Pages

10 December 2008

புலியும் இனிப்பும் - தேநீரும் சைக்கிளும்


சைக்கிள் பாடம் :



ஆஸ்ரமத்தின் ஐந்து சீடர்கள் சைக்கிளில் சந்தைக்கு சென்றுவிட்டு திரும்புவதை தலைமை குரு பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்ததும் ஐவரையும் அழைத்தார் .

ஐவரையும் நோக்கி '' நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? '' என்று வினவினார்.

'' அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது ஐயா '' முதலாமவன் பதிலளித்தான்.

அவனைத்தட்டிகொடுத்து ''நீ பெரிய அறிவாளி , நீ வயதானகாலத்தில் என்னைப்போல் கூன் விழாமல் நிமிர்ந்து நடப்பாய் '' என்றார் குரு.

இரண்டாவது சீடனோ '' நான் சைக்கிள் ஓட்டும்போது என்னால் இயற்கை அழகை எளிதாகவும் விரைவாகவும் ரசிக்க முடிகிறது ஐயா ''

அவனை அருகில் அழைத்து '' உன் கண்கள் திறந்திருக்கின்றன நீ உலகை ரசிக்கிறாய் '' என்றார்.

மூன்றாவது சீடன் '' ஐயா நான் பயணிக்கையிலும் கூட மந்திரங்களை ஜெபிக்க முடிகிறது ''

குரு தன் கண்கள் விரிய '' அடேயப்பா உன் புத்திக்கூர்மை வியக்கவைக்கிறது'' என்று இரண்டு கைகளையும் சத்தமாக தட்டினார்.

நான்காவது சீடன் '' நான் சைக்கிளில் பயணிப்பதால் ஏகாந்த நிலையை அடைகிறேன் ஐயா '' என்றான்

குரு மனநிறைவோடு அவனை கட்டித்தழுவி '' நீ ஞானத்தை அடையும் பாதையில் பயணிக்கிறாயடா '' என்றார்.

ஐந்தாவது சீடன் நீண்ட அமைதிக்குப் பின் '' என் சைக்கிளை ஒட்டுவதற்காக என் சைக்கிளை ஒட்டுகிறேன் ஐயா! '' என்றான் .

குரு அவன் காலில் விழுந்து '' ஐயா, என்னை மன்னியுங்கள் , நீங்கள் என் சீடனாக இருக்க முடியாது , நான்தான் உங்கள் சீடன் '' என்றார்.

(CYCLE என்னும் ஜென் கதையிலிருந்து )


*****************************


ஞான சூன்யம் :

அந்த ஊரின் மிக உயரிய பல்கலைகழகத்தின் பேராசிரியர் அவர். ஊரின் ஜென்குரு ஒருவரை சந்தித்தார். பேராசிரியர் ஞானம் குறித்து பேசத் துவங்கினார். நிறைய விடயங்கள் ஞானம் மற்றும் முக்தி குறித்து விளக்கலானார். குருவோ அமைதியாக காலியாக இருந்த பேராசிரியரின் தேநீர் கோப்பையில் தேநீரை நிரப்ப ஆரம்பித்தார். அவர் தேநீரை ஊற்ற ஊற்ற பேராசிரியர் விடாது பேசியபடி இருந்தார். குருவோ முழுவதுமாக நிரம்பிய கோப்பையில் மேலும் மேலும் ஊற்றிக்கொண்டே இருந்தார் . அதைப் பார்த்துக்கொண்டிருந்த பேராசியரோ பொறுமையிழந்து '' சாமி என்ன செயறீங்க , அந்த கோப்பை ரொம்பிருச்சு , இதுக்கு மேல ஊத்தாதீங்க '' என்றார் .

குருவோ புன்னகைத்தபடி '' நீ இந்த கோப்பையை போன்றவன் ''

''உன் கோப்பையை நீ காலியாக்காமல் அதில் எப்படி ஞானத்தை நிரப்புவது ''

(empty your cup என்னும் ஜென் கதையிலிருந்து )


*************************


ஒருவன் காட்டுப்பாதையில் தனியே நடந்துகொண்டிருந்தான். ஒரு புலி அவனை விரட்டத் துவங்கியது. இவன் அதனிடமிருந்து தப்பித்து ஓடினான். ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து அதிலிருந்து தப்பிக்க ஒரு மரத்தின் கிளையை பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தான் . மரத்தின் கீழே புலி அவன் விழ காத்திருந்தது .

அதற்குள் ஒரு வெள்ளை மற்றும் கருப்பு எலி அந்த கிளையை சிறிது சிறிதாக கொறிக்கத் துவங்கின. முக்கால்வாசி கிளையை கடித்துவிட்டன. இன்னும் கொஞ்சம் கடித்தால் கிளை முறிந்து விடும். அங்கே அருகில் ஒரு கொய்யா மரம் அதில் ஒரு கனிந்த கொய்யா , அவன் தன் ஒரு கையை கிளையிலும் மறுகையை பழத்திலும் வைத்து அதை பறித்தான் . தின்னத்துவங்கினான் .

'' ஆஹா ! என்ன சுவையான கொய்யா , என்னே இனிப்பு ''
( Fleeing the tiger என்னும் ஜென் கதையிலிருந்து )


**********************