Pages

29 October 2008

சேவல் - செம லோக்கல் மாமு....


சேவல் :

சேவல் சண்டைகள் பார்த்திருக்கிறீர்களா , அதில் இரண்டு சேவல்களை மோத விடுவார்கள் , அவை மோதி கொள்ளும் போது அதில் இருக்கும் மூர்க்கத்தனமும் , வன்முறையும் வேகமும் அந்த சேவல்களுக்கு நடுவில் மட்டுமல்லாது , அதை பார்ப்பவர் மனதிலும் தொற்றிக்கொள்ளும் . அதன் தாக்கம் மிக வன்மையும் வலியும மனதில் பதியும் . இத்தனைக்கும் அச்சேவல்கள் நமதாக இல்லாதிருந்தாலும் அப்படி ஒரு உணர்வு தோன்றும் .
1980களிலும் 75க்கு பிறகும் வெளியான பெரும்பாலான படங்களின் கதைகளிலிருந்து , ஒரு ஒரு பருக்கையாக எடுத்து மொத்தமாக கிண்டி , ஒரு பானையில் அடைத்து 20 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் சுண்டகஞ்சி போல வந்திருக்கும் படம் சேவல் . இது சாதாரண சுண்டகஞ்சியாக இல்லாமல் குடும்பத்தோடு அனுபவிக்க வல்ல சுண்டக்கஞ்சியாக கொடுத்ததில் படத்தின் இயக்குனர் ஹரி வெற்றிப்பெற்றுருக்கிறார் என்றே சொல்லவேண்டும் . பி&சி சென்டருக்கு படம் எடுக்க வேண்டுமா கூப்பிடரா ஹரியை என்பது போல படம் வந்திருக்கிறது . பி&சி ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து படத்தை எடுத்திருக்கிறார் ஹரி .

குயில்கள் கூவும் கிராமம் , ஒரு வில்லத்தனமான நாட்டமை , போக்கிரியான ஹீரோ , அம்மா இல்லாத அக்ரகாரத்து அழகு ஹீரோயின் , அவளை வளர்த்த பாசக்கார அக்கா , இடையில் காதல் , நாட்டமைக்கு ஹீரோயின் மீது கண் , அதனால் சிக்கல் , அக்காவுக்கு புற்றுநோய் , அதனால் அக்கா புருஷனை கல்யாணம் செய்து தியாகம் செய்யும் ஹீரோயின் , அவளுக்கு சிக்கல்தரும் நாட்டாமை , நாட்டாமையை பழிவாங்கும் ஹீரோ , முடிவில் சுபம் .

இந்த ஒரு பத்தி கதையை வடிவேலுவின் நகைச்சுவை , சிம்ரனின் செண்டிமென்ட் , பரத்தின் துள்ளல் என அழகாக முடிச்சு போட்டு குடும்பத்தோடு பார்க்க தகுந்த வகையில் திரைக்கதை அமைத்திருக்கின்றனர் . படத்தின் முதல் பாதியில் நகைச்சுவை மற்றும் இரண்டாம் பாதியில் செண்டிமென்ட் எனும் வெற்றி பார்முலாவோடு களமிறங்கியிருக்கிறார்கள் .

படத்தின் ஹீரோ பரத் , பரத்துக்கு பிஞ்சுமூஞ்சி , அதை தனது நான்கு நாள் தாடியில் மறைக்க முயல்கிறார் . படம் முழுக்க ஓடுகிறார் , மூன்று குத்தாட்ட பாடல்களில் குத்து குத்தென குத்துகிறார் , இரண்டு சண்டைகளில் அடித்து உதைக்கிறார் , இரண்டு சோகப்பாடலில் அழுகிறார் . படம் முழுக்க பருத்திவீரன் கார்த்தியை காப்பியடித்தது போல உணர்வு .

படத்தின் ஹீரோயின் பூனம் பஜ்வா ( என்ன பேரு!!) படம் முழுக்க வருகிறார் , கதையும் அவரை சுற்றியே பயணிக்கிறது , இளைத்து போன பானு போல இருக்கிறார் . கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார் . இறுதிக்காட்சியில் மொத்தமாய் தாய்மார்களின் மனதை கொள்ளை கொள்கிறார் . ( கிளைமாக்ஸில் மொட்டை அடித்துக்கொள்கிறார் அது நிஜ மொட்டையா அல்லது கிராபிக்ஸா தெரியவில்லை எப்படி பார்த்தாலும் அழகு!! )

படத்தில் முக்கிய பாத்திரத்தில் சிம்ரன் , நிறைவாக செய்திருக்கிறார் , சிம்ரனுக்கு லேசான தொப்பை ( சிம்முக்கு வயசாகிருச்சோ!! ம்ம் ) .படத்தில் கேன்சர் வந்த பிறகு மேக்கப்பில்லாமல் நடித்திருப்பார் போல படம் பார்த்துக்கொண்டிருந்த தோழர் அதை உறுதி செய்தார்.

வடிவேலு அடிவாங்குவதை வித்தியாசமாக முயற்சித்திருக்கிறார் . சில இடங்களில் குணச்சித்திர நடிப்பில் அசத்துகிறார் . திரையரங்கில் படத்தில் நடித்த மற்ற எந்த நடிகருக்கும் இல்லாத விசில் , வடிவேலு திரையில் தோன்றும் போதெல்லாம் வருகிறது . வடிவேலுவை பார்த்தேலே தாய்மார்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இது தவிர ராஜேஷ்,சவீதா ஆனந்த் , என இன்னும் நிறைய நட்சத்திரங்கள் , படத்தின் ஓட்டத்தில் வந்து வந்து போகின்றனர் .

இசை - இம்சை

ஒளிப்பதிவு மிக அழகாகவும் , படத்தில் இரண்டு சண்டை காட்சிகள் என்றாலும் படம் பார்க்கும் பார்வையாளன் மனதில் படம் நெடுக வன்முறையை ஓட விட்டிருப்பது அருமை . ( ரத்தமே இல்லாமல் வன்முறை )

படத்தின் இறுதிக்காட்சியில் பெரியார் கூறிய கருத்துக்களில் சிலவற்றை(மறுதார மணம் , பார்ப்பனிய எதிர்ப்பு , மூடநம்பிக்கைகள் ) மிக அழகாகவும் நாசூக்காகவும் இணைத்து , பார்வையாளன் மனதில் நச் என பதியவிட்டிருக்கிறார் இயக்குனர் . பெரியாரின் கருத்துக்கள் எப்போதுமே நம்மவர்களுக்கு விளக்கெண்ணெய் குடிப்பது போலத்தான் இருக்கும் , அதே விளக்கெண்ணெய் ட்ரீட்மெண்டை ஒரு சுவையான வாழைபழத்தில் வைத்து கொடுத்த இயக்குனருக்கு சபாஷ் . இது தவிர இது போன்ற ஒரு சர்ச்சைகுரிய விடயத்தை எடுத்துக்கொண்டு தைரியமாக படமாக்கியமைக்கும் இன்னொரு சபாஷ் .

படத்தின் பெரிய மைனஸ் , படத்தின் இரண்டாம் பாதியின் நீளம் , கொஞ்சம் குறைத்திருக்கலாம் , இரண்டாவது அரதப்பழசான செண்டிமென்ட் காட்சிகள் ( உதா ; புற்றுநோய் அதுவும் ரத்தப்புற்று நோய் ) . பாடல்கள் எரிச்சல் . அளவுக்கதிகமான வன்முறை ( ரத்தமே இல்லாமல் வன்முறையை பதியவிட்டிருப்பது , வடிவேலு காமெடியிலும் கூட ) . பரத்தின் நடிப்பு சமயங்களில் எரிச்சலூட்டுகிறது .

சமீபகாலமாக குடும்பத்தோடு பார்க்கவும் கொண்டாடவும் அதிகமாக படங்கள் வருவதில்லை , அந்த குறையை இப்படம் நிவர்த்தி செய்யும் . ( நேற்று தியேட்டரில் பார்த்த தாய்மார்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சி ) . இப்படம் பிராமணர்களை நிச்சயம் கவராது .

ஆனால் சாதாரண குடும்பத்து நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களை நிச்சயம் ஈர்க்கும் . (அதாவது பி&சி )

சேவல் - கமர்ஷியல் பிரச்சாரம்.