Pages

19 January 2009

வில்லு - விவ'கார'மான விமர்சனம்


''ஐயோ............ அப்பா... உங்கள கொன்னவங்கள நான் பயிக்கு பயி வாங்காம விதமாத்தேன் '' அந்தக் கால எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் பெரும்பாலான படங்களில் இப்படி ஒரு வசனம் கட்டாயம் இருக்கலாம். அது சமயங்களில் அம்மாவாகவும் தங்கையாகவும் இருக்கும். ஆனால் எது எப்படி இருந்தாலும் அது எப்படி நடந்தாலும் இருப்பத்தைந்து வருடங்களுக்கு பின்தான் நடக்கும்.


எம்.ஜி.ஆருக்கு பிறகும் எழுபதுகளின் கடைசியிலும் எம்பதுகளின் துவக்கத்திலும் வெளியான பெரும்பாலான படங்களின் கதை இதுவாகத்தான் இருக்கும். எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய பக்தரான என் தந்தைக்கு (கோவையில் இன்றும் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர் வாசலில் என் தந்தை பங்குபெறும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் பேரவையின் போஸ்டர்களை காண முடியும்) எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிகவும் பிடித்த நடிகர் விஜய்தான். அவராலேயே அதற்கான காரணத்தை கூற இயலுவதில்லை. விஜய்க்கு எம்.ஜி.ஆர் ஆகவேண்டும் என்கிற ஆவல் வந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் ''பம்பிருந்தா பயிப்பு இல்ல பயிப்பிருந்தா பம்பில்ல '' என்று எம்.ஜி.ஆரைப்போல வசனம் பேசினாலும் சொல்வதற்கில்லை. போதும்டா நடிகர்களா உங்களால தமிழ்நாடு பட்ட பாடு என்று எண்ணத்தோன்றுகிறது.


விஜயின் கட்சிக் கொடி அல்லது மன்றக் கொடி மகா கேவலமாக இருக்கிறது . மாற்றினால் தேவலை. அந்த கொடியோடுதான் வில்லுத்திரைப்படமும் துவங்குகிறது . படமும் கொடியைப்போலவே மகா கொடுமையாக இருக்கிறது.


வீரமான தந்தை , அவரை விவேகமாய் வெல்லும் அல்லது கொல்லும் வில்லன்கள் ( விவேகமாய் இருந்தால் வில்லன்களாம்) . 25வருடங்களுக்கு பிறகு வீரம்+விவேகம் என்கிற வின்னிங் காம்பினேஷனில் வில்லன்களை பந்தாடும் நாயகன். நடுவில் வடிவேலு,விவேக்,சந்தானம் வகையறாக்களின் கா(ம)டி , தொப்புள் என்னும் பிரதேசத்துக்கு கூட ரோஸ்பவுடருடன் லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டு வந்து நான்கு பாடல்களுக்கு ஆடும் அற்புத ஹீரோயினுடன் காதல் . பாடல்களுக்காக காதலா காதலித்ததால் பாடலா? .அதில் மூன்று குத்துப்பாடல் , ஒரு மெலடி , ஒரு டிஸ்கோ அல்லது பாப் , ராப் இப்படி ஏதாவது ஒன்று .


காசு நிறைய இருந்தால் ஹிரோயினோடு பாரினில் போடலாம் குத்தாட்டம் . காசில்லாவிட்டால் லோக்கல் செட்டிலும் போடலாம் (குத்தாட்டம்தான்). ஐந்து அனல் பறக்கும் சண்டைகள். 50க்கும் மேற்ப்பட்ட பஞ்ச் டயலாக்குகள். இதற்கு மேல் விஜய் படத்தில் வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும் அல்லது சொல்லி விட முடியும். அவ்வளவுதான் வில்லு. படம் முடிவதற்குள் நம் செல்லு,பல்லு எல்லாம் உடைந்துவிடுகிறது.


அஜித்தின் பில்லா வெற்றி விஜயை ரொம்பவே பாதித்திருக்கவேண்டும். படம் மேக்கிங் பில்லா சாயல். ஹாலிவுட்தரத்தில் படமெடுக்கிறேன் பேர்வழி என்று பாதி படம் முழுக்க கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு படத்தில் பாதிபேர் கொல்லுகிறார்கள். விக்ரமன் படங்களில் பொதுவாகவே பணக்காரர்களை காட்டுவதற்கு கோட்டுசூட்டை உபயோகிப்பார். இப்போதெல்லாம் அன்டர்கிரவுண்ட் தாதாக்களை காட்டும் போதும் அதே போன்றதொரு யுக்தியை கடைபிடிக்கின்றனர். என்ன கொடுமை விக்ரமன் இது.


வில்லுத்திரைப்படத்திற்கு சமீபகாலமாய் எல்லா தொ.காட்சிகளிலும் பிரபுதேவாவும் விஜயும் மாறி மாறி விளம்பரம் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. இவர்களுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் எவ்வளவோ தேவலாம். அவராவது காசு கொடுத்து விளம்பரம் செய்கிறார். இவர்கள் பல நல்ல(?) நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறேன் பேர்வழி என்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வில்லு படத்திற்கு விளம்பரம் செய்கின்றனர். செய்திகளில் மட்டும்தான் விளம்பரம் வரவில்லை( செய்திகளில் விளம்பரம் , படிக்காதவன் படத்திற்கு மட்டும்தானாம் - சன்செய்திகளில் அந்த கொடுமைக்கதை தனி ).


படத்தின் கதையை முதல் பத்தியில் சொல்லிவிட்டபடியால், படம் குறித்து என்னத்த சொல்ல! . படத்தின் முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் துள்ளலும் எள்ளலும் இரண்டாம் பாதியில் மொத்தமாய் மிஸ்ஸிங். அதுவும் விஜயை இராணுவ கெட்டப்பிலெல்லாம் பார்த்து தொலைக்கவேண்டியிருக்கிறது. பிரகாஷ்ராஜை வேறு மாதிரி நடிக்க சொல்லலாம் அலுப்பு தட்டிவிட்டது. விஜய்க்கு இன்னும் போக்கிரிமேனியா மாறவில்லை போல அதே மாதிரி நடிக்கிறார்(?) . ஒரு வேளை பிரபுதேவாவின் வழிகாட்டுதலாய் இருக்க கூடும். நயன்தாராவால் இதற்கு மேல் தமிழ்திரைப்படங்களில் காட்ட இயலாது . இதற்கு மேல் காட்டினால் வில்லுத் திரைப்படத்தை ஜோதி தியேட்டர் காலைகாட்சிகளில்தான் ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கும் ( ஆனால் தற்செயலாக படம் ஜோதியில்தான் ரிலீஸாகியிருக்கிறதாம்) .


வடிவேலு அடிவாங்குவதை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது , மாட்டுடனெல்லாம் சண்டை போட்டு அடிவாங்குகிறார் (கிராபிக்ஸ்க்கு நன்றி) . வெகு நாட்களுக்கு பிறகு ரஞ்சிதா 80களில் பார்த்த அம்மா சென்டிமென்ட் காட்சிகளில் நடித்து நம் கண்களை குளமாக்கவெல்லாம் இல்லை , மெகாசீரியல் அம்மா ரேஞ்சில் நடித்திருக்கிறார். (விஜயை விட ரஞ்சிதா உயரமானவராம் உண்மையா தெரியவில்லை).


மற்றபடி படத்தின் பிளஸ் - பாடல்கள் , நடனம் , கேமரா , காமெடி , முதல் பாதி , விஜயின் துள்ளல் , சண்டைக்காட்சிகள்


மைனஸ் - மற்ற எல்லாமே


பிரபுதேவாவின் தெலுங்குப்படமான நுவொஸ்தானன்டே... படம் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். இந்த பையனுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன் என்று. இந்த படத்தை பார்க்கும் போது அவரை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.




Statutory warning -


Sometimes Watching Vijay movies can be injurious to your mental and physical health - be careful