Pages

28 May 2009

வா........ரம்........மா.........தம் ...




அப்பாடா ஒரு வழியாய் ராஜபக்சே போர் நிறுத்தம் அறிவித்து விட்டான். இனிமேல் யாரும் தமிழகத்தில் உண்ணாவிரதம் இருக்கிறேன் என கபட நாடகம் ஆடமுடியாது. நான் இராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத்தருவேன் என உட்டாலக்கடியாய் அறிக்கை விட முடியாது. ரத்தம் கொதிக்க மைக்கதிர பேச முடியாது. இனி கலைஞர் சென்டிமென்ட் அறிக்கைகளை சினிமாவிற்கு உபயோகிக்கலாம் ( பாச எலிகள் , புண்ணின் பூனைகள் , etc etc ) . ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் இரண்டு ஆண்டுகள் ஓய்வெடுக்கலாம். வைகோ ராமு திருமா போன்றோர் கூட்டணிகள் மாறுவது எப்படி என ஒரு புத்தகம் எழுதலாம். தமிழக அரசியல் வாதிகளே எப்படியோ போரை நிறுத்திட்டீங்க வாழ்த்துக்கள். (தூ.....).

அப்பாடா ஒரு வழியா ஐபிஎல் முடிந்துவிட்டது. இம்முறை எதிர்பார்த்ததைப்போலவே ஒரு அன்டர்டாக்(UNDERDOG) அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டது.இனி அவரவர் வேலையை ஒழுங்காக பார்க்கலாம். மற்றபடி இந்த மூன்று மணிநேர முழு மசாலா கிரிக்கெட் ஆட்டம் பற்றி பெரியதாய் சொல்ல ஏதுமில்லை. நிறைய கவர்ச்சி ,அதிரடி ஆக்சன் , மகா மட்டமான சென்டிமென்ட் , குத்தாட்டம் , ஜட்டி தெரிய ஆடும் , சாரி , ஜட்டியோடு ஆடும் இளம் பெண்கள் இதற்கு மேல் ஒரு மசாலா படத்திற்கு என்ன வேண்டும்.ஒரு மசாலா திருவிழாவையே நடத்திக்காட்டியிருக்கிறார் லலித் மோடி . பந்து பேட் ஸ்டம்ப் மட்டுமே விளையாடிய கிரிக்கெட்டில் பணம் பாலியல் பவர் என அனைத்தையும் ஆட வைத்த பெருமையும் அவரையே சாரும். தென்னாப்பிரிக்காவில் நடத்தினாலும் இந்தியன் பிரிமீயர் லீக் என்னும் பெயரை மற்றும் மாற்றாத லலித் மோடிக்கு என் வாழ்த்துக்கள்.

அப்பாடா ஒரு வழியா தேர்தல் முடிந்து சீட்டு பேரம் முடிந்து இப்போது இலாகா பேரம் தீவிரமடைந்து இருக்கிறது (இதை எழுதி முடிக்கும் போது அதுவும் முடிந்திருக்கலாம் ) . கலைஞரும் டெல்லி வரை சென்று போராடி வெறுத்துப்போய் ரிப்பீட்டடித்து பல டகால்ட்டி வேலைகள் செய்து ஒரு வழியாய் தனது பேரத்தை கச்சிதமாய் முடித்துவிட்டார். இறுதி வரை போராடி கத்தியின்றி ரத்தமின்றி வெற்றிபெற்று தனது ஒரே குடும்பமான திமுகவின் செல்வங்களுக்கு பெற்றுத்தந்த பதவிகளுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவிலேயே தமிழகத்திற்குதான் அதிக பதவிகளாம் கலைஞருக்கு வாழ்த்துக்கள். (இனி தமிழகம்தான் நம்பர் ஓன். )

அப்பாடா ஒரு வழியா முடிவு அறிவிச்சிட்டாங்க. ஆமாங்க ஜெயாடிவியில் நான் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ். அதில் வரும் குட்டீஸ் அனைவருமே கலக்கல் பேர்வழிகள். அவர்களது இயல்பான பாட்டும் டேன்ஸும் சூப்பர் என்றால் அவர்களது உடல்மொழி பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கும்.என்ன எலிமினேசன் ஒன்றுதான் மனச்சங்கடத்தை உண்டாக்குகிற ஒரே நிகழ்வு. மற்ற தொ.கா.களில் வரும் வலிந்து திணித்த குழந்தைகள் நிகழ்ச்சிகளோடு ஒப்பிடும் போது இது தனித்தே தெரிகிறது. அந்த நிகழ்ச்சி கடந்த வாரத்தில் முடிந்தது. நிகழ்ச்சியின் மிக முக்கியமானவர்கள் நடுவர்கள் ராகவ் மற்றும் பிரித்வி அப்புறம் மிர்ச்சி பாலாஜி ( இப்போ பிக் பாலாஜி?) அவர்கள் குழந்தைகளிடம் மிக மென்மையாக நடந்து கொள்ளும் முறை அழகு ( மற்ற தொலைக்காட்சிகள் போல அவர்களை அழவைத்து காசு பார்ப்பதெல்லாம் இல்லை ) . அவர்களுக்கும் வெற்றிப்பெற்ற குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.

அப்பாடா ஒரு வழியா சாருவும் ஜெமோவும் ராசி ஆகிட்டாங்க. இனி உலகம் அழிஞ்சுரும். சாருநிவேதிதா இரண்டொரு நாட்களுக்கு முன் '' வன்முறையின் தோல்வி'' என்றொரு பதிவிட்டிருந்தார். அந்த கட்டுரை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கக்கூடும். அந்த கட்டுரையை படித்து நான் பயந்தே போய்விட்டேன் சாரு சரக்கடித்துவிட்டு எழுதுவார் என்பது தெரியும் அந்த கட்டுரை ஒருவேளை அடிக்காமல் எழுதிவிட்டாரோ என எண்ண வைத்தது. பயங்கரமான காந்தியவாதியைப்போல் எழுதப்பட்ட அந்த கட்டுரையை படித்தால் , விட்டால் தலையில் குல்லாவோடு ராகுல் காந்தியின் யூத் காங்கிரஸில் இணைந்து விடுவார் போல இருந்து. நல்ல வேளை . காங்கிரஸ் புழைச்சது காந்தியோட புண்ணியம். நல்ல வேளை சாரு மீண்டும் சரக்கடித்து ஃபார்முக்கு வந்திருக்க கூடும். எழுத்துலகில் அவரது பரம எதிரியாக அறியப்படும் ஜெயமோகன் அந்த கட்டுரையை பாராட்டி தனது வலைத்தளத்தில் ஒரு கட்டுரை ( சாருவுக்கு ஒரு கடிதம் ) எழுதி இருக்கிறார். தன் கருத்தை அப்படியே சாருவும் எழுதியிருப்பதாக குறிப்பிட்டிருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள். ( ஸ்ஸ்ப்பா எழுத்துலயும் பிக்ஸிங்கா... முடியல )

அப்பாடா ஒரு வழியா இன்னொரு கதைப்போட்டி வந்திருச்சு. பைத்தியக்காரன் என்று பதிவுலகில் அறியப்படும் என் பாசமிகு அண்ணன் சிவராமன் அவர்களும் மை ஆல்டைம் செல்லம் அண்ணன் பாலபாரதியும் மேலும் சில பதிவர்களும் இணைந்து உரையாடல் என்னும் சிறுகதைப்போட்டி ஏற்பாடு செய்திருக்கின்றனர். அனைத்து பதிவர்களும் தவறாமல் கலந்து கொண்டு பரிசு பெற வேண்டும். மேலும் விபரங்களுக்கு இடதுபுறத்தில் இருக்கும் கையில் பேனாவுடன் இருக்கும் ஜூஜூ பொம்மையை கிளிக்குங்கள். போட்டியை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அப்பாடா ஒரு வழியா லக்கிலுக் ஒரு வயோதிகர் என்பது வாலிப பதிவர்களுக்கு இப்போதாவது தெரிந்ததே என்பதில் பெரும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. தண்ணிக்குள்ள காத்துவிட்டா வெளிய ஒரு நாள் வந்துதான ஆகணும். மற்றபடி குட்டிப்பாப்பாவுக்கும் அவங்க பேரன்ட்ஸ்க்கும் வாழ்த்துக்கள்.

அப்பாடா ஒருவழியா ஒரு மாசமா வறுத்து எடுத்துட்டு இருந்த கத்திரி வெயில் இன்றைக்கு முடியுது. ஒரு மாதமாய் மூன்று முறை லூஸ் மோசன் (மோகன் இல்லை ) , டிஹைட்ரேசன் , காய்ச்சல் , தலைவலி என பலபல வியாதிகளை சீரிய இடைவெளியில் கொடுத்து உயிரை பறித்து விடுமளவுக்கு கொடுமைப்படுத்திய கத்திரி வெயிலுக்கு வாழ்த்துக்கள். ( வெயிலுக்கே வாழ்த்து சொல்லி ஐஸ் வைப்போம்ல )

அடுத்த மாதம் ( ஜீன் )- 11 ஆம் தேதி கோவையில் ??????? என்ன?

காத்திருங்கள்.

***************

தலைப்பு உதவி - ரமேஷ் வைத்யா