Pages

13 March 2009

எ.வீ.ஜ-3 - சேவக்கின் சிக்ஸர் மழையும் பில்லுபார்பரும்...




ஒரு குறள் -

பீலி பெய்சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.



பா.ராகவனின் 'எக்ஸலன்ட்' புத்தகம் வாசித்தேன். வான்கோழி,தேனீ,ஆடு போல இது தன்னம்பிக்கை வளர்ப்பு புத்தகம். புத்தகம் எக்ஸலன்ட் என்று சொல்ல இயலாவிட்டாலும் நன்று. புத்தகம் நெடுக உன்னதம் என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருந்தாலும் ஏனோ ஆங்கிலத்தில் எக்ஸலன்ட் என்று தலைப்பு. இது போன்ற புத்தகங்களில் பல நிஜவாழ்க்கை வெற்றிநாயகர்களின் கதைகள் இடம் பெறும். புத்தகம் முழுக்க வெற்றி நாயகர்களாய் அவர் சித்தரிக்கும் பலருடனும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. அது மிகப்பெரிய பிரச்சனை. அது பிறகு. ஆனால் புத்தகமெங்கும் பாராவின் அடாவடி நடை. எழுத்திலேயே ஹீரோயிசம் காட்டுகிறார். இந்த புத்தகம் மட்டுமல்ல அவருடைய பெரும்பாலான புத்தகங்களில் நான் கவனிக்கின்ற ஒரு விடயமது. தொடை தட்டி மீசை முறுக்கிக் கொண்டு தூள் படத்தில் விக்ரம் பேசுவாரே அது போன்றதொரு தொணியில் எழுதுபவர். சமயங்களில் படிக்கும் நமக்கு ஏக கடுப்பாகிறது. யோவ் போதும்யா நிறுத்துயா என திருப்பி திட்டிவிட தோன்றுகிறது. அவரைப்போலவே அவரது பாணியை பின்பற்றி எழுதும் கிழக்கின் பிற புத்தகங்களிலும் அதே மாதிரியான நடையையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அது ஒரு வித சலிப்பை உண்டாக்குகிறதோ என்றே தோன்றுகிறது.



பா.ராகவனின் ' எக்ஸலன்ட்' புத்தகத்தில் இருந்து



''எத்தனை பெரிய வெற்றியாக இருந்தாலும் மனிதகுலத்துக்கு அதனால் உபயோகமில்லாவிட்டால் அது ஒர் உன்னத சாதனையாக கருதப்படாது''



வலையுலகில் அதைப்போன்று அடாவடியாகவும் அதிரடியாகவும் எழுதுபவர் (பின்னூட்டம் உட்பட) கே.ரவிஷங்கர்.பலரது பதிவுகளிலும் பின்னூட்டங்களில் 90 சதவீதம் யாருமே உண்மையான விமர்சனங்களை வைப்பதில்லை என்கிற எண்ணம் எனக்குண்டு. பின்னூட்டங்கள் நட்புக்காகவும் , நம்மை சிலர் கவனிக்கவேண்டும் என்பதாகவுமே பெரும்பாலும் இருந்துவிடுகிறது. பின்னூட்டங்களில் உண்மையான விமர்சனங்களின் பங்கு ஐந்து சதவீதம் கூட இருக்காது. இவரோ யாரையும் விட்டுவைப்பதில்லை. தவறு என்று தெரிந்தால் கட்டாயம் சுட்டிக்காட்டுகிறார். அது சில சமயம் எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் நிதர்சனம் அதுதானே. அவர் மீதான உண்மையான விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறார். கவிதை,கதை,கட்டுரை என சிக்ஸரும் ஃபோருமாக அடித்து விளாசும் சுஜாதா தாசரான அவரது வலைப்பூ இங்கே...




வீரேந்திர சேவாக் நியூஸிலாந்து அணியை அடித்து துவைத்துக்கொண்டிருந்தார். அவர் அடிக்கும் சிக்ஸர்களில் வான் பிழந்து மேட்ச்சுக்கு நடுநடுவே மழை பெய்து கொண்டிருந்தது. நாலாவது ஒரு நாள் போட்டி அது. ஒவ்வொரு அடியும் மின்னலாய் விழுந்து கொண்டிருந்தது. மேட்ச் இடைஇடையே மழையால் பாதிக்கப்பட்டு சேவக்கும் காம்பீரும் டிரஸ்ஸிங் ரூமுக்கும் மைதானத்துக்குமாய் நடந்து கொண்டிருந்தனர். ஆனாலும் தங்களது கவனம் சிறிதும் சிதறாமல் நியூஸியை அதகளம் பண்ணிக்கொண்டிருந்தனர் . ஒரு வழியாக மேட்ச் முடிந்தது. இந்தியா 84ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டது. பலவருடங்களுக்குப் பிறகு நியூஸியில் ஒரு! ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட்டது. வாழ்த்துக்கள். தோனியின் வெற்றித்தொப்பியில் மேலும் ஒரு இறகு.




தோழர் ஒருவர் போனில் அழைத்து '' யோவ் இந்த டக்வொர்த் லூயிஸ்னா என்ன '' என்று கேட்டார். நானும் '' ஆமா அப்படினா என்ன ? '' திருப்பிக்கேட்டேன்....



அதை என்னிடமே பலவருடமாய் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பலரும் அதைதான் ஒவ்வொரு முறை இந்தியஅணி டி/எல் முறையில் தோற்கும்போதும் கேட்டுக்கொள்வர். நானெல்லாம் இந்த முறையால் இந்தியஅணி தோற்கும்போதெல்லாம் அந்த டக்வொர்த்தையும் லூயிசையும்(பாவம்!) சபித்திருக்கிறேன். நீங்களும் அதை செய்திருக்கக்கூடும். ஆனால் இந்தியா வெல்லும்போது அவர்களை பாரட்ட ஏனோ மனது வருவதில்லை..(இந்த முறை பாராட்டிக்கொள்வோம்). சரி அது என்ன கம்பசூத்திரம் என டக்வொர்த் முறை குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். மிகசுவாரஸ்யமான கணக்கு அது. கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியதும். ஆராய்ச்சி முடிவுகளின் அளவு மிகுந்து விட்டதால் நாளை தனிப்பதிவாகப் போட உத்தேசம்.



ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பிரானா(piranha)வைப்

பற்றி சில சுவாரஸ்மான தகவல்களை பகிர்ந்துகொண்டார். உங்களுக்கு பார்பர் பிஷ் ஐ தெரியுமா என்றார். என்ன சார் அந்த மீன் முடிலாம் வெட்டிவிடுமா என்றேன். பிரானாவைத்தான் அமேசான் நதிக்கரை பழங்குடிமக்கள் பார்பர் பிஷ் என்று அழைப்பது வழக்கமாம். அந்த மீனின் பல் வரிசை மேலும் கீழுமாக ஒரே வரிசையில் இருக்குமாம். அவை கடிக்கும் போது ஒரு கத்திரிக்கோலின் இயங்குமுறையில் இயங்குவதால் முடிவெட்ட எளிதாக இருக்குமாம். மிஷின் கட்டிங் செய்வதைப்போல.





அதன் மண்டை ஓட்டை கொண்டு முடிவெட்டும் முறை பல நூறு வருடங்களாக அங்கே பழக்கத்தில் உண்டாம். பிரானாவைக் குறித்து ரூஸ்வெல்ட் எழுதும் போது அதை ஒரு கொடிய பயங்கரமான விலங்காகவே அறிமுகம் செய்தாராம். மக்களுக்கும் பல காலம் அவை குறித்த பயம் இருந்ததாம். ஆனால் இயல்பில் அவை சாதுக்களாம். தனக்கு ஆபத்து வந்தால் மட்டுமே தனது கூரிய பற்களால் எதிரியை வீழ்த்துமே தவிர அவை வேட்டையாடுவதில்லை. சென்றமுறை நண்பர்கூட அங்கேதான் முடிவெட்டிக்கொண்டாராம். ரஜினி மாதிரி எல்லாம் ஸ்டைலாக வெட்ட இயலாதாம் மிலிட்டரி கட்டிங் மட்டும்.


பில்லுபார்பர் என்றொரு இந்தி திரைப்படம். குசேலன் திரைப்படத்தின் தழுவல். இல்லை இல்லை கத பறயும் போல் திரைப்படத்தின் தழுவலாம். சில மாதங்களுக்கு முன்னால் பில்லுபார்பர் படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் குசேலன் பற்றிக்கூறும் போது பி.வாசு ஒரு மிகச்சிறந்த திரைப்படத்தை கேவலப்படுத்திவிட்டார் என்று வசைமாறி பொழிந்தார். பில்லு பார்பர் படம் பார்க்கும் போது பி.வாசுவிற்கு தேசியவிருதே கொடுக்கலாம் என தோன்றியது. ஷாருக்கான் நடித்த படமென்பதால் அந்த குப்பையைப் பார்த்து தொலைக்க வேண்டியிருந்தது. என் காதலி ஷாருக்கான் பைத்தியம்.



ஒரு மாணவன் பரிட்சை முடிவுகள் பார்க்க கல்லூரிக்கு வருகிறான். நோட்டிஸ் போர்டில் வரிசையாக ஒவ்வொரு பெயராக பார்க்கிறான். அவனது வகுப்பில் பலரும் தேர்ச்சி பெறவில்லை. மிகசோகமாக அவனது பெயரைத்தேடி கையால் ஒரு ஒரு பெயராக கடந்து வருகிறான். அவன் மட்டும் பாஸ். அதிர்ச்சி. அவனால் இருப்பு கொள்ளவில்லை. அதை உடனே கத்தி கதறி ஊரே கேட்க சொல்ல வேண்டும் போல் இருக்கிறது . சுற்றும் முற்றும் பார்க்கிறான். சுற்றிலும் யாரும் இல்லை. அவனால் அந்த மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. யாரிடமாவது சொல்லத் துடிக்கிறான். வோடோவோன் - உலகத்திற்கே சொல்லுங்கள் இப்போது அனைத்து லோக்கல் கால்களும் 30 பைசா மட்டுமே. மிக அருமையான விளம்பரம்.



இரண்டுவருடங்களுக்கு முன்னால்..யாருமில்லா பீச்சில் தனியாக நின்று கொண்டிருக்கும் போது, நான் வெகுநாளாய் ஒருதலையாய் காதலிக்கும் பெண் திடீரென போனில் அழைத்து ஐ லவ் யூ சொல்லிவிட்டு உடனே அழைப்பை துண்டித்துவிட்டாள்.. பீச்சில் யாருமே இல்லை. சமீபத்தில் , அவளுக்கு திருமணமாம் அழைப்பிதழ் வந்தது. வீட்டில் யாருமே இல்லை.


கிழக்குப்பதிப்பகம் தனது ஐந்தாம்ஆண்டு நிறைவையொட்டி சென்னையின் பல இடங்களிலும் சிறப்புத்தள்ளபடியுடன் புத்தகக்கண்காட்சியை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட சிலபல புத்தகங்கள் 50% சதவீதத்திற்கும் மேல் தள்ளுபடி விலையிலும் கிடைக்கிறது. மகிழ்ச்சியான செய்தி. நானும் மயிலாப்பூரில் நடந்தபோது சில்க் ஒரு பெண்ணின் கதை மற்றும் நான்வித்யா புத்தகம் வாங்கினேன்.




சகாயவிலையில் நூல்கள் கிடைக்கும் இந்த புத்தகக்கண்காட்சி ஏனோ மயிலாப்பூர்,மடிப்பாக்கம் இப்போது டிநகர்(மாம்பலம் மிக மிக அருகில் , அடுத்து தி.கேணியாக இருக்கலாம் ) என சென்னையின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடைபெறுவதை கவனிக்க முடிந்தது. அந்த இடங்களைக் குறித்து நான் அதிகம் சொல்லத்தேவையில்லை. அவாள்கள் சாரி சாரி , அவர்கள் மட்டும்தான் அதிகம் புத்தகம் வாங்குகிறார்களா? அவாளுக்குத்தான் (புத்தகம்) வாங்கும் சக்தி அதிகமிருக்கிறதா? மற்றவர்கள் புத்தகங்கள் வாங்குவதில்லையா? என்னமோ..


நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் நேற்று காலமானார். சுருளிராஜன் மற்றும் கவுண்டமணியோடு இணைந்து அவர் செய்த காமெடிகள் மிக அற்புதமானவை. அவ்வையார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி உட்பட பல மொழிகளிலும் 1500 படங்களுக்கும் மேல் நடித்தவர். ஆங்கிலபடமொன்றிலும் நடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு பதிவர்கள் சார்பாக அஞ்சலிகள்.