்பு. கொசு ரோபோ , மிக்ஸி ரோபோ , குண்டு ரோபோ , காமெடி ரோபோ , வால் முளைத்த அழகி ரோபோ , நாய் ரோபோ.. மிகப்பெரிய லிஸ்ட் அது. எழுத ஆரம்பித்தால் இன்னும் நீளும். மேற்ச்சொன்னவை அனைத்தும் நீங்காமல் மனதில் பதிந்த ரோபோக்கள். அதிலும் சில ரோபோக்கள் பேசும்போது அவற்றின் உடல்மொழி, சிரிப்பதும் அழுவதும் , பயப்படுவதுமாய் அனைத்தும் மிகத்துல்லியமாய் பார்த்து பார்த்து செதுக்கி... இல்லை இல்லை முறுக்கி இருக்கிறார்கள் கிராபிக்ஸ் கலைஞர்கள். தமிழ்சினிமா கிராபிக்ஸில் பல நூறு வருடங்கள் பின்தங்கியிருக்கிறதோ என்னவோ? ரோபோக்கள் ஒருபுறமென்றால் எகிப்தின் பிரமிடுகள் உடைந்து சுக்குநூறாகின்றன. தூண்கள் சரிகின்றன. அவற்றின் மேலேறி ரோபோக்கள் நர்த்தனமிடுகின்றன. தூசு கூட மிச்சமின்றி அனைத்தும் மிஸ்டர்.பர்பெக்டாய் வந்திருக்கிறது. அனிமேசன் துறையின் இமாலய வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
படத்தின் இயக்குனர் மைக்கேல் பே யை அனைவருக்கும் அத்தனை பரிச்சயம் இருக்குமா தெரியவில்லை. ஆர்மகெட்டான், பேட் பாய்ஸ் , பேர்ல் ஹார்பர் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் அவர். அவருக்கு இத்திரைப்படம் அல்வா சாப்பிடுவது போல் இருந்திருக்க வேண்டும். முழுக்க ரசித்து செய்திருக்கிறார். அவரது கிரியேட்டிவிட்டி படம் நெடுக அசத்தலாய் வெளிப்படுகிறது.
படத்தின் நடிப்பு குறித்து அதிகம் பேச இயலாது. படமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ரோபோட்டுகள் அருமையாக நடித்திருக்கின்றன. அதிலும் ஒருகாட்சியில் கண்களில் கண்ணீர் வர அழுது புரளும் ரோபோவின் நடிப்பு அட்டகாசம். தங்கப்பல் காமெடி ரோபோவின் வசனங்கள் வசனகர்த்தாவின் உழைப்புக்குச் சான்று. இரட்டை அர்த்த வசனங்கள் கூட படத்திலுண்டு.
படத்தின் ஓளிப்பதிவு அடேங்கப்பா.. ராக்கெட்டில் பறந்துகொண்டே படமாக்கியிருப்பார் போல. பளீர் பளீச் கலர்புல் கலாட்டா!
இப்படத்தின் மூலம் ஒரு விசயத்தை அமெரிக்கர்கள் உலகத்திற்கு தெரிவிக்க எண்ணுவதாய் இருந்தது. அது அவர்கள் நினைத்தால் உலகத்தை இரண்டே முக்கால் நிமிடத்தில் சாம்பலாக்கி பக்கத்து கிரகமான செவ்வாய்க்கு ஒரு பொட்டலத்தில் பார்சல் அனுப்பும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதே அந்த செய்தி. அத்தனை பலமான ஒரு தற்கால இராணுவமாக அமெரிக்க இராணுவம் காட்டப்படுகிறது. மற்றபடி மேலும் ஒரு அமெரிக்க பயம் இத்திரைப்படம்.
சும்மா ஜாலியாக இரண்டு மணிநேரம் பொழுதைக்கழிக்கலாம். சிரிக்கலாம் சிலிர்க்கலாம். கிராபிக்ஸ் குறித்த ஆர்வமுள்ளவர்கள் அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்ள ஒரு பாடபுத்தகமாக பயன்படுத்தவும் பார்க்கலாம்.
திரைத்தொழில்நுட்பத்தில் நாம் இன்னும் வேகமாய் முன்னேற வேண்டும் என்பதை உணரவாவது ஒருமுறை காணலாம்.
மற்றபடி டிரான்ஸ்பார்மர்ஸ் - தி ரிவன்ஜ் ஆப் தி பாலன்ஸ் -
சும்மா.. விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்