''அப்பா , நாம வேர்ல்ட் டூர் போயிட்டு வந்ததிலிருந்து ஏன் என்னோட சரியாவே பேசமாட்டேன்றீங்க'' கையில் தனது இரவு உணவை முகர்ந்துகொண்டே வினவினாள் அவள்.
''பிடிக்கலைமா.. அங்க போயிட்டுவந்ததிலிருந்து உன் போக்கே எனக்கு பிடிக்கலைமா'' மணிரத்னம் படபாணியில் பதில் சொன்னார் அப்பா தன் நீலக்கண்களை உருட்டியபடி.
''ஏன்ப்பா பிடிக்கலை, அவனுக்கு என்ன குறைச்சல் நல்லா மூக்கும் முளியுமா.. நல்ல கலரா.. உடம்புல எந்த குறைபாடும் இல்லாம நல்லாத்தானே இருக்கான்.. வேற என்ன எதிர்பார்க்கறீங்க''
''அவனும் அவன் பேச்சும் செயலும்... நம் இனம் குறித்த அவன் பார்வையும் சரியே இல்லமா.. நம்ம இனத்தை ரொம்ப கேவலமா நினைக்கிறான்.. அவனும் அவன் காதும் மூக்கும்..சகிக்கல''
''அப்பா இனம் என்னப்பா இனம் நாம எல்லாருக்கும் உயிர் ஒன்னுதானே, வெறும் உடம்பு அழகுதான் முக்கியமா?''
''ஆயிரம்தான் இருந்தாலும் அவன் அந்நியன்மா''
''அப்பா இதுக்கு பேரு காதல்னு அவன் சொன்னான்... அப்படி ஒன்னு இருப்பதையே அவன் சொல்லித்தானே எனக்கு தெரியும் . உண்மையான காதலை எனக்கு உணர்த்தினவன் அவன்தான்ப்பா.. என்னால அவன் இல்லாம வாழவே முடியாதுப்பா''
''காதலாம் காதல்.. அவன் இனத்திற்கு அப்படி ஒன்னு இருக்கறது தெரிஞ்சிருந்தா அழிஞ்சு போயிருக்க மாட்டாங்க''
''சரி விடுங்க நான் எவ்ளோ சொன்னாலும் கேக்கமாட்டீங்க , நான் வாழ்ந்தா அவனோடதான்ப்பா வாழ்வேன்.. இதுதான் என் இறுதி முடிவு''
''உனக்கு நம் இனத்தோட சட்டம் தெரியுமில்லை... அந்நியர்கள காதலிக்கவோ அவர்களோட உறவு வச்சுக்கவோ கூடாதுனு தெரியாதா?, அதுவுமில்லாம அவங்க இடத்தோட சீதோஷ்ண நிலை உனக்கு சரியாவராதுமா.. நீ செத்துடுவம்மா...புரிஞ்சுக்கோ''
''என் உயிரே போனாலும் எனக்கு கவலையில்லப்பா நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் . மனசும் மனசும் ஒன்னு சேர்ந்த பிறகு சட்டம்,வானிலையும் என்ன செஞ்சுடும்''
''வேற இனமா இருந்தாக் கூட நம்ம தலைவர் ஒத்துப்பாரு.. ஆனா அவன் இனம் மிக மோசமானது.. அவங்க கிரகத்தில ஓசோனில் ஓட்டை போட்டவங்க.. நீர்வளத்தை முழுசா வீணாக்கினவங்க.. அவனை நம் கிரகத்தில் கூட அனுமதிக்க முடியாதம்மா... அவர்களது நிலம் வெப்பமடைந்து உச்சமடைந்து விட்டது...இன்னும் கொஞ்சநாள்ல பூமிக்கிரகம் அழிஞ்சிரும்மா.. அது நாளைக்கே கூட நடக்கலாம்...''
''இதுக்கு மேல் ஏதும் பேசாதீங்கப்பா..நான் ஒரு விநாடியேனும் அவரோடு வாழ்ந்து மடிகிறேன்... நான் போகிறேன்''
T-LEXI என்னும் செவ்வாய்கிரகவாசியான அவள் நினைத்தமாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் டெலிடிரான்ஸ்போர்ட்டிங்ல் மிப்ளமோ பட்டம் பெற்றவள். உடனடியாக அதை பயன்படுத்தி பூமியில் இருக்கும் வினோவை நோக்கி தன் உடலை செலுத்தினாள்.
************************************************************************************
வெள்ளைக்கொசுவும் அதன் குசுவும்
தடதடதடதடதடதட ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அந்த விண்கலம் தட்டையாகவும் இல்லாமல், வட்டமாகவும் இல்லாமல் ஒரு அகோணமாக அதவாது உருவமென்று சொல்ல இயலாத ஒரு உடைந்து போன கல்லைப்போல சுழன்று கொண்டே தரையில் இறங்கியது. இறங்கும்போதே தன் உடலைச்சுற்றிலும் சிலநூறு கால்களை சிலந்திபோல இறக்கிக்கொண்டே வந்தது.
அந்த விண்கலத்திற்கு முன்பக்கம் என்று ஏதும் இருந்திருக்கவில்லை. ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து ஒரு வெள்ளை நிற ஒளி தகதகவென அடித்து விரட்ட .. அந்த விண்கலம் காரித்துப்பியதைப்போல நாலைந்து குட்டிகுட்டி ஜந்துக்கள் எகிறி குதித்தன.
முதல் பச்சை நிற ஜந்து சொன்னது '' கேட்டீ இந்த கிரகம் ரொம்ப நல்லாருக்கே.. நல்ல மணம் வீசுது.. உயிர்கள் இருக்கறதுக்கான அறிகுறிதான் தெரியல''
''ஆமாம் ஜேட்டீ.. ஆனா ஆக்ஸிஜன் நிறைய இருக்கு.. நீரும் இருக்கு.. ஆனா ஒரு உயிர்கூட காணலையே''
''நம்ம தலைவரோட மகளும் ரீட்டீயும் இந்த கிரகத்துக்குத்தான் ஓடிவந்திருக்காங்க...உடனே தலைவருக்கு செய்தி அனுப்பு ''
டிக் டிக் டிக்... டிகிடிக் டிகிடிக் டிகிடிக்
''அனுப்பிட்டேன் மேட்டீ''
''மேட்டீ நம்ம தலைவர் இந்த அவங்களை என்ன பண்ணுவாரு''
''என்ன பண்ணுவாரு ஏற்கனவே புடிச்ச கிரீட்டீ.ஜீட்டீ...மீட்டோடீ மாதிரி இந்த ரீட்டீயையும் கொன்னுருவாரு... நமக்கு பதவி பட்டம் எல்லாம் உண்டு கவலைப்படாதே.. மறுபடியும் தலைவர் மகள் யாரோடவாவது ஓடிட்டா மறுபடியும் விரட்டனும்.. ம்ம் என்ன காதலோ..''
''ம்ம் இந்த அற்புதமான கிரகத்திற்காவது என்னை தளபதியாக்கனும்.. அப்படிமட்டும் ஆக்கிட்டா நான் என் மனைவிய இங்கயே கூட்டிட்டு வந்து ஜாலியா இருப்பேன்.. தலைவர் மகள விரட்டவேண்டிய வேலை இருக்காது '' மனதிற்குள் அவங்க ஊரு அதிருட்டிஆயியிடம் வேண்டிக்கொண்டிருந்தான் மேட்டீ அவனுக்கு ஏதோ கெட்ட நாற்றம் வருதைப்போல இருந்தது.
அது என்ன நாற்றம் என சுற்றும் முற்றும் பார்ப்பதற்குள் அவர்களை நோக்கி நிறைய விஷதுகள்கள் அடங்கிய பலமான காற்று புயல் வேகத்தில் வீசியது. அதில் அந்த விண்கலம் உட்பட அனைவரும் வெடித்து சிதறினர்.
''எந்த மனுசனோட ரத்தத்தை குடிச்சனோ.. வயிறே சரியில்ல.. இப்பதான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...'' என்றபடியே பறந்துசென்றது அந்த வெள்ளைக்கொசு. ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் என சத்தமிட்டபடியே...தனது காதலியைத் தேடி பறக்கத்துவங்கியது.