இன்னும் ரெண்டு நிமிடம்தான் இருந்தது அந்த டிரெயினை பிடிக்க , ஒரு கையில் சரவணாஸ்டோர்ஸ் பை. அது நிறைய விளையாட்டு சாமான் , இன்னொரு கையில் சூட்கேஸ் , இரண்டையும் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஒடினேன் .
வண்டி எண் 6704 சென்னையிலிருந்து மங்களூர் வரை செல்லும் விரைவுவண்டி 3ஆவது பிளாட்பாரத்தில் இருந்து உடனடியாக புறப்படும் என இந்த அறிவில்லாத அறிவிப்பாளர் வேறு ஒலிப்பெருக்கியில் அலறினாள் . அறிவுகெட்டவளே இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பொறுடி என்று முனகியபடியே ஓடினேன் .
மனது திக்கு திக்கு என்று அடிக்க , காலையில் போட்ட பேர் அண்டு லவ்லி முகத்தில் வியர்வையில் என் அழகை அழிந்து அழித்துகொண்டிருந்தது , ஸ்போர்ட்ஸ் பர்பூயும் வேறு வியர்வையில் கரைகிறது , கடுப்பாய் இருந்தது , ஆசையாசையாய் போட்டுக்கொண்டது , வீணாய்ப்போகிறதே என்கிற மன உளைச்சல் வேறு . காலையில் குடித்த காபி வேறு எதுக்களிக்கிறது.
அப்படா ஒரு வழியாய் ஜி7 பெட்டியை பார்த்துவிட்டேன் , நிம்மதி பெருமூச்சு விட மூச்சை உறிஞ்சினால் அதற்குள் வண்டி கிளம்பி விட்டது . வண்டி நகர நகர அதில் ஏறி , 25 ஆம் எண்ணை தேடினேன் , அதில் ஒரு அழகிய யுவதி அல்லது டக்கர் ஃபிகர் அல்லது செம மாலு அமர்ந்திருந்தது அல்லது அமர்ந்திருந்தாள் . (என்ன தவம் செய்தேன் ) . அவளை பார்த்ததுமே தெரிந்து போனது மலையாளி தான் என்று . அவளை பார்த்த சில விநாடிகளில் அதை ஊகித்து கொண்டேன் .
அட நீங்கள் வேறு முகத்தை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் , நீங்கள் நினைப்பது போல் அல்ல , நெற்றியில் சந்தனமும் , ஈரத்தலையில் போட்ட தேங்காய் எண்ணையும் காட்டிக்கொடுத்தது .
அவளை பார்த்ததும் , அவளது இருக்கைக்கு மேலே வலது மூலையில் இருந்து சிறிய இடத்தில் எனது இரண்டு பெரிய பைகளையும் வைத்துவிட்டு , விறுவிறுவென பாத்ரூம் சென்று முகத்தை அழகாக்க முயன்றேன் . பல முறை முயன்றும் தோல்விதான் , இந்த வழுக்கை வேறு எவ்வளவோ முயன்றும் மறைய மாட்டேன்கிறது . ஒரு வழியாய் சுமாராய் (நிஜமாகவே சுமாராய் ) அழகாகினேன் .
அந்த கோச்சில் மொத்தமாய் பத்துபேர்தான் இருந்தனர் . சிறப்புரயில் என்பதால் யாருக்கும் தெரியவில்லை போல .
''எக்யூஸ்மீ .. தி இஸ் மை சீட் '' என்று புன்னகைத்தேன் .
''ஓஓ ஸாரி , ப்ளீஸ் '' என்று எழுந்து எதிர் பக்கத்தில் அமர்ந்தாள் .
''ஆர் யூ கோயிங் டூ மங்களூர் ''
''ம்ம் '' என்றபடி ஜன்னலை முறைத்தாள் .
அதற்குள் ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்து அவள் பக்கத்தில் அமர அவளோ அச்சா இயாளு என ஏதோ மலையாளத்தில் கூற அவர் என்னைப்பார்த்து புன்னகைத்தார் . எனக்கு ஒரு புண்ணாக்கும் புரியவில்லை . அந்தாள் கட்டாயம் அவள் அப்பனாகத்தான் இருக்கவேண்டுமென தீர்மானித்துக்கொண்டேன் . மலையாளீஸ் கிட்ட எப்படி பேசறது , எனக்கு இங்கிலீசு கூட சுமார்தான் .
ஸோ நான் எப்போதும் போல ஆனந்த விகடனை பிரித்து படிப்பதுபோல திறந்து வைத்துவிட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன் , நல்ல உடல்வாகு , அழகிய சிரிப்பு , சிரித்தால் குழிவிழும் கன்னம் , மூக்குத்தி , காதில் ஜிமிக்கி , பியூட்டி பார்லருக்கு போகிறவள் போல மேலுதடுக்கு மேல் பூனை முடிகள் இல்லை , புருவத்தை வேறு செம்மையாக்கி செமயாய் இருந்தாள் . அவளது அப்பாவை வைத்துக்கொண்டே அவளை அதிகம் ரசிக்க மனம் இடம் தரவில்லை , பார்ரா உனக்கும் வயசாகி ஒன்பொண்ணோட இதே மாதிரி போறப்ப ஒம்பொண்ண எவனாவது இப்படி சைட் அடிப்பான் என்று மனது பயமுறுத்தியது . புத்தகத்தில்(ஆமா ஆனந்த விகடன்தான் ) மூழ்கினேன் , எனது நண்பனின் கவிதை வந்திருந்தது .
எச்சில் காய்ந்திடாத முத்தத்தின்
ஈரமாய்
உறக்கத்தின் ஆழ்நிலையில் ஊட்டிய
உணவாய்
புணர்தலின் முடிவிலான இயக்கத்தின்
நனைதலாய்
தூரலிட்டுப் போயிருக்கிறது
ந
ள்
ளி
ர
ளி
ர
வு
ம
ழை
ம
ழை
ஒரு எழவும் புரியவில்லை , வெளியில் மழைவேறு . கொஞ்சம்கூட புரியாத மாதிரி எழுதினாதான் கவிதையோ என நண்பனை நாலு நல்ல வார்த்தையில் வைந்தேன் . இவனோடெல்லாம் எப்படி நான் நட்பு வைத்திருக்கிறேன் என எண்ணிக்கொண்டேன் . மனசாட்சி தடுத்தாலும் நடுநடுவே அந்த கேரளத்து பைங்கிளியாளை காணத்தவறவில்லை .
''எக்ஸ்க்யூஸ்மீ !! ஈஸ் திஸ் ஜி7 '' ஜெயம் ரவியை நினைவுபடுத்தும் தோற்றம் கொண்ட ஒருவன் என்னிடம் கேட்க , நிமிர்ந்து பார்த்தால் ஆள் 6.2 இருப்பான்போல , MBA - MASTER OF BAD HABITS என்ற வாசகத்துடன் டிஷர்ட்டும் லெவி ஜீன்ஸுமாய் மிக மேன்லியாக இருந்தான் . நான் முறைத்தபடியே
''எஸ் '' என்றேன் . அழகான ஆண்களை கண்டாலே வயிற்றுக்குள் எரிமலை .
''ஐஆம் 24 '' என்றபடியே எனது விளையாட்டு சாமான் பையை உள்ளே வைத்து தள்ளி அவனது பேக்பேக்கை திணித்தான் . எனக்கு அவனது அழகின் எரிச்சல் வேறு இதில் விளையாட்டு சாமானை உள்ளே அழுத்தியதில் கோபம் தலைக்கேறியது , திட்டிவிட்டேன் .
''சாரி சார் எனக்கு தெரியாது அதான் . மன்னிச்சிருங்க ப்ளீஸ் '' என்று கெஞ்சினான் . எனக்கு ஹாஹாஹா என சிரிக வேண்டும் போலிருந்தது . பின்னே அவனை ஜெயித்துவிட்டோம் என்கிற மமதை இருக்காதா ! ! அதுவும் இதை பார்த்துக்கொண்டிருந்த அந்த கன்னிமான் என்னை பார்த்து சிரித்தால் வராத பின்னே .
வண்டி மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது , இந்த வேகத்தில் போனால் கோவையை அடைய எப்படியும் 10 மணி நேரம் ஆகிவிடும் போலிருந்தது .
''சார் வணக்கம் , நீங்க மங்களூரா !! '' ஜெயம் ரவி , அவள் அப்பாவிடம் கொக்கி போட்டான் .
''ஆமா சார் , நீங்க?'' ... அடப்பாவி நீங்க தமிழ்தெரிஞ்ச மலையாளியா என்று மனம் கொந்தளித்தது.
''நானும் அங்கதான் போறேன் , இது உங்க பொண்ணா சார் ''
''ஆமா சார் , தீபாவளிக்கு அவங்க பாட்டி வீட்டுக்கு கொண்டு போய் விடப்போறேன் ''
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது , அந்த வித்தையெல்லாம் ஏன் எனக்கு கைவர மாட்டேன்கிறது என என்னை நானே திட்டியபடி ஆனந்தவிகடனில் கண்ணையும் அவர்களது பேச்சில் காதையும் வைத்திருந்தேன் .
''சார் நீங்க பெரம்பூரா '' தூண்டில் மேலும் தொடர்ந்தது . ஆண்டவா அவளுக்கு அவனை பிடிக்காமல் போகட்டுமே.
''ஆமா சார் எப்படி கண்டுபுடிச்சீங்க ''
''சார் நீங்க அங்க ரயில்வேஸ்டேஷன் பக்கத்தில டீக்கடை வச்சிருக்கீங்களே , நான் பாத்திருக்கேன் சார் ''
'' அட ஆமா சார் ,''
''நேத்து நைட்டு சென்னை ஃபுல்லா செம டிராபிக் சார் , நைட் பிளைட்ட மிஸ்பண்ணிட்டேன் ''
அவர்கள் ரெண்டு பேரும் பேசும் போது இவளுக்கு என்ன வந்தது , அவளுமா அவனுடன் பேச வேண்டும்
''ஆமாங்க நான் கூட காலேஜ்லருந்து வரப்போ ரொம்ப லேட் ஆகிருச்சு , கத்திப்பாரால மாட்டிகிட்டேன் ''
இவளுக்கு என்ன பெரியவங்க பேசும் போது இடையில் பேச்சு வேண்டி கிடக்கு . அதிகப்பிரசங்கி .
''அட எந்த காலேஜ்,.... எஸ் ஆர் எம்மா''
''ஆமாங்க .. எப்படி கண்டுபுடிச்சீங்க ''
''சும்மா ஒரு கெஸ் பண்ணேங்க '' என்று புன்னகைத்தான் . சிரிக்கும் போது மேலும் அழகாய் இருந்து தொலைத்தது அந்த ராஸ்கலின் முகம் . அதற்கு நடுவில் அவளது அப்பா , சாப்பாடு வாங்க கிளம்பினார் . இப்போதுதான் போக வேண்டுமா.. அவன் அவளிடம் மிக ஜாலியாக சங்கோஜமில்லாமல் கண்டதையெல்லாம் பேசினான் வழிந்தான் . பெண்களென்றால் ஏன்தான் இப்படி அலைகிறார்களோ . ஊர் உலகத்தில் பெண்களா இல்லை . ச்சீ என்ன உலகமடா இது .
அப்பா திரும்பி வந்தார் . '' என்ன தம்பி சாப்படறீங்களா '' என்று ஒரு வடையை திணித்தார் அவன் கைகளில் , அந்த அல்பமும் அதை வாங்கி தின்றது . ''தம்பீ எங்க வேலை செய்றீங்க ''
''நான் ஒரு மார்க்கெட்டிங் எக்ஸுகியூட்டிவ் சார் , அப்புறம் கதாசிரியர் ''
என்னது இந்த நாய் கதை எழுதறவனா , கிழிந்தது லம்பாடி லுங்கி , அதை அவன் சொன்னதும் அப்பனுக்கும் மகளுக்கும் தான் என்ன ஒரு மலர்ச்சி , அவள் ஆர்வமாய் ,
'' நீங்க கதைலாம் எழுதுவீங்களா , உங்க கதைலாம் எதுல வருது ''
'' குமுதம், விகடன்ல வரும் , அப்புறம் சினிமாக்கும் கதை எழுதறேன் ,அப்புறம் கோமதிஆன்லைன்.கோம்னு ஒரு வெப்சைட் கூட இருக்கு , இந்த வாரம் விகடன்ல பாக்கலையா காயாத காயங்கள்னு ஒரு கதை வந்திருக்குமே ''
''ஆமாங்க நான் படிச்சேன் , சிம்ப்ளீ சூப்பர்ப் , நீங்கதான் அந்த கோமதியா , நான் பொண்ணுனு நினைச்சேன் '' இவள் அவனிடம் வழிய துவங்கியிருந்தாள் .
'' தம்பீ , கதைலாம் எப்படி எழுதறீங்க , உங்க கதைலாம் நானும் படிச்சிருக்கேன் , ரொம்ப இயல்பா இருக்கும் , உங்களோட முத்தத்தின் முத்தம் கதை படிச்சி கதறி அழுதிருக்கேன் ''
எனக்கு பற்றி கொண்டு வந்தது , ______________ ( கெட்ட வார்த்தை ) இவன் கதைலாம் அஞ்சுகாசுக்கு தேறாது இவன இப்படி புகழறானுங்களே என்று எரிச்சலாய் இருந்தது , அதனால் பாத்ரூமில் சென்று மறைவாய் ஜன்னலுக்கு புகை போவது போல ஒரு தம்மை போட்ட பின்தான் எரிச்சல் குறைந்தது . நான் தம்மடிக்கும் கேப்பில் அந்த டாபர் நன்கு பழகியிருந்தது .
''சார் கதை எழுதறது ரொம்ப ஈஸி , இதோ பாருங்க இப்போ நாம பேசறதையே ஒரு கதையாக்கிரலாம் ''
''எப்படிங்க '' அதிகப்பிரசங்கி முந்திக்கொண்டு கேட்டது , கண்கள் விரிய , அடடா அந்த கண்களுக்குத்தான் என்ன ஒரு அழகு .
''இதோ உங்களாட்டம் ஒரு பேமிலி , அவங்கள ரயில்ல மீட் பண்ற ஒரு வழிப்போக்கன் ,, அவன் இவங்களோட நல்லா பழகறான் , இதோ இப்போ நான் சொல்ற மாதிரி கதை பத்திலாம் சொல்றான் , அவன் வாங்கி தர பிஸ்கட்ட வாங்கி அவங்க சாப்பிடறாங்க , சாப்பிட்டவங்களுக்கு ஒன்னும் ஆகல ஆனா அந்த கதாசிரியனோட பொருளலாம் காணம போயிடுது அவன் மயங்கி கிடக்கறான் , ஊரு வருது அவங்க கூட வந்த பேமிலய காணல ''
''அடேங்கப்பா சூப்பர் தம்பி , கதை அதுல ஒரு கருத்து , அதுவும் டிரெயினில தெரியாதவங்க குடுக்கறத சாப்பிடக்கூடாதுனு ''
இதெல்லாம் ஒரு கதை இதற்கு ஒரு சூப்பர் வேறு , நல்ல வேளை அதற்குள் சேலம் வந்திருந்தது , இவனே போய் மூவருக்கும் காபியும் பிஸ்கட்டும் வாங்கிவந்தான் , அவர்களோ என்னங்க நீங்க நீங்களே பிஸ்கடு குடுத்து ஏமாத்தற கதை சொல்லிட்டு வாங்கி தரீங்க வேணாங்க என்று மறுக்க , இவனோ சிரித்து விட்டு சார் குடிங்கசார் நானே சொல்லிட்டு நானே பண்ணுவேனா என்று கெஞ்சி அவளிடம் கொஞ்சி அதை கையில் திணித்தான் , என்னை பார்த்தவன் இளக்காரமாய் ஒரு பிஸ்கட்டை எடுத்து என்னிடம் நீட்டி '' சார் , ஒரு பிஸ்கட் சாப்பிடுங்க '' என்றான் , நான் வெறுப்பாய் வேண்டாம் என்றேன் , அவனோ விடாது சார் ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சினான் ,
அதற்குள் அந்த பெண் வேறு '' எடுத்துக்கோங்க '' என்று ஒரு மெல்லிய புன்னகையுடன் கூற அதையும் அவளது புன்னகையையும் எடுத்துக்கொண்டேன் , அவளது உதட்டின் கீழே ஒட்டியிருந்த பாலின் ஆடை அத்தனை அழகாய் இருந்தது . கடித்து தின்ன வேண்டும் போலிருந்தது அந்த பாலாடையை , அதனிடத்திலிருந்தே .
அவன் மேலும் பேசிக்கொண்டே வந்தான் , அவளிடம் நான் ஒருவன் இருக்கிறேன் என்பது கூட கவனிக்காமல் டிரெயின் பற்றிய ஒரு செக்ஸ் ஜோக் வேறு , அவள் தந்தை இல்லாத போது பேசி போன் நம்பர்(பர்சனல் மொபைல்நம்பராம் கூட வாங்கி விட்டான் . எனக்கு மனம் கொந்தளித்து கொப்புளித்தது . பாவி பாவி என்று வைந்து கொண்டே வந்தேன் மனதுக்குள் ,
வண்டி ஈரோட்டை தாண்டியபோது , மெல்லிய உறக்கம் வர கண்ணயர்ந்தேன் .
'' கோவை சந்திப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது , கோயம்புத்தூர் ஜங்சன் ஆப் கா சுவாகத் ஹை , வெல்கம் டூ கோயம்புத்தூர் ஜங்சன் '' அதே அறிவில்லாத அறிவிப்பாளர் , கோவை ரயில் நிலையத்தில் என் தூக்கம் கலைத்தாள் .
விழித்து பார்த்தாள் , அவர்கள் இருவரும் ஆழ்ந்து உறங்கியபடியிருக்க , அவர்களது பெட்டியையும் அந்த கன்னிமானின் காதிலிருந்த ஜிமிக்கியையும் காணவில்லை , கழுத்திலிருந்த செயினையும் காணவில்லை , மோதிரம் இல்லை , நகையில்லாமல் கூட அழகாகத்தான் இருந்தாள் . அவர்களது பெட்டி இல்லை , எனது பெட்டி இருந்தது , சரவணா ஸ்டோர்ஸ் பை இருந்தது , வண்டி கிளம்ப துவங்கியிருந்தது , ஒடும் வண்டியிலிருந்து இரண்டு கைகளிலும் பைகளுடன் குதித்து இறங்கினேன் . அப்படா ஊர் வந்துவிட்டதென . நாளை தீபாவளி .
கோவை காற்றுதான் எத்தனை சுகமானது . இதமாய் குளிர்ச்சியாய் இருந்தது . ஹாஹாஹா என்று சிரிக்க வேண்டும் போலிருந்தது .