23 July 2009
கவிஞர் ஆலபுலவாயனாரும் அரைபாட்டில் விஷமும்
'' கவிதைனா என்னனு தெரியுமாடே ஒனக்கு.. கவித்துவம்னா தெரியுமா ஒனக்கு.. நீ சிற்றிலக்கியத்துல சாதனை பண்ண கவிஞர் ஏரிவாய்க்கால்பட்டி எருமைதாசன் எழுதின கவிதை தொகுப்பு படிச்சிருக்கியா.. அவருதான்யா ஏரிவாய்க்கால் பட்டி வட்டார மொழிவழக்குக்கு பிதாமகனே... அதுவாவது பரவால்ல ரஷ்யகவிஞர் ரப்னோஸ்கி கிலிலிபோனியோவாவது தெரியுமா.. ரஷ்ய வட்டார வழக்குல பெரிய இவருயா! தம்பி உங்களுக்கு ஆர்வம் இருக்கற அளவுக்கு இலக்கிய அறிவு கிடையாது இன்னும் வளரணும் தம்பீ''
உங்க கவிதைய கொண்டுபோய் அந்தாளுகிட்ட காட்டினா அப்படித்தான் சொல்லுவாரு. ரொம்ப நல்லவரு. கவிதையின் உள்ளடக்கம் பொருளடக்கம் நடு அடக்கம்னு பேச ஆரம்பிச்சாருனா நம்மல அடக்கம் பண்ற அளவுக்கு பேசுவாரு நம்ம பின்னவீன முன்னவீன அதிநவீன கட்டணமுறைக் கவிஞர் ஆலபுலவாயனார். பெயர் காரணம்லாம் கேக்காதீங்க அது ஏற்கனவே சொல்லியாச்சு. பிரபல கவிஞர்கள பத்தி யாராச்சும் பேசினாப் போதும் ஓஓ அவனா நானும் அவனும் ஒரே தட்டுல தின்னு ஒரே பாத்ரூம்ல குளிச்சவங்கன்ற ரேஞ்சுல கும்மியடிப்பாரு. மெய்யாலுமே இந்தாள அந்த கவிஞருக்கு யாருனே தெரியாதாருக்கும். தெரிஞ்சாலும் கெட்ட வார்த்தைலதான் திட்டுவாங்களாருக்கும்.
எங்க எலக்கிய கூட்டம் நடந்தாலும் மேடையில முன் வரிசைல மொத ஆளா துண்டுப் போட்டு எச்சிதுப்பி எடம் புடிச்சு உக்காந்துக்குவாரு. அங்க வர பெரிய மனுஷாள்கிட்ட பேசற மாதிரி போட்டோ எடுத்துகிட்டு வீட்டில அவரவிட பெரிசா அதை ப்ரேம் போட்டு மாட்டிவச்சுக்குவாரு.
நான்கூட மொதல்ல அந்தாளு ஏதோ பெரிய கவிஞரு போலனு நினைச்சு ஒரு கடைல போய்
'பிரபல' கவிஞர் ஆலப்புலவாயனார் கவிதைத்தொகுப்பு இருக்கானு கேட்டேன். பேந்த பேந்த முழிச்சிட்டு பிம்பிளிக்கி பிளாப்பினு சொல்லி லூசு மாதிரி சிரிச்சான். அடப்பாவிங்களா பேரச்சொன்னதுக்கே இப்படி ஆகிட்டானேனு யோவ் தமிழ்ல சொல்லுய்யான்னா கேட்டா சார் நீங்க என்ன மென்டலானு கேட்டான். அப்ப எனக்கு புரியல அதுக்கான அர்த்தம்.
அப்புறம்தான் தெரிஞ்சுது இந்தாளு பேரச்சொன்னா இலக்கிய வட்டத்துல நம்மள லூசுனு நினைப்பாங்கனு. ஆனாலும் விடாப்பிடியா எங்கயாச்சும் யாராச்சும் இலக்கியம்னு சொல்லி டீக்கடைல கூட்டமா நின்னாக்கூட அதுல கலந்துகிட்டு தன்னோட குஞ்சாணி என்கிற சிறுபத்திரிக்கைல போட்டு , அங்க டீ ல சக்கரை கம்மினு கண்டன தலையங்கம் கூட போடுவாரு. எல்லாமே சொந்த காசு அவரப்பா விவசாயம் பண்ணி சம்பாதிச்ச காசு. ஏன்யா சொந்த காச இப்படி வீணாக்குறீங்கனு கேட்டா... தம்பீ பாரு இன்னும் இருபது வருஷம் கழிச்சு தமிழ் இலக்கியம்னாலே அது ஆ.பு.வாயனார்தானு பேசுவாய்ங்க.. இதெல்லாம் இலக்கியத்துக்கு நாம செய்யற சேவப்பா உன்ன மாதிரி இலக்கியம் தெரியாத பயலுகளுக்குலாம் தெரியாது..
விகடன் குமுதம் கல்கி கல்கண்டு ஆனந்தசினிமா மங்கையர்மலர் மஞ்சள் சிவப்பு கருப்பு புளிப்பு அது இது லொட்டு லொசுக்கு எல்லா பத்திரிக்கைலயும் அண்ணனுக்கு ஆளிருக்கு. என்ன இந்தாள பாத்தாதான் அவன் அவன் டெரராவான். அப்படி இப்படினு பிரபல பத்திரிக்கைல வாராவாரம் வரமாதிரி ஒரு தொடருக்கு வாய்ப்பு வாங்கி நானும் கவிஞன்டானு உலகம் அறிஞ்ச கவிஞ்சர் ஆகிட்டாரு. ஆனாலும் நாளு வாரம் நாளே வாரம்தான்.. தொடர் அறிவிக்கப்படாம நின்னு போச்சு.
ஆனா நம்ம சிங்கம் குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலனுதான சொல்லும்.. யாராச்சும் கேட்டா.. ''இலக்கிய பணிகளுக்கு நடுவுல ஜனரஞ்சக பத்திரிக்கைல எழுத ரொம்ப நேரம் செலவாகுது அதுமில்லாம நான் கொஞ்ச நாள் ஓய்வெடுக்கலாம்னு நினைச்சு முடியாதுனுட்டேன் சார்''னு சீன் போடும்.
அப்படி இருக்கும் போது அந்தாளு வாழ்க்கைலயும் வசந்தம் வீசுச்சு. வசந்தா வடிவத்தில. வசந்தா அவரோட வேலைப்பாக்கற பொண்ணு. ரொம்ப அழகா அம்சமா இருக்கும்.அதுக்கு நம்ம ஆலபுல மேல ஒரு கண்ணு. ஒரு நா வந்து சார் ஐ லவ் யூனு சொல்லிருச்சு. உடனே நம்ம ஆலுவுக்கு மூக்குக்கு மேல கோவம் வந்துருச்சு. ஒரு கவிஞன்கிட்ட காதல இப்படித்தான் வாயில சொல்லுவாங்களானு எகிற ஆரம்பிச்சிருச்சு. அந்தம்மா மிரண்டு போய் அந்த கம்பெனிய விட்டுல்ல ஊரே விட்டே ஓடிருச்சு. உடனே ரொம்ப சோகமா இப்படி ஒரு கவிதை எழுதினாரு ஆ.பு.வாயனார். அவருக்கு கானாக்கு கானா புனாக்கு புனானா ரொம்ப புடிக்கும் .
ஒரு சாம்பிள் கவிதை போடலாம்னு ஆசைதான் .. அத படிச்சு உங்களுக்கு வாந்தி , சீதபேதி , கக்குவான் இருமால் இப்படி பல வியாதி வந்து நீங்க செத்துப்போயிட்டா.. சோ நோ கவிதை.
ஒரு கவிதைய எழுதி இந்த பொண்ணுக்கு ஒரு கவர்ல போட்டு ஊருக்கு கொரியர்ல அனுப்பினாரு. உடனே அந்த பொண்ணு ஊரிலருந்து போலிஸ கூட்டிட்டு வந்து இந்தாளு என்ன கொலை பண்ண முயற்சி பண்றாருனு கேஸ் போட்டிருச்சு. இரண்டு மணிநேரம் இந்தாள லாக்கப்புல வச்சதுக்கே இரண்டு மூணு லாக்கப் மர்டர் ஆகிப்போச்சுனு கேள்வி . அப்புறம் தன்னோட இலக்கிய அந்தஸ்த வச்சு ரிலீஸ் ஆகி வெளிய வந்து '' சிறையறை கழிவறைகள் ''னு இரண்டாயிரத்து சொச்சம் பக்கத்துல ஒரு நாவல் எழுதி எழுதி எழுதி முடிச்சிட்டாரு.
அந்த நாவல எழுதினதிலருந்து அடுத்த ஜெமோ நான்தான் அடுத்த எஸ்.ரா நான்தான்டானு (அடுத்த சாரு நான்தான்டானு நல்ல வேளை சொல்லல) ஊருக்குலாம் லெட்டர் போட்டு கூவினாரு அவரு. ஆனாலும் யாரும் பெரிசா கண்டுக்கல. அப்பதான் ஒரு நாள் நான் வச்சிருக்கற பூச்சி மருந்து கடைக்கு வந்தாரு.
சார் என்னசார் கவித எழுதறத விட்டுட்டு விவசாயம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டீங்களானு கேட்டேன். அட நீ வேறயா சிறுபத்திரிக்கை நடத்தி பணம் போச்சு , கவிதை எழுதி மானம் போச்சு , நாவல் எழுதினேன் நாசமா போச்சு , எலக்கிய கூட்டத்துக்கு போய் மரியாதை போச்சு , பத்திரிக்கைல எழுதி எல்லாமே போச்சு அதான் விஷம் குடிச்சு சாகலாம்னு வந்தேன்னாரு..
நான் சிரிச்சுகிட்டே சொன்னேன் பிம்பிளிக்கி பிலாப்பினு..
யோவ் என்னய்யா என்ன பாத்தா லூசு மாதிரி இருக்கானு..கேட்டாரு
அட நீங்க வேற சார் இப்பலாம் சாவறதுக்கு விஷம் வேணும்னா யாரும் மருந்து வாங்கறதில்ல நேரா புக் சாப்புக்கு போய் உங்க கவிதை தொகுப்புதான் வாங்குறாய்ங்களான்னேன். விஷம் குடிச்சவன் கூட தப்பிச்சுடறானாம் உங்க கவிதைய படிச்சு இது வரைக்கும் யாரும் பொழச்சதே இல்லையாம்னு சொன்னேன்.
அப்ப என்னை கடுப்பாகி பாத்துட்டு போன மனுசன் அதுக்கப்புறம் உயிரோட இருக்காரா செத்தாரானு தெரியலை ஆனா நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன்.
அந்த ஆலபுலவாயனார எங்கயாச்சும் பார்த்தா சொல்லுங்கப்பு.. இல்லாட்டி பாத்த இடத்திலயே கொன்னுருங்க இல்லாட்டி அடுத்த கவிதை தொகுப்ப போட்டு உலகத்த அழிச்சற போறாரு..!
&&&&&&&&&&&&&&
பின் குறிப்பு - இந்த கதை(?)யில் வரும் பாத்திரங்களும் கரண்டிகளும் ஸ்பூன்களும் இன்ன பிற தட்டுமுட்டு சாமான்கள் யாவும் கற்பனையே.. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி உங்களை அது குறிப்பது போலிருந்தால் அது யதேச்சையானது. :-)