Pages

02 December 2008

தாவணிக்கனவுகள் - V/S - CINEMA PARADISO - ஒரு ஒப்பீடு !





திரைப்படம் காட்சிகளின் ஊடகம் . அக்காட்சிகளை திரைக்கு கொண்டு செல்லும் திரைக்கதைகள் மிகமிக முக்கியமானது . சம்பவங்களின் கோர்வையே திரைக்கதையாக உருவாகிறது . அண்மையில் வெற்றிப்பெற்ற படங்களின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தது எளிமையாக கையாளப்பட்ட ஆழமான திரைக்கதைகளே . அவை ஒரு சினிமாவின் ஆணிவேர் . தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என்று பட்டியல் எடுத்தால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் பாக்யராஜும் இடம் பெறுவார் .

அவரது திரைக்கதைகளை சினிமாவில் பாலபாடம் பயிலும் புதிய இயக்குனர்களுக்கு பாடமாக வைக்கலாம். அத்தனை நேர்த்தி . சுவாரஸ்யம் . பாக்யராஜ் திரைப்படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் அந்த நேர்த்தியைக்காணலாம் . பார்வையாளனை ஒரு நொடியும் காட்சியைவிட்டு அகலவிடாமல் செய்யும் மந்திர திரைக்கதைகள் அவை . சின்னவீடாகட்டும் , முந்தானை முடிச்சாகட்டும் அப்படம் குறித்து படிக்கும் போதோ அல்லது எண்ணுகையிலோ அப்படத்தின் முக்கிய காட்சிகளைவிடவும் பிற நல்ல காட்சிகள் தான் நம் மனதில் முதலில் தோன்றும் என்பது வியப்பான உண்மை .

80களின் கடைசியில் வெளியான அவரது தாவணிக்கனவுகள் திரைப்படம் பெரும் வெற்றியடையவில்லை என்றாலும் ஒரு நல்ல மசாலா திரைப்படத்திற்கான அனைத்தும் அப்படத்தில் நிரம்பி வழியும். காதல் காட்சிகளில் ஆகட்டும் செண்டிமென்ட் ஆகட்டும் அனைத்திலும் மேலோங்கி இருக்கும் ஏதோ ஒன்று நம்மை நிச்சயம் அப்படத்தினை ரசிக்க வைக்கும் . அதுதான் பாக்யராஜின் வெற்றி .

தாவணிக்கனவுகள் திரைப்படத்தை , உலகசினிமாவின் மிக உயரிய திரைப்படமாக உலக விமர்சகர்கள் கருதும் ' சினிமா பேரடிசோ ' திரைப்படத்தோடு ஒப்பீடா என்று சில உலகசினிமாக்களை ரசிக்கும் ஆர்வலர்கள் புருவம் உயர்த்தலாம் . ஓப்பீட்டளவில் இப்படங்களை காணுகையில் இவ்விரு திரைப்படங்களிலும் நாம் காணும் பெரும்பாலான ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன . ஒரு உலகசினிமா எனப்போற்றப்படும் இத்தாலிய திரைப்படம் நமது உள்ளூர் சினிமாவின் கதையில் படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் வியப்பானதுதானே!

சினிமா பேரடிசோ திரைப்படம் ஒரு அமைதியான களங்கமில்லா ஆற்றைப்போல செல்லும் ஆர்ப்பாட்டமில்லா ஒரு திரைக்கதையோடு உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் . ஆனால் தாவணிக்கனவுகள் திரைப்படம் கொண்டாட்டங்களின் திரைப்படம் , எதிர்பாராத திருப்பங்கள் , சினிமாத்தனமான சென்டிமென்ட் காட்சிகள் , அதனூடே பயணிக்கும் நகைச்சுவை என முற்றிலும் முன் சொன்ன திரைப்படத்திலிருந்து வேறு படுகிறது .

இவ்விரு திரைப்படங்களின் கதைகளை ஒரு பாராவில் முதலில் சுருக்குவோம் . அது இப்படங்களின் ஒற்றுமையை எளிதில் அடையாளம் காண உதவலாம் .( இப்படங்களின் சாரத்தை மட்டுமே சுருக்க முயற்ச்சித்திருக்கிறேன் , காட்சிகளை அல்ல )

ஒரு பெரிய வெற்றியடைந்த இயக்குனர் தனக்கு வேண்டிய ஒருவரின் சாவுக்காக பல வருடங்களுக்கு பிறகு ஊருக்கு செல்கிறான் , தன்னை நினைவு கூர்கிறான் , ஒரு ஏழைகுடும்பம் அதில் பொறுப்பில்லா ஆனால் அறிவான ஒரு சிறுவன் அவன் , கணவனை இழந்த கைம்பெண்ணாய் தாய் , அவனை வளர்க்க சிரமத்துக்குள்ளாகிறாள் , வறுமை , இவனுக்கோ சினிமாவில் ஆர்வம் , தினமும் தியேட்டரில் படம் பார்க்கிறான் , அங்கே தியேட்டர் ஆபரேட்டருடன் சொல்ல இயலாத ஒரு ஆழமான நட்பு , அந்நட்போடும் வளர்கிறான் , ஆர்வத்தோடு புரொஜக்டர் இயக்க கற்றுக்கொள்கிறான் , தியேட்டரிலேயே வேலைக்கு சேர்கிறான் , பணக்கார பெண்ணுடன் காதல்
சரியான வேலையில்லாததால் அதில் தோல்வி , காட்பாதராய் தியேட்டர் ஆபரேட்டர் , வீட்டை விட்டு ஊரைவிட்டு போக அறிவுறுத்துகிறார் ,பாரிஸுக்கு வருகிறான் , அங்கே மிக கடுமையாக உழைத்து ஒரு பெரிய இயக்குனராகிறான் , தியேட்டர் ஆபரேட்டரின் மறைவுக்காக பல வருடங்களுக்கு பிறகு , ஊருக்கு வருகிறான் , அங்கே அவன் நினைவுகள் அவனை வாட்டுகிறது , தன் பழைய காதலை தேடுகிறான் , தன் காதலியை கண்டுபிடிக்கிறான் , ஆனால் அவள் வேறொருவனுக்கு மனைவியாய் , மீண்டும் பாரிஸுக்கே செல்கிறான் அந்த பழைய நினைவுகளை சுமந்து கொண்டு என கதை முடிகிறது . ( கதை மிக சுவாரசியமாய் படமாக்கப்பட்டிருக்கும் முழுக்கதையையும் எழுதினால் கூகிள் என் மீது வழக்கு தொடரும் அளவுக்கு பக்கம் பக்கமாய் எழுத இயலும் அத்தனை சின்ன சின்ன காட்சிகளில் விடயங்கள் , ) இது சினிமா பேரடிசோ படத்தின் கதைச்சுறுக்கம் .

இனி தாவணிக்கனவுகளுக்குள் வருவோம் , அதிலும் ஒரு ஏழைக்குடும்பம் , கணவனை இழந்த கைம்பெண் , அவளுக்கு பலகுழந்தைகள் , அதில் மூத்தவன் பொறுப்பில்லாதவன் ஆனால் அறிவாளி , அவனுக்கு எதிலும் ஈடுபாடில்லை , அவனுக்கு பக்கத்து வீட்டு ரிட்டயர்டு சிப்பாயோடு சொல்ல இயலாத ஒரு ஆழமான நட்பு ,பணக்கார மாமன் மகளுடன் காதல் , சரியான வேலையில்லாததால் காதல் தோல்வி , குடும்ப பிரச்சனை , அவனுக்கு காட்பாதர் போன்ற ரிட்டயர்டு சிப்பாய் வீட்டை விட்டும் ஊரைவிட்டும் போக சொல்லுகிறார் , சென்னை நகரத்திற்கு வருகிறான் , நகரத்தில் பிழைக்க வழியின்றி தவிக்கிறான் , கடுமையான உழைப்புக்கு பின் ஒரே பாடலில் பெரிய நடிகனாக ஆகிறான் , சிப்பாய் இறந்து போகிறார் , ஆனால் அது இவனுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது , இவன் ஊருக்கு வருகிறான் , வருந்துகிறான் , தனது தங்கைகளுக்கு மணம் முடித்து வைக்கிறான் , தன் புதியகாதலியுடன் இணைகிறான் . சுபம் .

இவ்விரு படங்களுக்குள்ளும் மேலோட்டமாக பார்க்கையில் எத்துணை ஒற்றுமைகள் , முன்னது ஒரு உலகசினிமாவாகவும் , பின்னது ஒரு முழுமையான மசாலாவாகவும் உருமாறி இருப்பதைக்காணலாம் .

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சினிமா பேரடிசோ திரைப்படம் வெளியான ஆண்டு 1988 நமது தாவணிக்கனவுகள் வெளியான ஆண்டு 1983 .

GREAT MINDS THINK ALIKE என்று ஒரு சொலவடை உண்டு , நிச்சயம் சினிமா பேரடிசோவின் இயக்குனர் GUISEPPE TORNOTORE நமது தாவணிக்கனவுகள் திரைப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை . எப்படி வந்தது இந்த ஒற்றுமை? . தெரியவில்லை .

இத்தாலியின் சிசிலியில் பிறந்த ஒருவரது வாழ்வில் நடந்தது போன்ற நிகழ்ச்சிகள் இங்கே கோவையில் ஒரவருக்கு நிகழும் வாய்ப்புக்கள் மிகக்குறைவே . இருவரது வாழ்விலும் நடைபெற்ற சம்பங்களின் தொகுப்பாக இப்படங்களைக் காணலாம் . இருபடங்களுமே அந்தந்த திரைப்படங்களின் இயக்குனர்களின் ஆரம்பத்தில் வாழ்ந்த நகரங்களில் ( பாக்யராஜ் - கோவை ,GUISEPPE TORNOTORE - சிசிலி ) இருந்தே துவங்குவதும் மற்றுமொறு ஒற்றுமை . அதே போல அவர்களிருவரும் பெரு நகரங்களுக்கு (சென்னை மற்றும் பாரிஸ் ) குடிபெயர்வதும் சிறப்பு . இருவருக்கும் இளம்வயது காதல் தோல்வி அவர்களது பொருளாதார மற்றும் வேலையின்மை காரணமாகவே ஏற்படுகிறது . இருபடங்களிலும் நாயகன் திரைப்படத்துறையில் புகுந்து வெற்றி பெறுவதாகவே கதை நிகழும் . இப்படி இன்னும் இப்படங்களில் பல ஒற்றுமைகள் .

திரைக்கதை ஒரு திரைப்படத்தின் உயிர் . அது ஒரு திரைப்படத்தின் தன்மையை மாற்ற வல்லது . சினிமா பேரடிசோவில் அதன் திரைக்கதை மிக மென்மையாகவும் ஆழமாகவும் , ஆள்மனதின் உணர்வுகளை தூண்டுவதாகவும் , ஒரு நோஸ்டால்ஜிக் வகையில் அமைக்கப்பட்டதால் அப்படம் ஒரு உலகம் போற்றும் தலைசிறந்த திரைப்படமாகவும் அமைந்தது .

அதே சாயலில் எடுக்கப்பட்ட ( சினிமா பேரடிசோவிற்கு முன்பே ) தாவணிக்கனவுகள் திரைப்படம் கொண்டாட்டங்களின் திரைப்படம் , சிறுநகர (வேலை) வாய்ப்பின்மையையும் , ஒரு இளைஞனின் வெற்றிக்கான தேடலையும் , அதற்கான வழிகளாய் அவனெடுத்துக்கொள்ளும் முயற்சிகளுமாய் , நகைச்சுவையாக சொல்லப்பட்ட ஒரு சீரியஸ் திரைப்படம் .

திரைஉலகில் இன்று மிகவும் போற்றப்படும் '' சினிமா பேரடிசோ'' போன்ற ஒரு திரைப்படத்தை நமது பாக்யராஜ் அக்காலகட்டத்தில் அப்படத்தை விடவும் வலிமையாய் , இன்னும் சிறப்பாய் எடுத்திருக்க இயலும் . தமிழ்த்திரையுலகம் வெற்றி ஒன்றையே குறியாய் படமெடுக்கும் இடம் . 1980 களில் இங்கே வெற்றி பெற்றவனே மதிக்கப்பட்டான் . அப்போது மட்டுமல்ல இப்போதும் அந்நிலை அப்படியேதான் இருக்கிறது .

சினிமா பேரடிசோ படத்தை தமிழில் எடுக்கும் பட்சத்தில் அப்படம் நிச்சயம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கும் . 80களில் பாக்யராஜ் ஒரு வெற்றிப்பெற்ற இயக்குனர் , அவர் தனது வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முயன்று கொண்டிருந்த கட்டாயத்தில் இருந்தார் . அவருக்கென்று அப்போது ஒரு பாணியும் தன்னை இயக்குனர் என்கிற எல்லையை தாண்டி ஒரு கதாநாயகனாகவும் (மசாலா ஹீரோவாக ) நிரூபிக்கும் முயற்சியில் இருந்தார் . அச்சமயத்தில் வெளியான தாவணிக்கனவுகள் திரைப்படத்தின் மிதமிஞ்சிய மசாலாத்தனத்திற்கு அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம் .

இப்படம் பெரிய தோல்வியை அடையவில்லை எனினும் ஒரளவு சொல்லிக்கொள்ளும் படியான வெற்றிப்படமாகவே கருதப்படுகிறது . அதற்கு மிக முக்கிய காரணம் படத்தின் முதல் பாதியில் அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை அமைப்பு , தியேட்டரில் தன் தங்கைகளோடு படம் பார்க்கும் போது வரும் ஆபாசக்காட்சியில் சில்லரை காசுகளை சுண்டிவிடும் காட்சி அப்படம் பார்த்த யாராலும் அத்துணை சீக்கிரம் மறந்து விட இயலாது.

இவற்றில் சிறந்த படம் எது என்று விவாதிப்பதே தவறு . இவ்விரு படமும் மற்ற படத்தை விடவும் ஏதோ ஒரு வகையில் அதன் இயல்பில் முண்ணனியிலேயே இருக்கிறது . இவ்விரு படங்களையும் அதன் இயல்போடும் கதைசொல்லும் பாங்கின் அழகியலோடு பார்க்கையில் நம்மால் இரு படங்களையும் ரசிக்க இயலும் என்பது உண்மை . உலகசினிமா வெளிநாட்டு ஸ்காட்ச் என்றால் நம் பாக்யராஜின் சினிமா உள்ளூர் கள்ளு . இரண்டுமே போதை தருவது . உடலுக்கும் நல்லது . சுவையானதும் கூட .

திரைக்கதைகளின் முக்கியத்துவத்தை உணர , சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவனும் கட்டாயம் காண வேண்டிய திரைப்படங்கள் இவை . இவற்றில் சிறந்ததாக ஒன்றோடொன்றை ஒப்பிட இயலாது . தாவணிக்கனவுகள் திரைப்படத்தை இப்போது பார்க்க நேர்ந்தாலும் இன்னும் அப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் புதிதாக உணரலாம்( சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற அப்படத்தின் ரீமிக்ஸான '' ஒரு நாயகன் உதயமாகிறான்'' பாடலே சாட்சி ) , அது போலவே சினிமா பேரடிசோவும் . சினிமா பேரடிசோ படத்தை இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு பார்த்தாலும் அதன் காட்சிகள் இளமையாய் தோன்றும் .

உணர்வு சார்ந்த இவ்விரு படங்களுமே திரைப்படங்களில் திரைக்கதையின் முக்கியத்துவத்தை நமக்கு எப்போதும் எல்லாவகை ரசிகனுக்கும் உணர்த்த வல்லது .