Pages

06 January 2009

சேரிவாழ் கோடீஸ்வரன் !



நம்மில் அனைவருக்கும் ஒவ்வொரு தேடல் இருக்கும். சிலருக்கு பணம் , சிலருக்கு புகழ் என அனைவருக்கும் ஒரு தேடல் கட்டாயம் இருக்கும். உங்களுக்கு பல கோடி பணம் அல்லது பல காலமாக நீங்கள் தேடிவரும் உங்கள் முதல் காதலி கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்.
வெற்றி எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. தோல்வியடைந்தவனின் தோல்விக்கு யாரும் காரணங்களை ஆராய்வதில்லை. சமூகத்தின் அடித்தட்டில் வாழும் ஒருவன் யாரும் அடையமுடியா வெற்றியை பெற்றால் அதற்கு ஆயிரம் கற்பிதங்களையும் , அவ்வெற்றியை ஒரு கேள்விக்குறியாக்கவும் முயல்கிறது.


உங்கள் அலுவலகத்தில் தேநீர் பரிமாறும் டீக்கடை சிறுவன், அவனது பெயர் தெரியுமா உங்களுக்கு ? தீடீரென ஒரு நாள் கோடீஸ்வரன் ஆகிவிட்டால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள இயலுமா? . சில ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய ச.ம.க என்னும் பிரபல கட்சியின் தலைவர் ஏற்று நடத்திய நிகழ்ச்சி கோடீஸ்வரன். அந்நிகழ்ச்சி சன்டிவியில் ஓளிபரப்பாக துவங்கிய நாளில் இருந்தே பட்டித்தொட்டியெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு தொ.கா. நிகழ்ச்சி. அது போன்ற ஒரு நிகழ்ச்சியில் மும்பையின் சேரியில் வாழும் ஒரு இளைஞன் 2 கோடிகளை வெல்கிறான். அந்நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கே அவனது வெற்றியில் சந்தேகம் . போலீஸ் அவனை சித்ரவதை செய்து ஒரு கேள்வியை முன்வைக்கிறது . அது அந்த 14 கேள்விகளுக்கும் உனக்கு எப்படி பதில் தெரிந்தது எனபதே . அதற்கான விடைகளையும் அவர்களே அளிக்கின்றனர் . அவை நீ ஏமாற்றினாயா ? விடைகள் எழுதித்தரப்பட்டதா ? யாராவது உதவினார்களா? என்பதே. அந்த இளைஞன் அத்தனை சித்ரவதைகளுக்கு பின் ஒரு பதிலைக் கூறுகிறான் . அது '' எனக்கு அக்கேள்விகளுக்கான விடை தெரியும்'' என்பதே .

இப்படித்தான் SLUMDOG MILLIONIORE திரைப்படம் துவங்குகிறது. விகாஸ் சுவரூப் என்னும் இந்திய எழுத்தாளரின் Q & A என்னும் ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. இப்படத்தின் இயக்குனர் டானி பாய்ல் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் . அவரது முந்தைய திரைப்படங்களான THE BEACH மற்றும் 24Days Later போன்றவை அவ்வியக்குனரின் வெவ்வேறு தளங்களின் ஆளுமையை நிரூபிப்பதாக இருந்திருக்கிறது. மும்பையின் தாராவி சேரிப்பகுதியை மையமாக வைத்து இதுவரை வந்த படங்களில் காட்டியிருந்த நமது சேரிகளில் இருந்து விலகி இப்படத்தில் மிக புதியதாய் , அவற்றின் உண்மை நிலையை நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.



அதேபோல மும்பை கலவரம் குறித்த பார்வையையும் , மும்பை நகர தெருவோர பிச்சைக்கார குழந்தைகளின் வாழ்க்கை குறித்தும் , அவர்களது தேடல் குறித்தும் அக்கறையோடு ஒரு வெளிநாட்டினரின் மனநிலை அல்லது பார்வையில் அல்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
இது போன்ற கச்சாவான கதையை நமது இயக்குனர்கள் இயக்கியிருந்தால் இப்படி ஒரு திரைப்படம் வந்திருக்குமா எனத்தெரியவில்லை. அதற்கான வாய்ப்புக்கள் இந்தியாவில் மிகக்குறைவே.

படத்தின் கதை அந்த கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் 14 கேள்விகளையும் அந்த கேள்விகளுனூடே தொடர்புள்ள அவ்விளைஞனனின் வாழ்க்கையிலும் பயணிக்கிறது. அதில் அவன் சிறுவயதில் சந்திக்கும் ஒரு சிறுமி . அவள் மீதான ஈர்ப்பு . அதற்கான தேடல் . அதுவே பிற்காலத்தில் அவனை அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்கிறது என்பதாக கதை நகர்கிறது. படம் முழுக்க விரவியிருக்கும் முக்கிய பாத்திரங்களான ஜமால்,சலீம் மற்றும் லத்திகா என இன்னும் சில பாத்திரங்களின் பின்னால் ஒரு தேடல் இருக்கிறது. ஒருவன் பணத்தை தேடுபவனாகவும், ஒருத்தி வாழ்க்கையை தேடுபவளாகவும் , இன்னொருவன் தனது மீண்ட காதலை தேட்பவனாகவும் கதை நகர்கிறது.

கதையின் முக்கியப்பாத்திரமான (வெற்றி பெறும் இளைஞன் )ஜமீலாக , தேவ் படேல் நடித்திருக்கிறார் அல்லது வாழ்ந்திருக்கிறார். காவல்நிலையத்தில் போலீஸிடம் தெனாவெட்டாக பதில் சொல்வதாகட்டும் , தனது இழந்த காதலிக்காக உருகும் காட்சியாகட்டும் அசத்தல். புதுமுகமாம் . நம்ப முடியவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த டிவி நடிகரான இவர் இந்திப்படங்களில் அல்லது இந்தியப்படங்களில் நடிப்பாரா? தெரியவில்லை.

கதையின் இன்னொரு மிகமுக்கியப்பாத்திரம் ஜமீலின் அண்ணனாக வரும் சலீமின் பாத்திரம் . இப்பாத்திரப்படைப்பு சிட்டி ஆஃப் காட்ஸ் திரைப்படத்தின் வில்லன் (அ) ஹீரோ (இரண்டும் ஓன்றுதான்) ஐ ஞாயபகப்படுத்தினாலும் , அந்த குரூரம் மற்றும் தம்பி மீதான அன்பை காட்ட இயலாமல் தவிப்பது . பணம் பணம் என்று தேடும் மனோபாவம் என பன்முகம் காட்டுகிறார்.

இந்தியில் முண்ணனி ஹீரோவோன அனில்கபூரின் பாத்திரம் படத்தில் மிகப்பெரிய பிளஸ். நம்மூரில் இப்படம் எடுக்கப்பட்டால் , அப்பாத்திரத்தில் யாருமே நடிக்க மறுப்பார்கள்.

ஆங்கிலத்திரைப்படமான இப்படத்திற்கு இசை நம்மூர் ஏ.ஆர்.ரஹ்மான். தேவையில்லாத குத்துப்பாடல்கள் , இணைக்கப்பட்ட மெலடி என்று ஏதுமில்லை . ஆனால் அதிரடி அசத்தல் பிண்ணனி மற்றும் பாடல்கள். படத்தில் பாடல்கள் காட்சியினூடே செறுகப்பட்டிருந்தாலும் தனியாக கேட்கவும் அருமையாகவே இருக்கிறது.

படத்தின் திரைக்கதை ஒரு விநாடிகூட தொய்வில்லாமல் நகர்த்தியமைக்காக இயக்குனரை பாராட்டியாகவேண்டும். இப்படி ஒரு கதையை , இப்படிக்கூட படமாக்க இயலுமா என்னும் கேள்வியை நம்மூர் இயக்குனர்கள் முன் வைக்கிறார் இயக்குனர்.

சில காட்சிகளில் இந்திய சினிமாத்தனங்கள் ( பல்லாயிரம் முறை பார்த்துவிட்ட ரயில் நிலையத்தில் காதலியுடன் சேரும் காதலன் , கிளைமாக்ஸில் திருந்தும் வில்லன் ) ஆங்காங்கள தென்பட்டாலும் , மொத்தமாக பார்க்கும் போது படத்தில் அக்குறைகள் பெரிதாக தெரியவில்லை. படத்தின் வேகம் ஒரு பல்ப் பிக்சன் நாவலைப்படிக்கிற உணர்வைத்தந்தாலும், படம் முடிந்த பின் அது தரும் அனுபவம் நிச்சயம் மறக்க இயலாததாக இருக்கும்.
முழுக்க முழுக்க இந்தியாவில் எடுக்கப்பட்டு ஏற்கனவே ரிலீசாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இம்மாதம்தான் இந்தியாவில் ரிலீசாகிறதாம்.

எனக்கு உலகசினிமாவாக இருந்தால் அது நிச்சயம் உலக முழுக்க ஏற்றுக்கொள்ள உகந்த திரைப்படமாகவே இருக்க இயலும் என்பதில் நம்பிக்கையுண்டு . இப்படத்தில் எடுத்துக்கொண்ட ஏழ்மையும் , காதலின் தேடலும் , கடைநிலை மனிதனின் வெற்றியும் அனைவருக்கும் பொதுவானவை. இது நிச்சயம் உலக சினிமாதான்.

இப்படம் பல்வேறு திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் பெற்றுவருகிறது . (விருது பெறும் படங்கள் சுவாரசியமாய் இருக்காது என நம்மூர் ஊடகங்கள் தவறான பிரச்சாரம் செய்துவிட்டதோ) .இப்படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது ஒரு புத்துணர்வை தருகிறது. அது போன்ற உணர்வைத்தரும் படங்கள் மிகக்குறைவே. (தாரே ஜமீர் பர் இதற்கு முன் இப்படி ஒரு அனுபவம் தந்த படம் )

SLUMDOG MILLIONIRE - உள்ளம் கவர் கள்வன் அல்லது திருடன் - உங்கள் உள்ளம் ஜாக்கிரதை