Pages

06 February 2009

ஈழம் குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?




மக்கள் ஆய்வகம் என்னும் நிறுவனம் ஈழத்தமிழர் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஒரு கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியது. அதன் முடிவுகள் இன்று வெளியாகின. அவை உங்கள் பார்வைக்கு. பிடிஎப் கோப்பாக வந்த கட்டுரையை அப்படியே இங்கே கொடுத்திருக்கிறேன். இதில் காணும் அனைத்து விபரங்களும் மக்கள் ஆய்வகத்தின் முடிவுகளே. எனது சொந்த கருத்து ஏதுமில்லை. இக்கட்டுரையை வாசிக்கையில் தமிழர்களின் வித்தியாசமான மனோபாவம் இப்பிரச்சனையில் தொனிப்பதாக அறியமுடிகிறது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை மின்னஞ்சலில் அனுப்பிய பாலபாரதி அவர்களுக்கு நன்றி. (தட்டச்சு பிழைகளுக்கு மன்னிக்கவும்)

*************************************************************************************************




மக்கள் ஆய்வகம் வழங்கும் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்.

ஆய்வகப் பின்னணி

‘மக்களை ஆய்வது மக்களுக்காகவே” என்ற கொள்கையுடன் மக்களை மையப்படுத்திய பல்துறை ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது மக்கள் ஆய்வகம். களஆய்வுகளோடு நின்றுவிடாமல், ஆய்வுமுடிவுகளை அடியொற்றிய செயல்பூர்வமான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தகவல் அறியும் உரிமை, வாக்குரிமை ஆகியவை குறித்து மாநில அளவிலான பரப்புரைப் பயணங்களையும், இந்தியத் தேர்தல் முறையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துத் தேசிய அளவிலான கருத்தரங்கு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களையும், புவி வெப்பமாதல் முதலிய சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்த பயிலரங்குகளையும் கடந்த ஆண்டு நடத்தியுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில் கலைப்படைப்புக்களை உருவாக்கும் மற்றொரு முயற்சியாக, அரவாணிகளைப் பற்றிய ‘அப்பால்,” இளைஞரைப் பற்றிய ‘வர்ணா” ஆகிய குறுந்திரைப் படங்களையும் தயாரித்துள்ளது.

ஆய்வின் நோக்கம்

கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள இலங்கைத் தமிழர்ப் பிரச்சனை குறித்துத் தமிழக அரசியல் கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் பலவகைப்பட்ட செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில், தமிழக மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளையும் எண்ணப் போக்குகளையும் ஒரு நடுநிலையான ஆய்வு மூலமாகப் பதிவுசெய்ய வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து, மக்கள் ஆய்வகம் இந்தக் களஆய்வை மேற்கொண்டுள்ளது.

ஆய்வு அணுகுமுறை

இந்திய ஃ தமிழகப் பண்பாட்டு-அரசியல் சூழலுக்கேற்ப, எண்ணியல் (Quantitative) மற்றும் பண்பியல் (Qualitative) கூறுகளை உள்ளடக்கி, பேரா. டாக்டர் . ச. ராஜநாயகம் உருவாக்கியுள்ள சமூக-உளவியல் அணுகுமுறை (Social psychological approach ) இந்த ஆய்விலும் பின்பற்றப்பட்டுள்ளது. எனினும், இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உணர்வுப்பூர்வமான தன்மையைக் கருத்தில்கொண்டு, மக்கள் சுதந்திரமாகத் தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த ஏதுவாக, கலந்துரையாடல் சூழலில், பதிலறு வினாக்கள் (Open ended questions ) மூலம் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. இத்துடன், விடியோ மூலமும் மக்களுடைய கருத்துப் பகிர்வுகள் பதிவுசெய்யப்பட்டன. இதற்கென, மக்கள் ஆய்வகத்தின் சிறப்புப் பயிற்சிபெற்ற தரவுச் சேகரிப்பாளர்கள் (Enumerators) பயன்படுத்தப்பட்டனர்.

பங்கேற்றோர்

பின்னணி பேரா. டாக்டர் ச. ராஜநாயகத்தின் நேரடி வழிநடத்துதலில், 2009 ஜனவரி மாதம் இரு கட்டங்களாக (13-18 மற்றும் 25-31) களஆய்வு நடைபெற்றது. தமிழகமெங்கும் மொத்தம் 3100 பேரிடம் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன (தனிப்பட்ட கலந்துரையாடலில் 2000 பேர், விடியோ பதிவில் 1100 பேர்). களஆய்வில் ஆண்களும் பெண்களும் சம அளவில் பங்கேற்றனர். இலங்கையோடு தொடர்புடையதாகத் தமிழக மீனவர் பிரச்சனையும் இருப்பதால், மீனவர் பங்கேற்பிற்குக் கள ஆய்வில் சிறப்பிடம் தரப்பட்டது (1150 பேர், 37%). வயது, கல்வி, தொழில், சாதி முதலிய காரணிகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப் படவில்லை.


களநிலவரம்: சில தூக்கலான அம்சங்கள்


கள ஆய்வின்போது ஆய்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்த அம்சங்களில் கீழ்வருவன குறிப்பிடத் தகுந்தவை:

(1) இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச்சை எடுத்தவுடன், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்துத் தரப்பினாpடமும் முதலில் வெளிப்படும் உணர்வு, பயம் கலந்த தயக்கம்.

(2) ஆண்களை விடப் பெண்கள் இலங்கைத் தமிழர் மீது அதிக மனிதநேய அக்கறையை வெளிப்படுத்தினாலும், இந்தப் பிரச்சனை குறித்துப் போதிய விவரம் தெரியவில்லை.

(3) இலங்கையின் பூர்வீகத் தமிழரையும், (ஆங்கிலேயர் காலத்தில் சென்ற) மலையகத் தமிழரையும் குழப்பி, அங்குள்ள எல்லாத் தமிழருமே ‘பிழைக்கச் சென்றவர்கள்” என்ற எண்ணம் கணிசமாகப் பரவியுள்ளது.

(4) நகர மக்களை விட கிராம மக்கள் அதிக அனுதாபத்தோடும் மனந்திறந்தும் பேசுகிறார்கள்.

(5) தமிழகத்தின் உள்பகுதிகளை விட, கடற்கரையோரக் கிராமங்களில் அதிக உணர்ச்சிப்பூர்வமான பகிர்வு நிகழ்ந்துள்ளது.

(6) அரசியல்ரீதியான நிலைப்பாடுகளுக்கு ஏற்பவே ஊடகங்களில் செய்தி வெளிவருவதாகவும், சரியான, முழுமையான தகவல்களைத் தந்து, கருத்தொருமையை உருவாக்க வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருப்பதாகவும் பரவலாகக் கருத்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போர்க்களச் சூழல்

(1) எத்தகைய போர்:

இலங்கையில் தற்போது நடந்துவரும் போரில், விடுதலைப் புலிகளைச் சாக்காக வைத்து தமிழினத்தையே இலங்கை அரசு அழித்து வருகிறது (86.5),

ராஜபக்ஸே அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக இலங்கை மக்கள் மீது தேவையற்ற ஒரு போரைத் திணித்துள்ளது (10.5),

விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்க இலங்கை அரசு போர் நடத்துகிறது (2.0)

ஆகிய கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

(2) உணர்வு வெளிப்பாடு:

இலங்கையில் நடைபெறும் போர் குறித்த செய்திகளைக் கண்ணுறும் போது கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக மிகப் பெரும்பாலோர் (85.0) தெரிவித்துள்ளனர்

மத்திய மாநில அரசுகளின் மீது கோபம் - 44.5

ராஜபக்ஸே அரசின் மீது கோபம் - 25.5

பன்னாட்டுச் சமூகங்கள் மீது கோபம் - 12.0

விடுதலைப் புலிகள் மீது -3.0

பிற பதில்கள்:

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது பாரிதாபம் (11.5),

எதுவும் செய்ய முடியாத இயலாமை (2.5)

ஆகியவை.


(3) உடனடித் தீர்வு:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காணப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது ஏகோபித்த கருத்தாக முன்வைக்கப்படுகிறது (90.0).

பிற பதில்களில்:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் மற்றும் நிவாரண உதவி - 6.0,

விடுதலைப் புலிகளை முற்றாக ஒடுக்கும் வரை போரைத் தொடர வேண்டும் - 2.0.

(4) நிரந்தரத் தீர்வு:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக முன்வைக்கப் படுபவற்றுள் முக்கியமானவை:

தனி ஈழம் (68.0)

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பகுதிகளுக்குச் சுயாட்சி (21.0)

தமிழரைப் பௌத்த-சிங்களருக்குச் சமமாக அங்கீகரித்து இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் (4.5).

(5) பேச்சு வார்த்தை யாரோடு?:

இலங்கையில் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்துவதென்றால், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் அமைப்புகளோடும் பேச்சுவாh;த்தை நடத்த வேண்டும் என்ற கருத்து முதலிடம் பெறுகிறது (56.0).

பிற கருத்துக்கள்:

விடுதலைப் புலிகளோடு மட்டும் (27.0),

விடுதலைப் புலிகள் தவிர்த்த பிற அமைப்புகளோடு (12.0).

புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை:

பன்னாட்டு அழுத்தங்கள் மூலம் போரை நிறுத்தச் செய்வது விடுதலைப் புலிகளின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று பெரும்பாலோர் (69.0) எதிர்பார்க்கின்றனர்.

போரைத் தீவிரப்படுத்துவது (20.0)

ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைவது (5.0)

ஆகியவை பிற எதிர்பார்ப்புக்கள். (7)

ஊடகச் சுதந்திரம்:

ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படவிடாமல் இலங்கை அரசு தடைசெய்கிறது என்பது, ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோரின் கருத்து (55.5).

போர்ச் சூழலில் எந்த அரசும் தனக்குச் சாதகமாகச் செய்திகளைத் தணிக்கைசெய்தே வெளியிடும் என்பது மற்றொரு முக்கியக் கருத்து (16.0).

தமிழக அரசியல்களச் சூழல் (8)


இதுவரையிலான முயற்சிகளின் தாக்கம்:

இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் ராஜபக்ஸே அரசின் மீது எந்தவிதச் சிறு தாக்கத்தைக்கூட ஏற்படுத்தவில்லை என்பது ஏகோபித்த கருத்தாக (91.5) வெளிப்படுகிறது.

தமிழகத்தில் இத்தகைய முயற்சிகளின் தாக்கத்தைப் பொருத்த அளவில், இலங்கைத் தமிழருக்கு ஆதரவான எழுச்சியை இங்கு உருவாக்கியுள்ளது (43.0)

மத்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தியுள்ளது (32.5),

மாநில அரசின் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது (14.0),

ஒரு சில கட்சிகள் தம்மைத் தமிழினக் காவலராகக் காட்டிக்கொள்ள உதவியுள்ளது (6.5) ஆகியவை பதிவாகியுள்ளன.


(9) தமிழக அரசின் அணுகுமுறை:

தமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸின் தயவு தேவைப்படுவதால், காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசாரித்துப் போகிறது (70.5)

ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து வருகிறது (22.0),

இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் நிஜமாகவே குழப்பத்தில் உள்ளது (4.0) ஆகியவை.

இலங்கைத் தமிழா; பிரச்சனை குறித்த தமிழக அரசின் அணுகுமுறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. (10)

உண்மையான அக்கறையுள்ள கட்சி: இலங்கைத் தமிழா; நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள தமிழகக் கட்சி எதுவுமில்லை, எல்லாமே தேர்தல் அரசியலே செய்கின்றன எனப் பாதிக்கும் மேற்பட்டோர் (52.0) தெரிவித்துள்ளனர்.

அக்கறையுள்ள குறிப்பிட்ட கட்சிகளைப் பொருத்த வரையில்,

தமிழர் தேசிய இயக்கம் -12.0,

மதிமுக - 9.5,

விடுதலைச் சிறுத்தைகள் - 6.5,

இந்திய கம்யுனிஸ்ட் - 5.0,

திமுக - 4.0,

பாமக - 3.5,

காங்கிரஸ் - 2.5,

அதிமுக - 2.0,

தேமுதிக - 1.0,

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் - 1.0.

(11) கட்சிகள் அடுத்துச் செய்யவேண்டியது:

ஒவ்வொரு கட்சியும் தன்னிச்சையாகச் செயல்படாமல், முதல்வா; தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது ஏகோபித்த (86.0) கருத்து

ஒன்றிணைந்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் - 65.0,

பன்னாட்டுச் சமூகங்களின் கவனத்தை ஈர்த்து, இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும் - 21.0).

அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு இளைஞர்கள் இந்தப் பிரச்சனையைக் கையிலெடுக்க வேண்டும் என்ற கருத்துக்கும் ஓரளவு (12.0) ஆதரவுள்ளது.

(12) திமுக தலைவர் அடுத்துச் செய்யவேண்டியது:

மூத்த தலைவர் என்ற முறையில், திமுக தலைவா; கருணாநிதி, ஆட்சி பற்றிய பயத்தை விடுத்துத் துணிச்சலாகச் செயல்படவேண்டும் என்ற கருத்தைப் பெரும்பாலோர் (71.0)
தெரிவித்துள்ளனர்.

இதுவரை அவர் செய்துவந்துள்ளபடியே தொடர்ந்தால் போதும் என்பது மற்றொரு முக்கியக் கருத்து (25.0).

ஒருவேளை, தமிழர் பிரச்சனையை முன்னிட்டு திமுக ஆட்சியை இழக்க நேரிட்டால், அடுத்து வரும் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகப் பெரும்பாலோர் (58.5) கருதுகின்றனர்

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - 20.0.


(13) போராட்டக் களத்தில் மாணவர்கள்:

இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குப் பெரும்பாலோர் ஆதரவு தெரிவித்தாலும், வலுவான எதிர்ப்பும் வெளிப்படுகிறது (ஆதரவு - 46.5, எதிர்ப்பு - 32.5).

(14) ஊடகங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சனை:

இலங்கையில் நடந்துவரும் போரைக் குறித்த செய்திகளில், ஒருதலைச் சார்பு இல்லாமல், உண்மையான கள நிலவரத்தைக் கூறும் வெகுஜன ஊடகம் எதுவுமில்லை என்பதே பெரும்பான்மைக் கருத்து (காண்க: அடுத்த பத்தியில் ஊடகவாரியான முடிவுகள்). பெரும்பாலும் அவை இலங்கை அரசு தரும் தணிக்கை செய்யப்பட்ட செய்திகளையே தருகின்றன என்பதே பெரும்பாலானவர்களின் (68.0) கருத்தாக வெளிப்பட்டுள்ளது.

உண்மையான கள நிலவரத்தைக் கூறும் தொலைக்காட்சிகளில்

சன் டி.வி. முதலிடத்திலும் (24.5),

அதற்கு வெகு அருகில் மக்கள் தொலைக்காட்சியும் (23.0),

மூன்றாமிடத்தில் கலைஞா; தொலைக்காட்சியும் (19.5) வருகின்றன (எதுவுமில்லை - 26.0).

நாளிதழ்களைப் பொருத்த வரை,

தினத்தந்தி முதலிடத்திலும் (23.0),

அதற்கடுத்த இடங்களில் தமிழோசை (21.0), தினகரன் (20.5) ஆகியவையும் வருகின்றன (எதுவுமில்லை - 24.5).


வார மற்றும் வாரமிருமுறை இதழ்களில்,

நக்கீரன் (18.5),

குமுதம் (17.0),

ஜூனியர் விகடன் (14.5) ஆகியவை இடம் பெறுகின்றன (எதுவுமில்லை - 22.0).


நடுவண் அரசியல்களச் சூழல்

இதுவரையான செயல்பாடுகள்:

இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நடுவண் அரசு இதுவரை மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்துக் கடுமையான அதிருப்தியே வெளிப்பட்டுள்ளது. இலங்கை அரசு தொடுத்துள்ள போரை ஆதரிப்பதாகவே நடுவண் அரசின் செயல்பாடுகள் உள்ளதாக மிகப் பெரும்பாலோர் (86.0) கருதுகின்றனர்.

தமிழக அரசின் வற்புறுத்தலுக்காகப் பேருக்கு ஏதோ செய்துள்ளது (6.5),

உண்மையான அக்கறையோடு செயல்பட்டுள்ளது (2.5) ஆகியவை பிற கருத்துக்கள்.

(16) உடனடியாகச் செய்யவேண்டியது:

இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியதாகக் கூறப்பட்டுள்ளவற்றில், போர்த் தளவாடங்கள் மற்றும் பயிற்சி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் (49.0),

போரை நிறுத்த உறுதியான குறுக்கீடு செய்ய வேண்டும் (37.0) ஆகியவை அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. பிற கருத்துக்கள்: போர்ச்சூழலில் சிக்கியுள்ள அப்பாவி மக்களுக்கு அவசர உதவி (8.0), இலங்கை அரசுக்கு மேலும் போர்த் தளவாட உதவி (2.0), இது இன்னொரு நாட்டின் உள்விவகாரம் என்பதால் அதில் தலையிடாமல் இருப்பது (2.0).

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்

இலங்கைத் தமிழர் பிரச்சனை முக்கிய விஷயமாக இடம்பெறுமா என்பதைப் பொருத்த வரையில் ஏகோபித்த கருத்தாக எதுவும் வெளிப்படவில்லை. எனினும், தமிழகத்தில் நிச்சயம் இந்தப் பிரச்சனை முதலிடம் வகிக்கும் (30.0),

தேர்தல் விஷயமாக இடம்பெறலாம் என்றாலும், உள்நாட்டுப் பிரச்சனைகளே (அடிப்படைத் தேவைகள், விலைவாசி, தீவிரவாதம், மதவாதம் ஆகியவை) அதிக முக்கியத்துவம் பெறும் (30.0) ஆகியவை வலுவாக வெளிப்படுகின்றன.

பணம், சாதி, கூட்டணி முதலியவற்றின் அடிப்படையிலேயே தோ;தல்கள் அமைந்துள்ளதால் இது தேர்தல் பிரச்சனையாக வாய்ப்பில்லை (18.0),

இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது, தேர்தலின் போது நிலவும் சூழலைப் பொருத்து இதன் முக்கியத்துவம் அமையும் (12.0),

எல்லாக் கட்சிகளுமே இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதால் தேர்தல் பிரச்சனையாக வாய்ப்பில்லை (5.0) ஆகியவை பிற கருத்துக்கள்.


(19) எப்படி வெளிப்படும்?:

தமிழகத்தைப் பொருத்த வரை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சனை இடம்பெறும் பட்சத்தில், அதனுடைய வெளிப்பாடு, ஆளும் கட்சிகளுக்கு எதிர்ப்பாக இருக்கும் (68.0),

தமிழின உணர்வை மையப்படுத்திய புதிய கூட்டணியாக இருக்கும் (11.0),

தேர்தல் புறக்கணிப்பாக இருக்கும் (8.0). 5


(20) பாதிப்பு யாருக்கு?:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாமல் நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் பட்சத்தில், தமிழகத்தைப் பொருத்த வரை காங்கிரஸூக்கு மிகப் பெரும் பாதிப்பு இருக்கும் என்பது கீழ்வரும் பதில்களை ஒப்புநோக்கும்போது புலப்படுகிறது.

காங்கிரஸூக்குப் பாதிப்பு - 39.0,

மத்திய அரசில் இடம்பெற்றுள்ள எல்லாக் கட்சிகளுக்கும் - 24.5,

மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு - 21.0,

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முழுமனதுடன் ஈடுபடாத கட்சிகளுக்கு - 6.5,

எல்லாக் கட்சிகளுக்கும் - 2.5,

யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது - 2.0.



மீனவர் வாழ்க்கைச் சூழல்

மீனவர் பிரச்சனைக்கு மூல காரணம்:

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது - 46.0,

இலங்கையில் தொடர்ந்து நடந்துவரும் போர் - 27.0,

இந்தியக் கடல் எல்லைக்குள் போதிய மீன்வளம் இல்லாதது - 18.0,

இயல்பாகவே சிங்களருக்குத் தமிழர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி - 4.5.

(22) மீனவர் பிரச்சனைக்கு நிலையான தீர்வு:

கச்சத்தீவை மீட்பது - 47.0,

லங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தம் - 30.0,

இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க அந்த அரசுடன் நீண்டநாள் ஒப்பந்தம் செய்வது - 14.0,

மீனவர்கள் மாற்றுத் தொழிலைக் கற்றுக்கொள்ள ஏற்பாடுசெய்வது - 7.5.


************************************************************************************************

பேரா. டாக்டர் ச. ராஜநாயகம் & குழுவினா
மக்கள் ஆய்வகம்
06.02.2009
சென்னை 600 034


*************************************************************************************************

குறிப்புகள்:

(01) மக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கப் பயன்படுத்தியுள்ள எண்கள் அனைத்தும் சதவீதத்தைக் குறிக்கின்றன.

(02) பெரும்பாலான கேள்விகளுக்கு மக்களின் முக்கியமான கருத்துக்கள் மட்டுமே இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருப்பதால், சதவீதத்தின் கூட்டுத்தொகை 100-ஆக இருக்காது.

(03) ‘மீனவர் வாழ்க்கைச் சூழல்” என்ற தலைப்பின் கீழுள்ள முடிவுகளில், மீனவர் கிராமங்களில் பங்கேற்ற மக்களின் கருத்துக்கள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.