
குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியானது , கள்ளம் கபடமில்லாதது , வேடிக்கைகளும் வினோதங்களும் நிறைந்தது , அங்கும் பொறாமை, கோபம் , வெறுப்பு , சூழ்ச்சி உண்டு அதன் ஆயுள் குறைவு , மகிழ்ச்சி மட்டுமே அங்கு சாகா வரம் பெற்றது . நம் அன்றாட வாழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்டது , குழந்தைகளின் உலகம் . நாம் மகிழ்ச்சியடையும் எல்லா நிகழ்வுகளிலும் குழந்தைகள் மகிழ்ச்சியடைவதில்லை , அதேபோல குழந்தைகள் மகிழும் எல்லா தருணங்களிலும் நாமும் மகிழ்ச்சியடைவதில்லை . மகிழ்ச்சி மட்டுமில்லை கோபம் , பயம் , வெறுப்பு என எல்லா விடயங்களிலும் அவர்களின் உலகம் முற்றிலும் மாறுபட்டிருக்கும் . உங்களுக்கு கிடைக்க இருக்கும் ஒரு கோடி ரூபாய் கான்ட்ராகட்டை விடவும் அவர்களுக்கு ஒரு சிறிய சீனி வெடியும் கடலைமிட்டாயும் உயர்ந்தது .
ஒரு சீனி வெடியும் கடலைமிட்டாயும் நமக்கு அற்பமானதாய் இருக்கலாம் , அது அவர்களுக்கு கோடிக்கு சமமானது . பயம் கூட அதை ஒத்ததே . உங்கள் குழந்தை பருவத்தில் எதையாவது தொலைத்து விட்டு அதற்காக பயந்து அதை வீட்டிலும் மறைத்து விட்டு என்றாவது மாட்டிக்கொள்வோமோ என பயந்து பயந்து தினமும் கடவுளிடம் அதை எப்படியாவது கிடைத்துவிட செய் என வேண்டிக்கொண்டதுண்டா . அது நிச்சயம் உங்கள் வாழ்வில் மறக்க இயலாத ஒரு தருணமாகத்தான் இருந்திருக்கும் . அப்படி ஒரு சூழலையும் அதனால் பரிதவிக்கும் இரண்டு குழந்தைகளை பற்றியுமான கதையை அதீத கற்பனையின்றி இயல்பாய் சொல்லியிருக்கும் படம் CHILDREN OF HEAVEN .
ஈரானின் ஒரு சிறிய கிராமத்தில் , ஒரு சிறுவன் தன் தங்கையின் அறுந்து போன ஷூவை தைக்க போய் அதை வரும் வழியில் எதிர்பாராமல் தொலைத்துவிட்டு அதை வீட்டில் தங்கையிடம் சொல்கிறான் . தங்கையும் அவனும் அவனது ஒரு பழைய கேன்வாஸ் ஷூவை மாற்றி மாற்றி அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்ல , அதனால் ஏற்படும் விளைவுகளும் அதனை தொடர்ந்து இச்சிக்கலில் இருந்து அக்குழந்தைகள் எப்படி மீள்கின்றனர் என்பதுமாக சின்ன சின்ன காட்சிகளாக கதை விரிகிறது .
ஒரு சாதாரண கதை , அக்கதையை அக்குழந்தைகளின் பார்வையில் கொண்டு செல்வதும் அக்குழந்தைகளினூடே கதை பயணிப்பதும் , அவர்களின் ஏக்கமும் வலியையும் அடுத்ததடுத்த காட்சிகளால் படம் பார்க்கும் பார்வையாளனை உணரைவைப்பதும் படத்தின் இயக்குனரின் வெற்றி . அது தவிர ஏழைகளின் வீட்டில் வளரும் குழந்தைகளினூடே காணும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையும் , சகோதரத்துவமும் , தவறுகள் செய்துவிட்டு அதை மறைக்க இருவருமாக சேர்ந்து போடும் திட்டங்களும் , ஏழ்மையின் ஏக்கமுமாக அருமையான திரைக்கதையால் இப்படம் நெடுக படர விட்டிருப்பதும் இப்படத்தின் சிறப்பு ,
படத்தின் வசனங்கள் ( ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க பட்டிருந்தாலும் ) நம்முடைய அன்றாட நிகழ்வுகளில் நாம் காணும் மிக எளிய வகையில் உள்ளது . ஆர்ப்பாட்டமில்லாத இசை , அதற்கேற்ற இயல்பான வெளிச்சத்தில் படமாக்கப்பட்ட காட்சிகள் , அனைத்து கதாபாத்திரங்களின் மிக அருமையான நடிப்பு என இப்படம் முழுமையாக அனைவரும் கண்டுகளிக்கத்தக்க படமாகவும் உள்ளது .
இப்படம் ஈரான் படமாக இருந்தாலும் , அவர்களது வாழ்க்கை முறை நம்நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையை ஒத்ததாக இருப்பதால் , இப்படம் பார்க்கையில் ஒரு இந்திய படம் பார்ப்பதை போன்ற ஒரு உணர்வே ஏற்படுகிறது .
படத்தின் முக்கிய பாத்திரமான சிறுவனாக ( படத்தில் அவனது பெயர் அலி ) அமீர் பாரா , தனது இயல்பான நடிப்பாற்றலால் வியக்கவைக்கிறான் , அவனது வீட்டில் அப்பா முன்னால் அமர்ந்து கொண்டு தேனீர் அருந்துகையில் தன் தங்கையுடன் தனது நோட்டுப்புத்தகத்தில் எழுதிக்காட்டுவதும் , தினமும் ஷூவினால் பள்ளிக்கு லேட்டாக சென்று தாறுமாறாக பொய் சொல்லிமாட்டிக்கொள்வதும் , பரிசாக கிடைத்த பேனாவை தங்கைக்கு தரும்போதும் , இறுதிக்காட்சியில் தங்கைக்காக முதல் பரிசு வேண்டாம் மூன்றாம் பரிசு வேண்டும் என வேண்டிக்கொண்டு ( மூன்றாம்பரிசுதான் ஷூ ) ஒடுவதுமாக அதகளம் செய்கிறான் .
அப்பாவி தந்தையுடன் விடுமுறைநாளில் நகரத்தின் பணக்காரர்கள் வசிக்கும் காலனியில் தோட்டவேலை செய்ய செல்ல , அங்கே செல்வந்தர்களால் விரட்டப்படுவதும் , சிறுவன் மிக அருமையாய் வீடுவீடாக சென்று தோட்டவேலைகள் தேவையா என்று கேட்பதும் , அதன் மூலம் பெற்ற பணத்தில் தந்தை வீடு வாங்க வேண்டும் , கார் , ஏசி வாங்க வேண்டும் என்று கூற அவனோ தங்கைக்கு ஒரு ஷீ வாங்க வேண்டும் என்று கேட்பதும் மிக இயல்பு .

இது தவிர தங்கையாக நடித்திருக்கும் குழந்தையின் நடிப்பு , தனது காணாமல் போன ஷூவை அதே பள்ளியில் படிக்கும் இன்னொரு மாணவி போட்டிருப்பதை கண்டு அவளிடம் அதை எப்படி கேட்பது என்று புரியாமல் தவிப்பதும் , அவளை பின் தொடர்ந்து சென்று அவளது குடும்பம் இவளதை காட்டிலும் மிக ஏழ்மையில் இருப்பதை அறிந்து , வாடிய முகத்துடன் அங்கிருந்து விலகுவதும் , ஷூக் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஷூக்களை ஏக்கமாய் பார்ப்பதுமாய் தனது அண்ணாவின் பெரிய அளவு ஷூ ஒடும் சாக்கடையில் விழுந்து விட அதை அழுகையுடன் துரத்திக்கொண்டு ஒடுவதும் அது பாதளத்தில் சிக்கி கொண்டு வெளியே வராது நிற்பதால் அதை படுத்தபடி பார்த்து அழுவதுமாய் நம் வீட்டு குட்டி பெண்ணை கண் முன் நிறுத்துகிறார் . அக்குழந்தை படும் பாட்டை கண்டு நாமே அக்குழந்தைகளுக்கு ஷூக்கள் வாங்கி தந்துவிடலாம் என்பது போன்ற காட்சியமைப்பு பிரமிக்க வைக்கிறது .
உலகசினிமா என்பது பெரியவர்களுக்கானது என்பது போன்ற ஒரு எண்ணமும் , அது படித்தவர்களுக்குமானது , சாதாரணமானவர்களுக்கு புரியக்கூடாததும் என்ற கருத்தும் இருக்கிறது . ஆனால் இப்படம் அது போன்ற கருத்துக்களை உடைத்தெறிகிறது .
இது நிச்சயம் உலகசினிமாதான் ... குழந்தைகளுக்கான உலகசினிமா. நம் வீட்டின் குழந்தைகள் கட்டாயம் காண வேண்டிய உலகசினிமா . நம்மிடையேயும் நம் குழந்தைகளிடமும் மறைந்து வரும் சகோதரத்துவத்தை மிக சாதாரணமாய் போகிறபோக்கில் உணர்த்திச்செல்லும் இப்படம் அனைவரும் காண வேண்டிய ஒரு பொக்கிஷம் .
_____________________________________________________________________________________

***************************
அவ்ளோதான்பா ;-)
****************************