30 May 2009
தனிமனிதனுக்கு..!
நாம் அனுதினமும் எதையாவது எழுதுகிறோம் , ஆடுகிறோம், பாடுகிறோம் , ஓடுகிறோம் , கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறோம் புது வீடு வாங்குகிறோம் , காதலிக்கிறோம் , அழகு படுத்திக்கொள்கிறோம் , நல்லவனாய் காட்டிக்கொள்கிறோம் , அறிவி ஜீவித்தனமாய் பேச முற்படுகிறோம் , அது உடைந்து போகும் போது சத்தமாய் கூச்சலிட்டு கோபமடைகிறோம்...
எதற்காக?
மற்றவர் கவனம் பெற. அனைவரும் நம்மை மட்டுமே கவனிக்க வேண்டும். நம்மைப் பற்றியே சிலாகிக்க வேண்டும் . சிறந்தவையென்றால் என்னுடையது , நல்லது எல்லாம் நான் செய்தது . நான் நான் நான்.. அது மட்டுமே அல்லாமல் வேறெதும் நம்மை இயங்க வைப்பதில்லை. இந்த கவனம் பெறுதல்தான் எத்தனை கடினமானது.
யோசித்துப்பாருங்கள் நீங்கள் பிறந்ததிலிருந்து அனுதினமும் உலகமே உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கழிப்பறைக்கு செல்வதிலிருந்து கலவியில் ஈடுபடுவது வரை கவனித்தால் அதுவும் காட்சிப்பதிவுகளாய் உங்கள் வாழ்க்கை முழுக்கவுமே ஒரு நேரடி ஓளிபரப்பாய் பல ஆயிரம் கேமராக்களை உங்களுக்குத்தெரியாமல் உங்களைச்சுற்றி அமைத்துக்கொண்டு ஒரு தொலைக்காட்சி ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தால் அது குறித்த அறிவே இல்லாது நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்க ஒருநாள் உங்களை சுற்றி இருக்கும் வானம் முதல் கடல் , காதலி , வீடு அனைத்துமே ஒரு ஸ்டுடியோ செட் நீங்கள் வாழ்வது ஒரு மெகா சீரியலில் என்றும் தெரிந்தால்? உங்கள் இறுதி முடிவு என்னவாயிருக்கும். அதை இத்தனை ஆண்டுகளாய் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மனநிலை என்னவாய் இருக்கும்..
TRUMAN SHOW .. அதுதான் அந்த திரைப்படத்தின் பெயர்.
ஜிம் கேரியை நாம் எல்லோருக்குமே நிச்சயம் தெரிந்திருக்கும். தனது மாஸ்க் எனும் திரைப்படத்தால் உலக அளவில் புகழ் பெற்றவர். தனது கோமாளித்தனமான முகப்பாவங்களாலும் உடல் மொழியாலும் அசத்துகிற சிரிப்பு நடிகர் அவர். நமக்கெல்லாம் மிகப்பிடித்த ஒரு காமெடி நடிகர். ஆனால் அவரது இன்னொரு மிகப்பிரமாண்டமான நடிப்புத்திறனால் ட்ரூ மேன் என்னும் அந்த பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் ஜிம்கேரி.
ட்ரூமேன் அவன் பெயர். அன்றாடம் இயந்திரமாய் ஒரே மாதிரியான ஒரு அன்னியன் திரைப்பட அம்பியைப் போன்ற வாழ்க்கையை வாழ்கிறவன். அவனுக்கு ஒரு காதலி ஒரு நண்பன் ஒரு அலுவலகம் ஒரு அம்மா என ஒரு சிறிய உலகத்தில் வாழ்பவன். தனது தந்தையோடு சிறிய வயதில் போட்டில் செல்லும் போது அவர் கடலில் விழுந்து உயிர்விட அதைக்கண்டு தண்ணீரைக்கண்டாலே பயந்துவிடும் வியாதிக்கு ஆளாகியிருக்கிறான். இவன் உலகத்திலிருந்து விலகி உருவாக்கப்பட்ட ஒரு தீவில் வசிப்பவனாய் இருக்கிறான். வாழ்வில் ஒரு முறை கூட அவன் அந்த தீவை விட்டு வெளியுலகிற்கு சென்றதில்லை. காரணம் அந்த தண்ணீர் பயம்.
ஒரு கட்டத்தில் தனது தந்தை உயிரோடு செல்வதை அவன் சாலையில் காண நேரிடுகிறது. அதிர்ச்சியடைந்து அவரிடம் பேச ஆரம்பிக்கிறான். யாரோ சிலர் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்வதைக்காண்கிறான். தனது அம்மாவிடம் பேசுகிறான. அவள் அடித்துக்கூறுகிறாள். அவனுக்கு அவனது வாழ்க்கை குறித்தே கேள்வியெழுகிறது. ... அதன் பின் நடக்கும் சம்பவங்களும் தான் ஒரு டி.வி ஷோவில் ஒரு பாத்திரமாய் வாழ்ந்து வருவதையும் எப்படி கண்டுபிடிக்கிறான் அதை எப்படி எடுத்துக்கொண்டு முடிவில் என்ன செய்கிறான் என்பது மீதிக்கதை.
நாம் அனைவருமே ஏதோ ஒரு நாடகத்தின் ஏதோ ஒரு பாத்திரத்தில் யார் போதைக்கோ ஊருகாயகத்தான் இருக்க நேரிடுகிறது. அதை எப்போதும் நாம் அறிவதில்லை. இதோ இந்த விமர்சனம் நான் யாருக்காக எதற்காக எழுதுகிறேன் என எனக்கு தெரிந்து விட்டால் , நாளை முதல் எழுதுவதை நிறுத்திவட நேரிடலாம். நம்மை இயக்குவதே அந்த கேள்விதான். அந்த ஒரு கேள்வியை வைத்துக்கொண்டு மிக அருமையான ஒரு இரண்டு மணிநேர கதையை புனைந்த இயக்குனருக்கு சபாஷ்,
படம் முழுக்க இசைக்கப்படும் அந்த தீம் மியுசிக் கிளைமாக்ஸில் உச்சமடைவது , ஆண்டவனே தயவு செய்து எதையாவது செய்து அந்த குழந்தையை காப்பாற்றிவிடு என நம் மனங்களை மன்றாடச்செய்யும்.
இருத்தலியல் என்கிற ஒற்றை வார்த்தைக்கான பொருள் தேடி அலையும் ஒரு நதியின் பயணமாய் படம் ஜிம்கேரியின் இயல்பான நடிப்போடு பயணிக்கிறது.
1998ல் வெளியான இத்திரைப்படம் சைக்கலாஜிக்கல் சைன்ஸ் பிக்ஸன் வகையில் பிரிக்கப்படுகிறது. ரியாலிட்டி ஷோக்கள் குறித்தும் அதன் மீதான மக்களின் பேரார்வம் குறித்தும் ஆராய்ந்து செல்லும் இப்படம் அதன் கறுப்புப்பக்கங்களை பார்வையாளனுக்கு தெளிவாக்கிச்செல்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தன்னை சுற்றியிருக்கும் குடும்பம் குட்டி குழந்தை என எல்லாவற்றையும் விட்டொழித்துவிட்டு சுதந்திரமாய் தனிமையில் எங்காவது சென்று விடத்துடிக்கும் எண்ணத்தில் கட்டாயம் இருப்பான். அப்படி ஒரு மனநிலையில் வெளிப்பாடாகவும் இத்திரைப்படத்தின் கதை அமைவதாக ஒரு சாரர் கருதுகின்றனர்.
சென்ற வாரத்தில் எங்கோ எதிலோ இப்படம் குறித்து இரண்டு வரி படித்ததிலிருந்து பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலில் பல நாட்களாய் இதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிந்தேன். இப்படத்தின் சிடிக்காக நேற்று பர்மா பஜாரின் ஒவ்வொரு கடையில் அலைந்து திரிந்து தேடிக்கண்டுபிடித்து இரவோடு இரவாக பார்த்ததும்தான் நிம்மதியாய் இருந்தது. அதிலும் அந்த ஓற்றை படகு கிளைமாக்ஸ் கண்களில் ஆனந்தக்கண்ணீர். கட்டாயம் பாருங்க மிஸ் பண்ணிடாதீங்க..
உண்மையாவே படத்திற்கு TRUMAN SHOW னு மிகச்சரியாகத்தான் பெயர்வைத்திருக்கின்றனர்.