Pages

23 April 2009

சந்தித்தவேளையும் சரக்கடித்த லீலையும்...!



தமிழகத்தில் அண்ணாச்சிகள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் பிரபலமாய் இருப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். என் தெரு முனை அண்ணாச்சிகடை அண்ணாச்சியிடமிருந்தே துவங்குகிறேனே!. அடுத்து திருமங்கலம் இடைத்தேர்தலில் எழுநூறு ஓட்டுக்கள் வாங்கி சாதித்த ஒரு அண்ணாச்சி இருக்கிறார்.அவரைப்பற்றியல்ல.. துணிக்கடை அண்ணாச்சி ஒருவர். இட்லிக்கடை அண்ணாச்சி ஒருவர். சோறு போட்டு கல்வி கொடுத்த அண்ணாச்சி ஒருவர். படித்து முடித்த இளைஞருக்கு வேலை வாங்கித்தரும் அண்ணாச்சி ஒருவர். அண்ணாச்சிகள் வரலாற்றில் மிகமுக்கியமான இடத்தை வகிப்பவர்கள். இங்கே சாதீய அடிப்படையில் இதை சொல்லவில்லை. எங்கள் தெருவில் கடை வைத்திருக்கும் அண்ணாச்சி ஒரு மலையாளி என்பதே இதற்கான சாட்சி.

எதற்கு இவன் அண்ணாச்சிகளின் புகழ் பாடுகிறான். இப்போது என்ன வந்துவிட்டது அண்ணாச்சிகளுக்கு! எதற்காக அண்ணாச்சிகளை இழுக்கிறாய் நீயும் ''எங்கே அண்ணாச்சி'' என்று ஏதேனும் தொடர் எழுதப்போகிறாயா என்றெல்லாம் எண்ணங்கள் எழக்கூடும். இது அதற்கல்ல . அரபு நாட்டில் அப்படி ஒரு அண்ணாச்சி இருக்கிறார். அவரை முதல் முதலாக சந்தித்தது சென்னை தி நகர் பனகல் பார்க்கில்தான். மிக சுவாரஸ்யமானவர். பல அஜால் குஜால் கதைகளையும் அதி அற்புதமான கவிதைகளையும் ( கவிதைகளில் அஜால் குஜால் இருப்பதே இல்லை) வைத்திருப்பவர். பழக இனியவர். இதற்கு மேல் புகழ்ந்தால் கெட்ட வார்த்தைகளில் வசை பாடுபவர். மூத்த , பிரபல, பீத்த , பீதாம்பர என்று எந்த அடைமொழியில் அழைத்தாலும் அவரும் ஒரு பதிவர்.

அவர்.......... ஆசீப் அண்ணாச்சி... ( ஓகே ஓகே கைத்தட்டினது போதும். கூல் டவுன் மக்களே அவருக்கு அதுலாம் புடிக்காது.. அடிப்பாரு)

அவர் தன் பாசமிகு பதிவுல தம்பிகளைக் காண அரபு நாட்டில் இருந்து பறந்தோடி வருவதாய் பட்சி சொல்லவில்லை என் பாசமிகு அண்ணன் பாலபாரதி சொல்லுகிறார்.

அதனால் என்ன?

இந்த வாரம் சனிக்கிழமை பதிவர் சந்திப்பு மக்கா எல்லாரும் ஒழுங்கா வந்து சேருங்க..

இடம் - சேம் பிளேஸ்தான் - காந்திசிலை தண்ணீர் இல்லாத குட்டை

டயம் - ஈவ்னிங் 5.30 லருந்து

என்னைக்கு - இதோ வர சனிக்கிழமை! ஏன்ப்பா சனிக்கிழம என்னப்பா தேதி 25-04-2009

ஆசிப் அண்ணன் எல்லாருக்கும் தன் கையாலே கரப்பான்பூச்சி விருதும் , அதைத்தொடர்ந்து சரக்கும் சைடிஷும் வாங்கிக்கொடுத்து தன் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்.

( சரக்கு என்றால் டீ - சைட் டிஷ் என்றால் வடை அல்லது பதிவர்சந்திப்பு புகழ் போண்டா என்று பிகினி சித்தர் ஏழாம் நூற்றாண்டில் பாடிச்சென்றதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே)


*******************

சரக்கென்றதும் டக் கென உங்களுக்கு என்ன ஞாபகம் வரும். எனக்கு முதலில் வருவது வாந்தி. அடுத்து சாருநிவேதிதா. போதைக்கே புதிய பரிமாணத்தை தன் எழுத்துக்களின் மூலம் தந்தவர். தந்துகொண்டிருப்பவர். எத்தனையோ பேர் அவரை சாடினாலும் இகழ்ந்தாலும் காரித்துப்பினாலும் அவரது இணையதளத்தில் தினமும் வாசிக்கத் தவறுவதே இல்லை. நானும் அப்படித்தான். இணையத்தில் இயங்குகிற பெரும்பாலானோர் அப்படித்தான். பாவம் மனிதர் என்ன கஷ்டமோ என்னவோ தன் புத்தகங்களை குறைந்த விலையில் கூவி கூவி விற்கிறார். ஓசியில் நோகாமல் படிக்கும் பலருக்கும் காசு கொடுத்து புத்தகம் வாங்க வேப்பங்காயாய் கசக்கிறது. நானும் அப்படித்தான். என்னால் ஆயிரம் ரூபாய்கள் செலவளித்து அந்த புத்தகங்களை வாங்கி அவருக்கு உதவ முடியாதே! நான் அவரைவிடவும் உலகமகா ஏழை. அது உலகுக்கே தெரியும். இருந்தாலும் சாருவின் மீது அவர் பணக்கார நண்பர்களோடு மட்டுமே பழகுவார் என்கிற ஒரு விமர்சனம் இருக்கிறது. அது யாரோ சிலபல உத்தமதமிழ் எழுத்தாளர்கள் கிளப்பிவிட்ட வதந்தியாக இருக்கக்கூடும். அவரது நண்பரான நான் ஒரு பரம ஏழை, அவரைக்காட்டிலும்!. அதனால்.....

என் கம்பேனி தந்த கம்யூட்டரில் , என் கம்பேனி தந்த இன்டர்நெட் கன்க்சனில் இந்த பதிவிற்கு நடுவே நம் நண்பர் சாருநிவேதிதாவுக்காக ஒரு குட்டி விளம்பரம்.

மிகசமீபத்தில் வெளியான அவரது பத்து புத்தகங்கள் மலிவு விலையில் நமது வாசகர்களுக்காக.. வாங்கி படிங்க நண்பர்களே..

இங்கே முழுவிபரமும்.


****************

ஏப்ரல் மாதம் 23 ஆம் தியதி உலக புத்தக தினம். நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் அதைக்குறித்து தெரிந்து கொள்வது நல்லதில்லையா!. இது குறித்து எனக்கும் நேற்றுவரை தெரிந்திருக்கவில்லை. வலைச்சரத்தில் எழுதிவரும் பிரியமுடன் பிரபுவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி நண்பா!.

இந்த தினம் குறித்த மேலதிக விளம்பரங்களுக்கு http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

அடத் தமிழிலேயே விக்கியில்! இதுகுறித்து பதிந்த அந்த தமிழருக்கு நன்றிகள்..

****************

அடச்சே! தமிழரின் மானத்தையே வாங்கிவிட்டார்கள். தமிழனுக்கு இப்படி ஒரு கொடுமை நேருவது இதுவே முதல் முறை. என்ன கொடுமை இது. நகத்தைக்கடித்துக் கொண்டு நேற்று டிவியை பார்த்து அப்படியே ஷாக்காய்ட்டேன்.

ஹைடன் என்ன அடி அடித்தார். அவர் அடித்த அடிக்கு எத்தனை சுலபமாய் வெற்றி பெற்றிருக்கலாம். சேசே தமிழன் மானம் சந்தி சிரிக்கிறது. இவர்களெல்லாம் தமிழர்களா.. கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா.. பொறுப்பு இருக்கிறதா..

டெல்லி ஒரு மொக்கை அணி. முழு பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமால் தமிழரின் மானம் பறிபோகிறதே என்கிற அக்கறை சிறிதும் இன்றி ஆடினர். அதிலும் மிக எளிதாக நாம் ஜெயித்துவிடவேண்டிய ஒரு மேட்சை தனது அக்கறையில்லாத ஆட்டத்தால் தோற்றுப்போனது கண்டு மனம் வெதும்பினேன். அதையே மதுரையே சேர்ந்த ஒரு இளைஞரும் மைதானத்தில் கூறினார். நன்றி செட் மாக்ஸ்.

பார்க்கும் போது மனம் வெடித்தது. இதயம் பொங்கியது. கையிலிருக்கும் ரிமோட்டை உடைத்து விடலாம் என்று கூடத்தோன்றியது. என்ன செய்ய என் வீட்டு பிளாக் அண்ட் வொயிட் சாலிடேர் டிவிக்கு ரிமோட் கிடையாது. தீக்குளித்துவிடலாம் என்று கூடத் தோன்றியது. மண்ணென்ய் தீர்ந்துவிட்டது. அடுத்த மாதம்தான் கிடைக்குமாம். அதற்குள் இன்னும் தமிழன் மானத்தை எப்படியெல்லாம் வாங்கப்போகிறார்களோ..

அதனால் மனம் நொந்து வெந்து வெதும்பி ஒன்றும் செய்யாமல் தமிழரின் நிலைகண்டு அழுது புரண்டு கேடிவியில் போட்ட அண்ணாச்சி நடித்த ( திருமங்கலம் தேர்தல் புகழ் ) ஐயா படம் பார்த்து 9 மணிக்கே தூங்கி போனேன். நாளைக்கு டெல்லியில் இருந்து எனது மூத்த அதிகாரி (இந்திக்காரர் ) வருகிறார். என்னைத்தான் கடலில் தூக்கியெறிந்தாலும் கட்டுமரமாக மிதக்க வேண்டுமே.. விடியட்டும் பார்த்துக்கொள்வோம். இன்னும் பல ஆட்டங்கள் தமிழனுக்கு இருக்கிறது. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

********

அவன் பெயர் டக்ளஸ். எப்போதும் என்னை நெக்ஸ்ட் மீட் பண்ண துடிக்கும் துடிப்பான இளைஞன். எதையும் ஆராய்ச்சிப் பண்ணும் குறுகுறுப்பு. எது சொன்னாலும் ஏன் என்று கேட்கும் எனக்கு பிடித்த பதிவன். அவன் இவனென்று அவரை மரியாதையின்றி விளிப்பதை அவன் ஏற்றுக்கொள்வான் என்றே நினைக்கிறேன்.


நேற்று சாட்டில் பேசும் போது ஏன் இப்போதெல்லாம் எதிர்வீட்டு ஜன்னல் எழுதுவதில்லை என்றான். பதிவெழுத மேட்டரே இல்லையென்றால்தான் எ.வீ.ஜ எழுதுவேன் என்றேன். அவ்வளவு ஈஸியா அது என்றான். வேண்டுமானால் நீ ஒரு தலைப்பு கொடு அதை வைத்து எழுதித் தருகிறேன் என்றேன்.

இதோ இந்த பதிவு. போதுமா நண்பா ராம்ராஜ் என்கிற எனக்கு பிடித்த என் டக்ளஸ் தம்பி.


****************

அப்படியே அகில உலகத்திலும் சந்திரமண்டலத்திலும் இருக்கும் பல ஆயிரம் கோடி மக்களும் மக்களும் முப்பது முக்கோடி தேவர்களும் நாப்பது நாற்கோடி அசுரர்களும் மும்மூர்த்திகளும்

நம் வலைப்பதிவை படிக்கும் ஆறு கோடி தமிழ்மக்களும்

திருச்சியில் போட்டியிடும் எங்கள் அன்பு அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கும் , ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அண்ணன் வலையுலக புகழ் எட்டாவது வள்ளல் ஜே.கே.ஆர் அவர்களுக்கும் , வருங்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆக இருக்கும் அண்ணன் அழகிரி அவர்களுக்கும் உங்கள் பொன்னான வாக்குகளை போட்டு வெற்றிபெற செய்யுமாரு காலில் விழுந்து கதறி அழுது கேட்டுக்கொள்கிறேன். ( யோவ் நீங்க குடுத்த அறுபத்தியஞ்சு ரூவாவுக்கு இவ்ளோதான் கூவ முடியும்... இலவசமாய் கூவ பதிவுலகில் பல கோயிஞ்சாமிகள் இருக்கிறார்கள் அவர்களை அணுகவும்.)

*************

மேலே எழுதியிருந்த மொத்தத்தையும் படித்திருந்தால். மன்னிக்கவும் இன்னும் நான்கு நாட்களுக்கு நம் வலைப்பூ விடுமுறை. அதனால் நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒரே பதிவாக...

நேரடியாக கடைசி வரிக்கு வந்திருந்தால் இந்த பதிவையே நாள்தோறும் தினமும் ஒரு பாரா என்று படித்து அறிவை வளர்த்து வைகுண்டத்திற்கு செல்லலாம்.

நெக்ஸ்ட் மீட் பண்றேன்...