அழகான அறை அது . ஒழுங்கின்மை நிரம்பி வழியும் . குழந்தைகளின் அறை அப்படித்தான் இருக்க வேண்டும் . அது அவர்களது இயல்பை காட்டுவது . ராகுலின் அறை கூட அப்படித்தான் கிடந்தது . ராகுல் பருவ இடைவெளியில் குழந்தை பருவத்தைக் கடந்து கொண்டிருந்தான் . இளம்பிராயத்தின் துடுக்கும், வீச்சும் நிரம்பி வழிந்தது அவனிடம்.
சுவரெங்கும் சின்னதும் பெரிதுமாக காகிதங்களில் சிரிக்கும் சச்சினும் முரட்டு ஜான்சீனாவும் ஆடல் விஜயும் அதிரடி அமீர்கானும் ஆக்கிரமித்திருந்தனர் . படுக்கையெங்கும் சூப்பர்மேன்,ஸ்பைடர் மேன் , ஹல்க் , நைட் ஹாக் என்று பல சூப்பர் ஹீரோக்களும் காமிக்ஸ்களாய் கை கால்களை தூக்கியபடியும் முகத்தை விரைப்பாயும் வைத்துக்கொண்டு மல்லாக்க கிடந்தனர் .
ப்ளேஸ்டேசன் வீடியோ கேமில் இராணுவ வீரன் ஒருவன் பல ஆயிரம்பேர்களை சுட்டு வீழ்த்திக்கொண்டிருந்தான் . ஹெலிகாப்டரில் பறந்து சுட்டான், பீரங்கிகளில் அமர்ந்து சுட்டான், படகில் பாய்ந்து சுட்டான். வீரன் கையில் துப்பாக்கி ராகுல் கையில் ஜாய்ஸ்டிக். டுமீல் டுமீல் என சுடுவதெல்லாம் அந்த காலம் போல, இப்போதெல்லாம் சடசடசடசட என்று ஒரு அழுத்தத்தில் ஆயிரம் குண்டுகளை விளாசித்தள்ளுகிறது.
மனிதாபிமானமின்றி மனிதர்களையும் டைனோசர்களையும் சுட்டுக்கொண்டிருந்தான் . ரத்தம் தெறிக்க நிறைய பேர் செத்து மடிந்தபடியிருந்தனர் . அவர்கள் சாக, சாக இவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. சிரித்தான். அந்த அறை அதிர சிரித்தான். அடுத்த லெவலுக்கு சென்று விடுவானாம். அதில் இன்னும் உயர் ரக துப்பாக்கி கிடைக்கும் அதில் இன்னும் அதிக குண்டுகள் அதிக கொலை .
கொலை மகிழ்ச்சியை கொடுக்குமா!. அவனுக்கு தற்காலிக சுகமும், ஆறுதலும் அதுவாய் ஆகியிருந்தது . தினமும் விதம் விதமாய் விளையாட்டுக்கள் எல்லாமே கொலை செய்வதும், போர் தொடுப்பதும், ஊரை அழிப்பதுமாக. எவ்வளவு கொன்றாலும் சலிக்காது.
மணி 9ஐ தாண்டியிருந்தது. தூக்கம் கண்ணை சுழற்றியது. அப்பாவும் அம்மாவும் இன்னும் வரவில்லை. தனியாகத்தான் இருந்தான். தினமும் தனிமையில்தான் இருக்கிறான். அவன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கோவையில் வேலை. இங்கிருந்து 75 கி.மீ தொலைவு. காலை 7மணிக்கே கிளம்பிவிடுவர். மீண்டும் இரவுதான் அது 10 அல்லது 10.30 கூட ஆகலாம். 8ஆம் வகுப்பு படிக்கும் இவன் பள்ளி முடிந்து வீடு வந்தால், காமிக்ஸ் தாய், வீடியோ கேம் தந்தை, ஃபிரிட்ஜில் உணவு.
சடசடசடசடசட தூக்கத்தை நிறுத்த மீண்டும் சுடத்தொடங்கினான். இன்று மட்டுமே அவன் இலட்சம் பேரையாவது கொன்றிருப்பான். பெற்றோரின் மீதான கோபத்தை விளையாட்டில் காட்டிக்கொண்டிருந்தான். எல்லா லெவலையும் முடித்து விட்டான். எல்லோரையும் கொன்று விட்டான். இனி கொல்ல யாருமில்லை அவன் மட்டும் தான் இருந்தான். வாசலில் வந்து அமர்ந்து கொண்டு ஏக்கத்தோடு சாலையில் கண்வைத்தபடி கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான்.
சாலையில் யாருமில்லை, அரை மணிநேரத்தில் ஒரே ஒரு ஆட்டோ மட்டும் பொடபொட வென்று ஆடி அசைந்தபடி சென்றது. அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது. எரிச்சலோடு பக்கத்தில் இருந்த பூத்தொட்டியை தள்ளிவிட்டான், அது கீழே விழுந்து உடைந்து நொறுங்கியது.
கோலங்களும், அரசியும் முடிந்து ஊர் உறங்கத்தொடங்கியிருந்தது. இவன் கன்னத்தில் கைவைத்தபடி சாலையையே பார்த்துக்கொண்டிருந்தான். உடைந்து போன பூத்தோட்டியை பார்த்தான். அதைக்காணவில்லை, அதுவென்றால் பூச்செடி. அது அவன் அம்மாவின் பூந்தொட்டி, அவள் ஒரு தாவரவியல் நிபுணர். மரபணு மாற்றுத் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சியில் பட்டம் பெற்றவள்.
இந்த பூந்தொட்டியில் இருந்த ரோஜாச் செடி மரபணு மாற்று முறையில் அதன் ஜீன்களில் மாற்றம் செய்து செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் இனம். குளோனிங்கை போல என்றாலும் , இது குளோனிங்கின் அடுத்த படி. ஒரு உயிரை நமக்கேற்றாற் போல அதன் மரபணு படிமங்களில் மாற்றம் செய்து உருவாக்கும் முறை.
வாசற்படிக்கட்டிலிருந்து இறங்கி மெதுவாக அதை தேடத்துவங்கினான். சுற்றிசுற்றி வந்தான் தென்படவில்லை. புருவம் உயர்த்தி, ஆள்காட்டிவிரலால் தலையை சொறிந்தபடி தேடினான் கிடைக்கவில்லை. அவன் கால்களில் ஏதோ ஊர்வது தெரிந்தது. ஒரு குட்டிப்பாம்பு போன்று இருந்தது. தலை மட்டும் சிவப்பாய். ஓவென குதித்து வாசல் படிகட்டிகளின் மேல் ஏறிக்கொண்டான். அது ஊர்ந்து ஊர்ந்து அவர்களது வீட்டு கேட்டைத்தாண்டி போய்விட்டது. அந்த இரண்டு நிமிடங்களும் அவனுக்கு இரண்டு ஜென்மங்களை கடந்தது போலிருந்தது. அத்தனை படபடப்பு. கைகள் நடுங்கின.
''ராகு ஏன்டா பயப்படறே '' அசரீரியாய் ஒரு குரல் .
சுற்றும் முற்றும் பார்த்தான் , யாருமில்லை. அது அவனது தாயின் குரலை ஒத்திருந்தது. ஆனால் அலை அலையாய் ஒலித்தது. ஆங்கிலப்பட ரோபோக்கள் போல. வீட்டிற்குள் எட்டிப்பார்த்தான் உள்ளே வெளியே இவன் மட்டும்தானிருந்தான்.
''செல்லம் நான் இங்க இருக்கேன்டா ''''ஏய் யாரு, யாரு, வெளிய வாங்க! விளையாடாதீங்க பயமாருக்கு ப்ளீஸ்'' அழத்தொடங்கினான். அந்த உடைந்து போன பூந்தொட்டிக்கு அருகில் இருந்த சுவருக்கு பின்னால் இருந்து தன் வேர்க்கால்களால் இலகுவாக ரோஜாத்தலையை ஆட்டி ஆட்டி ஒய்யாரமாய் தன் இடையை அல்லது கொம்பை ஆட்டி ஆட்டி நடந்து வந்தது அந்த பூச்செடி.
''நான்தான் பேசினேன் '' அவனுக்கு பயம் அதிகமாகியது. வீட்டிற்குள் சென்று வெளி லைட்டை போட்டுக்கொண்டு வந்தான். அவன் காலடியில் வந்து தன் வேர்க்கால்களால் பவ்யமாய் ஒரு அலாவுதீனின் பூதம் போல அலைஅலையாய் மிதந்தபடி நின்றது.
''ப்ளீஸ் போய்டு '
''நான் உன் பிரெண்டுடா ராகுல், ஏன் கோபப்படற ''
''பிளான்ட்ஸ்லாம் பேசாது, போ இங்கிருந்து '' பயத்துடன் கத்தினான் காலை ஒதுக்கிக்கொண்டு.
''நீ படிச்சதில்ல, பிளான்ட்ஸ்க்கும் எல்லா உணர்ச்சியும் இருக்கும்னு , நீ உன் பள்ளியில் படிச்சிருப்பியே, ஜெகதீஷ் சந்திரபோஸ்னு ஒருத்தர் எங்கள வச்சு ஆராய்ச்சிப்பண்ணி எங்களுக்கும் எல்லா உணர்ச்சியும் இருக்குனு நிரூபிச்சிருக்காருனு ''
''ஆமா.. ஆனா நீ பேசறீயே''
'' நான் ஒரு முயூட்டன்ட், என்னால் பேசவும் முடியும், உன் அம்மாவின் படைப்பு நான், இனி இந்த உலகத்தை ஆளப்போகும் படைப்பு, என்னால எல்லா தாவரங்களையும் தொடர்பு கொண்டு பேச முடியும், மற்ற தாவரங்கள் பேசறது உங்களுக்கு கேட்காது அது வெறும் மின்காந்த அலைகள் அவ்ளோதான்,''
''பொய் சொல்லாத, ப்ளீஸ் பக்கத்தில வராத, பயமாருக்கு ''
''ராகுல் , எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்டா , அதான் உங்கிட்டமட்டும் பேசறேன் , ஏன்ன ஒரு விதத்தில நான் உன் அண்ணன் மாதிரி, ஏன்னா உனக்கும் எனக்கும் ஓரே அம்மா ''
''வேண்டாம் , ப்ளீஸ், ஆமா நீ ஏன் என்னோட அம்மா குரல்ல பேசற ''
''எனக்குள் இருந்து வரும் ஓலி, என் உடல் அதிர்வுகளால ஏற்படுது, என்னால எல்லா குரல்லயும் பேசமுடியும், அதைக்கட்டுப்படுத்தும் திறனை நானே உங்க வீட்டு வாசல்ல இருந்து கத்துகிட்டேன், இரவெல்லாம் பேசிட்டே இருப்பேன், உங்கம்மா லேப்ல நிறைய செமினார் குடுப்பாங்க அத நிறைய பாத்து பாத்து கத்துக்கிட்டேன், உன் அம்மாதான் எனக்கு குரு அனா ஆவன்னாலருந்து அரசியல் சட்டம் வரை சொல்லிக்குடுத்துருக்கா, உனக்கு முன்னாலயே பிறந்தவன்டா நான் ''
''.........'' ராகுலுக்கு லேசாக மயக்கம் வந்தது.
'' எங்களுக்கு ஸ்டார்ச் தயாரிக்க தேவையான எதும் இப்பலாம் கிடைக்கறதில்ல, முக்கியமா நிலத்தடிநீர் அப்புறம் கார்பன்டைஆக்ஸைடு ம்ம் முக்கியமா சூரிய ஒளி, நல்ல காத்து இப்படி, அதனால நாங்க நகர ஆரம்பிச்சோம், இப்போ பேசவும் ஆரம்பிச்சிட்டோம், இன்னும் கொஞ்சநாள்ல உங்கள தாக்கவும் தொடங்கிருவோம்"
''ஸோ வாட் '' கொஞ்சூண்டு தைரியத்தோடு கேட்டான்
''உங்க மனித இனத்தாலதான் எங்களுக்கு இப்படி ஒரு நெல வந்துடுச்சு , அதனால உங்க எல்லாரையும் அழிக்க போறோம் ''
''சீசீ லூசாட்டம் பேசாத, உன்னை படைச்சதே நாங்கதான்''
''உனக்குத்தெரியுமா , இந்த பூமி தோன்றினப்போ முதல் முதல் உருவானது நாங்கதான் , எங்களுக்கு அப்புறம்தான் நீங்க , நீங்க எங்களுடைய பரிமாணவளர்ச்சில உருவானங்கதான்''
''அதனால ''
''உங்க இனத்தை அழிச்சு , ஒரு புதிய உலகத்தை படைக்கப்போறோம், முழுக்க முழுக்க பசுமையான உலகம், தாவரங்களின் உலகம், வர டிசம்பர் 31 ஆம் தேதி உலகத்தாவரங்கள் எல்லாம் ஒரு சமிக்ஞை மூலமா தகவல்களை பரிமாறிக்கிட்டு, ஜனங்க மேல தாக்குதல தொடங்குவோம், அடுத்த வருஷம் எங்களுக்கு புதுசா பிறக்கும்''
''அப்படி நடக்க நான் விடமாட்டேன், உலகத்தை காப்பாத்தணும்னா, உன்னை அழிக்கணும் '' ஜெடிக்ஸில் வரும் பவர்ரேஞ்சரைப்போல பேசினான் ராகுல். வெறியோடு அந்த பூச்செடிமீது பாய்ந்தான், அது கண்ணிமைக்கும் நேரத்தில் இருட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டது.
அதைப்பிடிக்க இரண்டுகால்களும் வானில் தெறிக்கப் பாய்ந்தான் ''ஓஓஓ , '' , அது தப்பித்தது.
பக்கத்தில் ஆட்டோ சத்தம் கேட்டது, இவன் வீட்டிற்குள் போய் அமர்ந்து கொண்டான்.
''என்னடா ரகு , சாப்பிட்டியா '' அம்மா அதட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள், வேர்க்க விறுவிறுக்க தலையை மட்டும் அசைத்தான்.
''டேய் ஏன்டா ஒரு மாதிரி இருக்க, ஸ்கூல்ல ஏதாவது பிராப்ளமா!! , என்ன பண்ணிட்டு இருந்த '' அப்பாவும் அதட்டினார்.
''நத்திங்பா '' சீறினான், அவனால் அந்த ரோஜாச்செடிதந்த அதிர்ச்சியில் இருந்தே மீள முடியவில்லை.
மணி 11 ஆகியிருந்தது. '' டேய் ரூம் போய் தூங்கு இன்னும் என்ன அங்க பண்ற'' மீண்டும் அப்பாவின் அதட்டல், ''என்னங்க ரொம்ப டயர்டா இருக்கு நீங்க சாப்பிட்டு வாங்க நான் போய் படுக்கறேன்'' என்று அவனம்மா அவர்களறைக்கு கிளம்பினாள்.
ரோஜாச்செடி பேசுமா? அது சொன்னதெல்லாம் நிஜமா? எல்லாரையும் பிளான்ட்ஸ் கொல்லபோகுதா? இரவெல்லாம் இப்படி கேள்விகளோடே படுத்திருந்தான். பின்னிரவில் உறங்கினான் .
விடிந்தது, 5மணிக்கே எழுந்துவிட்டான், வெளியே அந்த பூந்தொட்டி மட்டும் கிடந்தது, செடியை காணவில்லை. வாசலிலேயே அமர்ந்து கொண்டான். முதுகில் அவன் அப்பா கைவைத்து ''என்னடா ராகுல் ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கே '' என்றார்.
''இல்லைப்பா நைட்டு நான் ஏதேச்சயா இந்த தொட்டிய தள்ளிவிட்டுட்டேன், அதுலருந்து ஒரு ரோஜாச்செடி வந்து எங்கிட்ட பேசுச்சுப்பா '' என்று அது பேசியவற்றை ஒரு வரி விடாமல் ஒப்பித்தான்.
''என்னடா ராகு , அதெல்லாம் ஒன்னுமில்லடா உடம்பு சரியில்லையா இருக்கும், நாளைக்கு டாக்டர போய் பாக்கலாம் சரியா, வீட்டில தனியா இருக்கல்ல அதான் பயந்துருப்ப! ''
''நான் ஒன்னும் குழந்தை இல்லப்பா, அப்பா அந்த செடிலாம் சேர்ந்து உங்கள என்ன அம்மாவெல்லாம் கொல்ல போகுதுப்பா, நாம அந்த ரோஜாச் செடிய அழிக்கணும்ப்பா''
''இல்லடா அப்படிலாம் ஒன்னுமில்லடா, அதெல்லாம் உன்னோட கற்பனை, நிறைய புக்ஸ் படிக்கற அப்புறம் விக்கீபீடியா, கூகிள், பவர் ரேஞ்சர்ஸ் அதனாலதான் இப்படிலாம் உனக்கு கற்பனை வருது '' என்றபடி மணியை பார்த்தார் 6.30.
'' சரி நாம நைட்டு இது பத்தி பேசுவோம் ''
''அப்பா எனக்கு பயமாருக்குப்பா, இன்னைக்கு வேலைக்கு போகாதீங்க ப்ளீஸ் ''
''அதான் ஒன்னுமில்லனு சொல்றேன்ல, இன்னைக்கு வேலைக்கு போகாட்டி எவ்ளோ லாஸ் ஆப் பே னு தெரியுமா, ஆமா காசோட அருமை உனக்கெங்க தெரியப்போகுது ''
''அப்பா சத்தியமா, என் படிப்பு மேல சத்தியமா நெஜமாத்தான்ப்பா சொல்றேன், பாருங்க அந்த செடிய காணோம் ''
''ஏன்டா தொட்டிய கீழ தள்ளி உடைச்சதும் இல்லாம, பொய்வேற சொல்றியா, நானும் பாத்துகிட்டே இருக்கேன் '' என்று கன்னத்தில் ஒன்று கொடுத்தார். பளீர்!.கன்னம் அந்த ரோஜாவைப்போல சிவந்து பின் வெளிரியது.
''என்னங்க பிரச்சனை '' அம்மா கண்ணைதுடைத்தபடி வெளியே வந்தாள்,
''ஐயோ என் பூத்தொட்டி '' அலறினாள். '' ஒன் மகன் அத உடைச்சிட்டு கதை சொல்றான்டி, என்னையே எதிர்த்து பேசறான்''
''அது என்னோட லைப்டைம் பிராஜக்ட் ரோஜாச்செடி, இப்போ நான் என் டீனுக்கு என்னடா பதில் சொல்வேன் ''
''ஏன் நான் சொல்றத யாருமே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க, ஐயோ நான் சொல்றது நிஜம், குளோபல் வார்மிங்லாம் படிச்சதில்லையாப்பா நீங்க''
''பாருடி என்னையே கேள்வி கேக்குது உன் புள்ள , மீசை முளைச்சிருல்ல, இப்படித்தான் ''
''அந்த செடிய என்னடா பண்ண?''
''எங்கடா போட்ட அந்த செடிய!! ''அதட்டினார்.
''அப்பா டிசம்பர் 31, அதுக்குள்ள நாம அந்த ரோஜாச்செடிய கண்டுபிடிச்சு அழிக்கணும் , இல்லாட்டி அது நம்ம ஹியுமானிட்டியையே அழிச்சுடும்பா, ப்ளீஸ்,''
ராகுலின் அம்மா அழத்துவங்கினாள்,
அவன் பெற்றோர் நின்று கொண்டிருக்கும் போதே, அந்த ரோஜாச்செடி அவர்கள் பின்னால் இருந்து எட்டிப்பார்த்தது, இவன் தோட்டத்தில் கிடந்த மண்வெட்டியை தூக்கிக்கொண்டு அதன் பின்னால் ஓடினான்.
''யாராச்சும் நம்புங்களேன், ப்ளீஸ், இன்னைக்கு அதுங்க நம்ம உலகத்தை அழிக்கப் போகுது, ப்ளீஸ், அந்த ரோஜாச்செடிய அழிக்கணும்'' மனதிற்குள் பல நாட்களாக அது மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது ராகுலுக்கு. எப்போதும் அதையே கத்திக்கொண்டிருந்தான் அந்த சிறு இளைஞன்.
''இது வெறும் மனபிரமைதான், அதீத மன அழுத்தம், அப்புறம் தனிமை, இதுக்கு நீங்களும்தான் காரணம், அவன் சொல்றதை கேட்டா உங்களுக்கே புரியல, ஒரு ரோஜாச்செடிக்கு எப்படி இத்தனை அறிவு வரும்'' மனோதத்துவ நிபுணர் மேனன் அவர்களை நோக்கி கோபமாக பேசினார். எதிரில் அமர்ந்திருந்த இருவரும் தலைகுனிந்திருந்தனர். ராகுலின் அம்மாவால் ஏதும் பேச முடியவில்லை. அவளால் சில உண்மைகளை சில இடங்களில் கூற இயலாது.
''யாராச்சும் நம்புங்களேன், ப்ளீஸ், இன்னைக்கு அதுங்க நம்ம உலகத்தை அழிக்கப் போகுது, ப்ளீஸ், அந்த ரோஜாச்செடிய அழிக்கணும்''
அந்த மனநலமருத்துவமனையின் பூட்டிய அறையில் விடாமல் பல நாட்களாய் இதையே சொல்லிக்கொண்டிருந்தான் ராகுல். யாராவது அவன் அலறுவதை கேட்டு எப்போதும் லத்தியால் கம்பிகளை தட்டுவார்கள், காலையிலிருந்து யாரும் அப்படி வரவில்லை. காலை உணவும் வரவில்லை. பசித்தது. உதவியாளையும் காணவில்லை.
கம்பிகளுக்கு வெளியே எட்டிப்பார்த்தான். வெளியே மக்கள் அலறும் சத்தம் கோரஸாக ஓஓஓ வென கேட்டது .
கம்பிகளுக்கு வெளியே அந்த ரோஜாச்செடி தன் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தது. அந்த ரோஜாவின் சிரிப்போலி அந்த அறை முழுதும் பரவி அவன் உடலெங்கும் ஒலித்தது. அவன் அதை பார்த்தான். அது சிரித்தது அவனும் சிரித்தான். அந்த அறைக்கதவில் ஓய்யாரமாக சாய்ந்து கொண்டு சிரித்தபடியே பேசத்துவங்கியது.
'' ராகுல் உன்னை கொல்லமாட்டேன்டா நீ என் தம்பிடா!''
ராகுல் பேசாமல் அது அந்த வாயிலில் நடந்து செல்வதை பார்த்துக்கொண்டே
இருந்தான்.