21 June 2009
மௌனசாட்சிகள்
நம் கண் முன்னே கொத்து கொத்தாய் மனிதர்கள் வேட்டையாடப்பட்டு சாகின்றனர். கை கட்டி நின்று கொண்டு ஏதும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்திக்கிறீர்களா?. அதுவும் நம்மருகிலேயே அதுவும் நம் இனமாய் இருக்கும் பலரும் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ நேரிடும் கொடுமைகளை கண்டிருக்கிறீர்களா? . என்னவாக இருக்கும் உங்கள் நிலை. அதிலும் கொலை செய்யும் எதிரணியில் இருந்து கொண்டு அதை கண்கூடாக கண்டும் ஏதும் செய்ய இயலாமல் கையறு நிலையில் , செத்து மடியும் மக்களின் கதறலுக்கு நடுவில் நீங்கள் மட்டும் நிம்மதியாய் ஒரு நல்ல வாழ்க்கையை நிம்மதியாய் வாழ்ந்து விட முடியுமா?
GENOCIDE ! இந்த வார்த்தை சமீபகாலமாய்த்தான் நமக்கெல்லாம் பரிச்சயமாகியிருக்கக் கூடும். மேற்ச்சொன்ன பலதும் அப்படியே. ஒரு நாடே தனது மக்களை கொன்று குவிக்கிறது. ஒரு இனத்தின் கடைசி உயிர் வரை அனைவரையும் அழித்துவிடத்துடிக்கிறது. அங்கே ஒருவன் தனிமனிதன் குறைந்தபட்சம் தன்னிடம் தஞ்சமடைந்த சிலரையாவது காக்கத்துடிக்கிறான். அவனிடம் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்து இருபதல்ல. 1200 பேர். அவர்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்யும் தனது கொலை பாதக அரசிடமிருந்து காக்கவேண்டும். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க அவன் தயாராயிருக்கிறான்.
இதற்கெல்லாம் முன் , அவனும் மகிழ்ச்சியாக தனது தொழிலை பார்த்துக்கொண்டு , லஞ்சமும் ஊழலும் மலிந்து போன அந்நாட்டில் ஒரு பிரஜையாய் , ஆளும் பெரும்பான்மை இனத்தில் ஒருவனாய் இருந்தவன். தான் பணிபுரியும் அந்த பிரபல ஹோட்டலின் தேவைக்காக பீர் வாங்க ஒரிடத்திற்கு செல்கிறான். அங்கே பீர் கொண்டு வரும் பெரிய கன்டெய்னர்களில் உயிர் பறிக்கும் ஆயுதங்களை காண நேர்கிறது. அதிர்ந்து போகிறான். அந்நிறுவனத்தின் முதலாளியோ தன் பணியாளிடம் மிகச்சாதரணமாக அதை எடுத்து மறைத்து வைக்கச்சொல்கிறான். ஒரு நாடு தன்னாட்டின் ஒரு பகுதியான தன் பிரஜைகளை வேறு இனம் என்கிற ஒரே காரணத்திற்காக தொடங்க இருக்கும் இன அழிப்பிற்கான முன்னேற்பாடு அது என்பதை உணர்ந்து கொள்கிறான்.
ஹோட்டல் ருவாண்டா ( HOTEL RWANDA ) திரைப்படம் இப்படித்தான் துவங்குகிறது.
ரேடியோவில் ஒரு காட்டமான குரல். டூட்சி (TUTSI) இனத்தவர்கள் கரப்பான் பூச்சிகளைப்போன்றவர்கள் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களது கடைசி உயிர்வரை அழிப்போம். இந்நாட்டிக்கு பிடித்த கேடு இந்த கரப்பான் பூச்சிகள் என்று அந்த குரல் அடிவயிற்றிலிருந்து கத்தி கத்திச் சொல்கிறது. அந்த இனத்தவரை கரப்பானைத்தான் அந்த அரசும் மக்களும் மதித்தனர்.
அந்நாட்டில் இரண்டு பிரிவினர். டூட்சி இனத்தவர்கள் ஒரு சாரர். ஹூட்டு (HUTU) இனத்தவர்கள் ஒரு சாரர். அவர்களது உடலமைப்பையும் மூக்கின் நீளத்தையும் கொண்டு பெல்ஜிய காலனியாதிக்க காலத்தில் இரண்டு பிரிவாய் பிரிக்கப்பட்டிருந்தனர். காலனியாதிக்க காலத்தில் டூட்சி இனத்தவரிடம் இருந்த ஆட்சியை பெல்ஜியம் அந்நாட்டிற்கு விடுதலையளித்து விலகும் போது ஹூட்டு இனத்தவரிடம் அளித்துச் சென்றது. இப்படித்தான் ஆரம்பித்தது அந்நாட்டில் உள்நாட்டுப்போர். டூட்சி இனத்தவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். ஹூட்டு இனத்தவர் ஆட்சி அதிகாரத்திலும் டூட்சி இனத்தவரை விலக்கி வைக்கின்றனர்.
டூட்சி இனத்தவரின் விடுதலைக்காக ஒரு போராளி அமைப்பு போராட முற்படுகிறது. அந்த அமைப்புடன் ஆளும் இனம் போர் புரிகிறது. ஐ.நாவின் வற்புறுத்தலின் பேரில் இறுதியாக ஒரு அமைதி உடன்படிக்கைக்கு அந்நாட்டு அதிபர் சம்மதிக்கிறார். அந்த போராளி அமைப்பும் சம்மதிக்கிறது.
அவன் பெயர் பால் ( PAUL ) . ருவாண்டாவில்(RWANDA) இருக்கும் ஹோட்டல் ருவாண்டா என்னும் பெல்ஜிய நாட்டின் மதிப்பு வாய்ந்த ஹோட்டலின் மேலாளர் அவன். அவன் ஹூட்டு இனத்தைச் சேர்ந்தவன். ஒரு டூட்சி இனத்தவளை மணமுடித்திருந்தான். இரண்டு குழந்தைகள். அவனது ஹோட்டலில்தான் ஐ.நாவைச் சேர்ந்த அனைத்து முக்கியஸ்தர்களும் தங்கியிருந்தனர்.
நாளை சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகிவிடும். அன்றிரவு வீட்டிற்கு செல்கிறான். தன் குடும்பத்தாரோடு குதூகலமாய் பொழுதைக் கழிக்கிறான். பக்கத்து வீட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்க வெளியே வந்து பார்க்கின்றனர். அவனது அண்டை வீட்டாரான விக்டர் என்பவனை நடு ரோட்டில் அடித்து துவைத்துக்கொண்டிருக்கின்றனர் இராணுவத்தினர். தனது கேட்டின் ஒரமாய் நின்று பார்க்கிறான். சிப்பாய் ஒருவன் ''நீ போராளிகளின் உளவாளிதானே.. எங்கடா அவனுங்க ஆயுதங்கள ஒளிச்சி வச்சிருக்கானுங்க.. சொல்லுடா சொல்லுடா.. '' என அப்பாவியான அவனை அடித்து துவைக்கின்றனர். அவனது அலறல் பால் ஐ ஏதோ செய்ய வீட்டிற்குள் மௌனமாய் மனைவியோடு நுழைகிறான். தன் மனைவியிடம் தான் லஞ்சம் கொடுத்து பல அதிகாரிகளையும் கையில் வைத்திருப்பதாகவும் தனக்கு இது போன்றதொரு நிலை வராது எனவும் தைரியம் கூறுகிறான். மனைவி கதறி அழுகிறாள். விக்டர் ரொம்ப நல்லவன் என்று திரும்ப திரும்ப கூறுகிறாள்.
அடுத்த நாள் சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகிறது. மிகுந்த மகிழ்ச்சியடைகிறான். அவனது மனைவியின் அண்ணன் இவனிடம் பயந்தபடி பேசுகிறான். அவர்கள் நம்மை மொத்தமாய் அழிக்கப்பார்க்கிறார்கள் என்று. இவன் ஆறுதலாய் பேசி அவனை அனுப்பி வைக்கிறான்.
இவன் வீட்டிற்கு செல்வதற்குள் கலவரம் ஒன்று தொடங்கிவிடுகிறது. அவன் புரியாது வீட்டிற்கு வருகிறான். வீட்டில் அடைக்கலமாய் ஒரு இருபது பேர் வந்திருக்கின்றனர். இவன் புரியாமல் என்னவென்று கேட்கிறான். ''அதிபர் சென்ற விமானத்தை யாரோ சுட்டு வீழ்த்தி விட்டனராம் அதில் அதிபர் மரணமடைந்தார் என செய்தி வந்திருப்பதாகவும் அதனால் கோபமடைந்த ஹூட்டு இன மக்கள் டூட்சி இன மக்களின் வீடுகளை எரிப்பதாகவும் அவர்களை நடு ரோட்டில் போட்டு வெட்டிக்கொல்வதாகவும் தெரிவிக்கின்றனர். அதிர்ச்சி.
விடிகிறது. வீட்டிற்குள் இராணுவம். அவர்கள் யார் என கேட்கிறது. அவர்கள் தனது விருந்தினர் எனக் கூறி சமாளிக்கிறான். இராணுவ தலைமையதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கிறான் அவர்களை கொல்லாமல் இருக்கு. அவர்களை அழைத்துக்கொண்டு ஹோட்டலில் தஞ்சமடைகிறான். அங்கே ஐ.நா சபையின் அமைதிப்படைத்தலைவர் பேட்டி தந்துகொண்டிருக்கிறார். ''நாங்கள் அமைதியை காக்கவே வந்திருக்கிறோம்! அமைதியை கொணர அல்ல! '' இவனுக்கு மேலும் அதிர்ச்சி. அனைவரையும் அந்த ஹோட்டலில் தங்க வைக்கிறான்.
நாடு முழுவதும் நடுரோட்டில் வைத்து மக்கள் வெட்டிக் கொல்லப்படுகின்றனர். இராணுவமும் சுட்டுக்கொல்கிறது. அதற்குள் ஹோட்டலில் மேலும் மேலும் பலரும் தஞ்சமடைகின்றனர். எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது. அங்கே இருக்கும் பத்திரிக்கையாளரையும் ஐ.நா உறுப்பினர்களையும் ஹோட்டலை விட்டு வெளியே செல்ல இராணுவம் தடை விதிக்கிறது. வெளியே என்ன நடக்கிறது என்பது உலகிற்கு தெரியாமலே போகிறது.
அந்நாட்டின் இராணுவமே அவர்களை அழிக்கத்தயாராய் இருக்கையில் யாரால் அவர்களை காக்க முடியும். உலக நாடுகளின் தலையீட்டுக்காய் காத்திருக்கின்றனர். பிரான்சிலிருந்து படைகள் குவிகிறது. மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். ஆனால் அவர்களும் இங்கிருக்கும் ஐ.நா உறுப்பினர்களையும் பத்திரிக்கையாளர்களையும் அழைத்துச்செல்லவே வந்ததாக தெரிகிறது.
அவர்களும் அங்கிருந்து செல்கின்றனர். இராணுவமும் , ஆயுதங்களோடு டூட்சி மக்களை அழிக்கக் காத்திருக்கும் மக்களுமாய் வெளியில் அலைய , இந்த ஆயிரம் பேரையும் எப்படி காப்பது?
இப்படித்தான் செல்கிறது ஹோட்டல் ருவாண்டா திரைப்படம். படம் பார்த்து முடிக்கையில் வெறும் மௌனம் மட்டுமே பார்ப்பவர் மனதில் நிறைந்திருக்கும்.
படத்தின் ஒரு காட்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஹோட்டலுக்கு வெளியில் நடக்கும் அக்கிரமங்களை படம் பிடித்து வந்து அதை தனது சேனலில் ஒளிபரப்ப சொல்கிறார். அதை பார்க்கும் பால் அவனிடம் வந்து நன்றி கூறுகிறான்.அந்த பத்திரிக்கையாளன் அதீத போதையில் ''இந்த வீடியோவால என்ன நடந்துரும்னு நினைக்கிற.. நைட்டு எல்லாரும் டிவில இதை பார்த்துட்டு , ஐயோ பாவம்னு உச் கொட்டிட்டு சோறு திங்க போயிருவானுங்க.. ஒரு மயிறும் புடுங்க முடியாது என சொல்லி அழுகிறான்.
அதே போல இன்னொரு காட்சியில் உலக நாடுகள் இந்த பிரச்சனையில் தலையிடுவதால் அவர்களுக்கு ஒரு ஓட்டுக்கு கூட லாபம் கிடையாது என்கிறான்.
செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த ஒரு பெண் ''அங்கே ஒரு பெண் இனிமேல் நான் எப்போதும் டூட்சியாய் இருக்க மாட்டேன் நான் ஹூட்டுவுக்கு அடிமை என மான்றாடியும் அவளை நிர்வாணமாக்கி நடு ரோட்டில் வைத்து பலரும் வன்புணர்ச்சியில் ஈடுபட்டனர் '' என அழுத படி தெரிவிக்கையிலும் , ஒரு அகதி ''அவர்கள் முதலில் குழந்தைகளைத்தான் தேடிக்கொல்கின்றனர்,.. நமது அடுத்த தலைமுறையே இனி இருக்காதோ என பயமாய் இருக்கிறது'' என பதறும் போதும்.. ஏனோ தலையில் இடி விழுந்ததுபோல் இருந்து தொலைக்கிறது.கண்களில் நீர். ஏனோ இந்த திரைப்படத்தை தற்கால சூழலில் ஒரு திரைப்படமாயும் அதில் வரும் பாத்திரங்களை நடிகர்களாயும் அது நடிப்பு என்றும் நினைத்து பார்க்க இயலவில்லை. நம் கண் முன்னே நிகழும் பெரும் படுகொலைகளுக்கு ஒரு மௌனசாட்சியாய் இருக்கின்ற நம் கையறுநிலை உறுத்தித்தொலைக்கிறது.
ஒரு காட்சியில் நாயகன் தனது இனத்தவனான ஒரு இராணுவ தலைவனிடம் கேட்கிறான் '' அந்த இனத்தை முழுவதுமாய் அழித்து விட முடியுமென நினைக்கிறாயா.. ''
''நாங்கள் அதில் ஏற்கனவே பாதி வெற்றியடைந்து விட்டோம்'' என சிரித்தபடி பதிலளிக்கிறான். அவனை பார்த்துவிட்டு அங்கிருந்து பிரதான சாலை வழியாக செல்ல.. வழியெங்கும் புகைமூட்டம்.. வழி தெரியவில்லை.. இவனது டிரைவர் மேடு பள்ளமான இடத்திற்கு நுழைவதாய் இவனக்கு படுகிறது.. வண்டி குலுங்குகிறது. வண்டியை நிறுத்த சொல்லி விட்டு புகையை விலக்கி சாலையை தேடுகிறான். சாலையெங்கும் பிணங்கள். வெட்டப்பட்டும் சுடப்பட்டும் கொத்து கொத்தாய் பிணங்கள். பார்க்கும் நமக்கு உடல் நடுங்குகிறது.
1994ல் ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இத்திரைப்படம். அது நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் வெளியானது. மிக குறுகிய வெளியீட்டில் வெளியிடப்பட்டு நல்ல வெற்றியை பெற்றது. மற்றபடி நடிப்பு இசை திரைக்கதை பற்றியெல்லாம் எழுதப்போவதில்லை. என்னால் அதன் தீர்க்கத்தையும் சிறப்பையும் கவனிக்கவோ ரசிக்கவோ முடியவில்லை. இதே திரைப்படத்தை போன வருடம் அல்லது ஆறு மாதம் முன்போ பார்த்திருந்தால் இத்தனை தாக்கம் இருந்திருக்குமா எனத்தெரியவில்லை.
இத்திரைப்படம் மூன்று பிரிவுகளின் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. (எதிலும் வெற்றிபெறவில்லை )
இப்படம் துவங்கும் போது நாயகனாக நடித்த அந்த நடிகர் திரையில் தோன்றி இத்திரைப்படத்தின் மூலம் வரும் வருவாய் ருவாண்டா இனப்படுகொலையில் பிழைத்தவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கிறார். ஆனால் இணையத்தில் அது குறித்து தேடுகையில் அவ்வாறு நடக்கவில்லை என்கிற மிக வருத்தமான செய்தியை காண நேர்ந்தது.
மற்றபடி அனைவரும் கட்டாயம் தற்கால சூழலில் பார்க்க வேண்டிய திரைப்படம். மிக முக்கியமாக GENOCIDE பற்றி தெரிந்து கொள்ள நிச்சயம் உதவும்.
*********
பின் குறிப்பு - உரையாடல் அமைப்பின் சார்பில் அடுத்த முறை திரையிட இந்த படத்தை பரிந்துரைக்கலாம்.