CURIOSITY
Main Entry : cu·ri·os·i·ty
Pronunciation : \ˌkyu̇r-ē-ˈä-s(ə-)tē\
plural - cu·ri·os·i·ties
Date: 14th century
1: desire to know: a: inquisitive interest in others' concerns : nosiness b: interest leading to inquiry
2.archaic : undue nicety or fastidiousness
3 .a: one that arouses interest especially for uncommon or exotic characteristics b: an unusual knickknack : curio c: a curious trait or aspect
தமிழில் - ஆர்வக்குறுகுறுப்பு..
நன்றி - ஆங்கிலம் -வெப்ஸ்டர்ஸ் ஆன்லைன் டிக்சனரி
தமிழ் - ஒரு பிரபல தமிழ்எழுத்தாளர்
************************************************************************************
ஒரு காதலன் முதுமையில் தன் கைகூடாத காதலியை சந்திக்க வாய்ப்பை பெறுகிறான் . அவளைக்காணச் செல்லும்முன் தனது உடலையும் முகத்தையும் கண்ணாடியில் பார்க்கிறான். உடலெங்கும் சுறுக்கம் தலையெல்லாம் நரைத்து முதுகு வளைந்து , அவனே அவனை அன்றுதான் கவனிக்கிறான். காதலிக்கும் போது அவன் இருந்தது போல் இல்லாமல் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்தது அவன் உடலும் முகமும். அவளை சந்திக்க மனது தயங்குகிறது. அவளுக்கு தன்னை அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என தயங்குகிறான்.தலைக்கு மை பூசுகிறான், முகத்துக்கு பவுடர் பூதுகிறான் , நவநாகரீகமாய் உடை அணிகிறான் , கண்ணாடி அணிந்து கொள்கிறான் , முடிந்த வரை இளமையாய் தோன்ற எல்லாமே செய்கிறான்.அவளை காண ஒரு பூங்காவில் காத்திருக்கிறான். அவளும் வருகிறாள். அவளுக்கும் உடலில் சுறுக்கம் தலையில் நரை.
நாம் ஒவ்வொரு நாளும் இளமையாய் உணரவேண்டும் என பெரியோர் சொல்வதுண்டு. அது மனதளவில் வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஆனால் உடலளவில் ஒவ்வொரு நாளும் முதுமையை நோக்கிய நம் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருவருட பிறந்தநாளும் நமக்கு விட்டுச்செல்லும் செய்தி அதுதானோ.
அனைவருக்குமே இளமையும் குழந்தைப்பருவமும் கடந்தபின் அது மீண்டும் கிடைக்காதா என்கிற ஏக்கம் இருப்பது பொதுவான ஒன்று. ஒரு வேளை உங்கள் வாழ்க்கை அப்படியே ரிவர்ஸ் கியரில் முதுமையிலிருந்து இளமைக்கு திரும்பினால் , நினைத்துப்பார்க்கவே இனிமையாய் இருக்கிறதே! மீண்டும் பள்ளிக்கு சென்றால்! மீண்டும் கல்லூரிக்கு சென்றால்! மீண்டும் பட்டமும் பம்பரமும் விட்டால்!
பிறக்கும்போது முதியவனாய் பிறந்து இறக்கையில் குழந்தையாய் இறந்துபோனால் ? அப்படிப்பட்ட ஒருவனது வாழ்க்கையில் பயணிக்கிறது, THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON திரைப்படம். 1921ல் SCOTT.F.FITZERALD என்பவரால் எழுதப்பட்ட சிறுகதையினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது.(சிறுகதை இங்கே இலவசமாக )
ஒரு சிறுகதையை எடுத்துக்கொண்டு அதற்கு இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய ஒரு படத்திற்கான திரைக்கதை அமைப்பது மிக கடினாமன ஒன்று. நாவலாக இருக்கும் பட்சத்தில் அதை சுருக்குவது எவ்வளவு கடினமோ அது போல சிறுகதையை விரித்து திரைக்கதை ஆக்குவது மிகமிக கடினம். அதை சாத்தியமாக்கியிருக்கிறார் திரைக்கதை அமைப்பாளர்கள் ( எரிக் ரோத் மற்றும் ராபின் ஸ்வார்டு ). அதுவும் இப்படம் சார்ந்த சிறுகதை 1921ல் எழுதப்பட்டது அதை தற்கால சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்தமை அருமை.
படம் பல காலங்களிலும் பயணிக்கிறது. முதலாம் உலகப்போர் காலத்தில் துவங்கும் படம் தற்கால கேத்ரீனா காலத்தில் முடிவடைகிறது. படம் நெடுக அப்புயலையும் ஒரு பாத்திரமாக்கி கதை சொல்லும் அல்லது படிக்கும் தன் அந்திமகாலத்தில் உயிருக்கு போராடும் நாயகியினுடன் பேசவிட்டிருப்பது அபாரம். அதிலும் கிளைமாக்ஸில் புயல் முற்றி கரையைகடக்கும் போது படம் முடிவதும் அவள் அவன் நினைவில் சாவின் முகப்பில் கிடப்பதும் கவிதை.
படம் நெடுக நம்மை அழைத்துச்சென்று பெஞ்சமின் பட்டன் அறிமுகப்படுத்தும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குணாதிசயம். அடாவடியான அன்பின் வளர்ப்புத்தாய் . தள்ளி நின்று அவன் வளர்ச்சியை ரசிக்கும் தந்தை. பியானோ கற்றுத்தரும் முதியோர் இல்லக்கிழவி. தன் உடலை ரசிக்கும் கப்பல் மாலுமி , இனிமேல் வராதே என்னும் விபச்சாரி என பலபல பாத்திரங்கள் அனைவரும் படம் முடிந்தும் விலகாது நம் மனதை சுற்றி சுற்றி வருவது அழகு.
படத்தின் முன்பாதியில் சிறுமியாய் நாயகி சிறுவயதுகிழவனான(!) நாயகனை காதலிப்பதும் , அவள் வளர்ந்து கிழவியாகியிருக்கையில் தன்னை இக்கோலத்தில் அவன் ஏற்றுக்கொள்வானோ என தயங்குகிறாள். இவனோ இளமைத்துள்ளலோடு இளைஞனாய் அப்போதும் தீராத காதலோடு அவளை அணைத்து முத்தமிடுவது கவிதை. மிக சிறந்த முத்தக்காட்சி அது. அவன் தன் கடைசிகாலத்தில் ஒரு குழந்தையாய் மாறிவிட அவனை மடியில் போட்டுக்கொண்டு அவள் அழுவதும் , தன்னிலை மறந்த குழந்தையாய் நாயகன் அவள் முகத்தையே பார்ப்பதும் மிகச்சிறந்த காட்சியமைப்பின் உதாரணங்கள்.
படத்தில் அதிக கவனத்திற்குள்ளானது , நிறம். ஒவ்வொரு காட்சியிலும் காலத்திற்கேற்ற நிறமாறுதலும் , ஒரு காட்சியின் காலத்தை அகாட்சியில் வெளிப்படும் நிறமே நமக்கு உணர்த்துகிறது. இப்படத்தின் சினிமாட்டோகிராபி கிளாடியா மிராண்டோ . இவர் டேவிட் பிளின்ச்சரின் முந்தைய படங்களான செவன் மற்றும் ஜோடியாக்கில் பணியாற்றியவர். இத்திரைப்படம் முழுக்க முழுக்க டிஜிட்டலில் படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழில் இது போல முழுக்க முழுக்க பிலிம் இல்லாமல் டிஜிட்டலில் படமாக்கப்படும் முதல் படம் நான்கடவுள் என்பது கூடுதல் தகவல்.( இந்தியாவிலேயே முதல் படமாகவும் அது இருக்கலாம்.. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் இங்கே அப்டேட் செய்கிறேன்)
இப்படத்தின் இயக்குனர் டேவிட் பிளின்ச்சர். அவரது முந்தைய படங்களான தி பைட் கிளப் , ஜோடியாக் , செவன் , பேனிக் ரூம் போன்ற படங்களில் இருந்து முற்றிலும் விலகி , பிராட் பிட் மாதிரியான ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு இயக்குனருக்கும் கதாநாயகனுக்கும் துளியும் சம்பந்தமேயில்லாத ஒரு கதையை மிக அழகாய் கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஆமை வேகத்தில் நகரக்கூடிய ஒரு கதையை CURIOSITY என்கிற ஒற்றை வார்த்தையில் படுவேகமாய் நகர்த்துகிறார் இயக்குனர். டேவிட் பிளின்ச்சர் அசத்தல் பிளின்ச்சர்.
பிராட்பிட் , டிராயில் பார்த்த அக்காலப் போர்ப்படை வீரனா இவன் , ஓசியன்ஸ் லெவனில் பார்த்த அறிவுஜீவி திருடனா , செவனில் பார்த்த முன்கோப போலீஸ்காரனா இவன் என அதிசயிக்க வைக்கிறார். படம் ஆரம்பிக்கும் போது தெரியும் பிராட்பிட் படம் முடிகையில் பெஞ்சமின் பட்டனாய் தெரிகிறார். உடலை வறுத்தி இளைஞர், மத்யவயதினன்,கிழவன் என்று பல படிகளிலும் பலவேறு உடலசைவு மொழிகளை காட்டும் அற்புத நடிகன் ( நம்மூர் சூர்யா ஏனோ மனதிற்குள் வந்து தொலைக்கிறார்.. சூர்யா நீ இங்கே இருக்க வேண்டியவன அல்ல என கத்திவிட தோன்றுகிறது ) . பிராட்பிட்டின் நடிப்பு படத்தின் வேகத்தை கூட்டுகிறது. இங்கேயும் ஆர்வக்குறுகுறுப்பு.
ஆஸ்கருக்கு 13 வெவ்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம் , இந்தியாவில் மேல்தட்டுமக்களுக்கான திரையரங்குகளில் வெளியாகலாம். பொதுவாகவே பேன்டஸி படங்களாகட்டும் நம் கற்பனைகளாகட்டும் அவை இன்பமயமாகவும் மகிழ்ச்சியின் கடலாவுமே இருக்கும் என்றே நினைத்திருந்தேன் . ஆனால் இப்படம் அதை உடைத்து பேன்டஸியிலும் உண்மையை கூறவிளைகிறது.
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON - குயூரியாஸிட்டியின் வெற்றி அல்லது ஆர்வகுறுகுறுப்பின் வெற்றி....