Pages

23 October 2008

கிழிஞ்ச டவுசர்



*************************




கோவையிலிருந்து பேரூர் போயிருக்கிறீர்களா , பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மிகப்பிரபலம் , மிகப்பழமையான கோவில் , ஊரும் மிகப்பழமையானதுதான் , அக்கால சிற்பங்களும் கல்வெட்டுக்களும் நிறைந்த ஒரு கோவில் , நம் கதை அவ்வூரைப்பற்றியும் கோவிலைப்பற்றியுமிலை , அந்த பாதையில் வழியில் இரண்டு ஊருக்கும் மத்தியில் செல்வபுரம் உள்ளது . செல்வபுரத்தின் மத்தியில் சிவாலயா தியேட்டர் , அதை ஒட்டி பிரியும் இரண்டு சாலைகளில் தியேட்டருக்கு மிக அருகில் கார்ப்பரேசன் எலிமெண்டரி ஸ்கூலுக்கும் இன்னொன்று மூன்று மைல் தூரத்தில் இருக்கும் சேரிக்கும் செல்வது . சிவாலயா தியேட்டரில் சினிமா ஓடிக்கொண்டிருந்தால் அதில் எலிமெண்டரி ஸ்கூல் பையன்களுக்கு வசனமாவது கேட்கும் . அவன் , அதாவது குமரன் இக்கதையின் நாயகன் அங்கேதான் படித்துக்கொண்டிருந்தான் , மூன்றாம் வகுப்பு ஒரே பிரிவு . அந்த பள்ளியில் ஏ பி சி டி என பிரிவுகள் இல்லை , மொத்தமாய் அவ்வகுப்பில் படிப்பவர் எண்ணிக்கை முப்பதைத்தாண்டாது.

வெட்டிவைத்த கேக்குபோல அடுக்கடுக்காய் அரைமஞ்சள் கட்டிடங்கள் , கருஞ்சிவப்புக் ஒடுகளின் கூரை ,நைல்நதி போல கூரையில் தண்ணீர் ஓடிய கருப்பு சுவடுகள் , சுண்ணாம்பின்றி சிதிலமடைந்த சுவர்கள் அதில் இலங்கை மலேசியா போல அங்கங்கே குட்டி தீவுகள் , அதை சுற்றி கூம்பு வடிவத்தில் வரிசையாய் அசோகர் மரம் , மரத்தின் கீழே காய்ந்து போன அசோகர் மர கறுப்பு பழங்களும் அதன் வெளிர்மஞ்சள் நிற காய்ந்த கொட்டைகள் , மரத்துக்கு மரம் தாவும் பெண்அணில்கள் அதனை கீகீகீ என்று துரத்தும் ஆண் அணில்கள் , அவைகளின் ஊடல் , கூட்டம் போட்டு முடிவெடுக்கும் காக்கைகள் .


மத்தியில் மைதானம் , மைதானத்தின் ஒரு பக்கம் துருப்பிடித்த கொடிக்கம்பம் , அதில் கொடியில்லை , இன்னொருபக்கம் சத்துணவுக்கூடம் , சுற்றி அங்கங்கே உடைந்த நிலையில் சுற்றுச்சுவர் , சுற்று சுவரினை சுற்றியும் ஒரடி உயரத்தில் சிறுவர்கள் அடித்த சிறுநீர் , மறுபக்கத்தில் ஒன்னரை அடியில் பெரியவர்கள் அடித்த சிறுநீர் ,மலம் அதிலிருந்து நூல் பிடித்ததுபோல சுற்றுசுவரை ஒட்டி சத்துணவுக்கூடம் , சோறு தின்னும்போது கெட்ட நாற்றம் குடலை பிடுங்கும் . கழுவி பல வருடமான கழிவறை அருகில் டைனில் ஹால் இருப்பது போல .

அந்த கூடத்தை நோக்கி நீலம் அதிகமாகிய வெள்ளை சட்டையும் காக்கி நிற அரை கால்சட்டையில் பயல்களும் வெள்ளைசட்டையும் நீலநிற நீளமான பாவடையில் பாப்பாங்களும் ஒருவரோடு ஒருவர் மோதித்தள்ளியபடி நின்றிருந்தனர் . கலைத்துவிட்ட எறும்புக்கூட்டம் போலிருந்த வரிசையை சத்துணவு ஆசிரியர் அசோகர்மரகுச்சியால் மிரட்டியபடி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார் .


அசோகர் மரக்குச்சியால் குண்டியில் அடித்தால் பிருஷ்டம் சிவந்துவிடும் வானவில்போல (ஆனால் ஓரே நிறத்தில்), அந்த வடு மறைய மூன்று நாளாவது ஆகும் வலி மறைய ஒரு வாரமாகும் . அந்த குச்சி அத்தனை வலுவாக இருக்காது , ஆனால் நன்றாக வளைந்து கொடுக்க வல்லது . அடிவாங்கினால்தான் தெரியும் அதனருமை . இளம்பிருஷடங்களில் ஆளமாய் பதிந்து விடும் .

குமரன் மூக்கில் சளி மஞ்சள் நிறத்தில் வழிந்து உதட்டின் வழியே வாய்க்குள் நுழையும்போது அதை புறங்கையால் வளித்துவிட்டான் . அந்த நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தான் . குமரனுக்கு பிடித்த முட்டை வெள்ளிகிழமைகளில்தான் சத்துணவில் கிடைக்கும் . வெள்ளை நிற முட்டைகளில் சில வெளிர் நிறத்திலும் , சில வேகாமலும் , சில உடைந்தும் , மஞ்சள் கரு பிதுங்கி வெளியாகிய நிலையிலும் , சரியாக உரித்திடாதும் முட்டையின் மேலேயே ஓட்டுடன் சிலவும் , குமரனுக்கு அப்படி பட்ட முட்டைகளை எப்போதும் பிடிக்காது , முட்டை என்றால் முழுமையாய் வளுவளுவென வெண்ணைதடவிய பளிங்குகல் போல எங்கும் உடைந்திடாமல் இருக்க வேண்டும் . இல்லையென்றால் அதை அப்படியே போட்டுவிடுவான் .

சத்துணவில் தரப்படும் சோறும் குழம்பும் அவனுக்கு எப்போதுமே இஷ்டமில்லாதது . வெள்ளிகிழமைகளில் மட்டும் முட்டையால் அது பிடித்துபோயிருந்தது . அவன் சிலகாலமாய் செல்லியம்மன் கோவில் நாகத்தா புத்தில் வாழும் பாம்பிடம் பிரார்த்திக்கிறான் என்றாவது ஒரு நாள் அவன் பள்ளியில் வாரம் முழுதும் முட்டை வழங்க .


தினமும் அந்த பாம்பு புத்தில் பலரும் முட்டைகளை வைப்பதை பார்த்திருக்கிறான் , அந்த பிரார்த்தனைக்கு பாம்பு புத்து நாகாத்தாவை விட சிறந்த கடவுளர் உண்டா ? . அவனது பிரார்த்தனைகள் விசித்திரமானவை ,நாகாத்தாவிடம் முட்டைக்காக பிரார்த்தனை செய்பவன் நல்ல செறுப்புக்காகவும் பிரார்த்திகப்பான் , அவன் இது வரை செறுப்புகளை அணிந்ததேயில்லை , ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குத்தான் பள்ளியில் இலவச செறுப்பாம், இவன் மூன்றாம் வகுப்புதான் .

பிரார்த்தனை லிஸ்ட் , இயேசுபிராணிடம் சிமெண்ட்டு வீட்டு அருண் அண்ணனின் ஆங்கிலம் , லட்சுமியிடம் தீபாவளிக்கு லட்சுமி வெடி ,கிருஷ்ணனினடம் ரஜினி போல முடி ,பிள்ளையாரிடம் ரயிலில் பயணம் ,பெருமாளிடம் காலையில் தேங்காய் பன் , பால் , ஹார்லிக்ஸ் ,சரஸ்வதியிடம் காமிக்ஸ் , சிறுவர்மலர் , அம்புலிமாமா , பூந்தளிர் , மூணு வேலை வீட்டில சோறு , சுடலை மாடனிடம் ஞாயிறு கறிசோறு , இளைத்துப்போகாத வேலைக்கு போகும் அம்மா ,பார்வதியிடம் அம்மாவை அடிக்காத அப்பா ,சிவனிடம் அம்மாவை அடிக்கும் அப்பாவின் சாவு.. குமரனுக்கு கடவுள் பக்தி ஜாஸ்தி .. ஆனால் கடவுள் இவன் பிரார்த்தனையை கேட்பதே இல்லை . கடவுளரெல்லாம் பிஸி.


வரிசையில் இவன் , பின்னால் கோபி , முன்னால் இளவரசன் , கோபியின் பின்னால் அம்பிகா , இளவரசனின் முன்னால் தேவி , தேவிக்கு முன்னால் ஆயிசா , அம்பிகாவிக்கு பின்னால் ரேகா , ரேகாவுக்கு பின்னால் முரளி , முரளிக்கு பின்னால் இவனுக்கு குறுகுறுக்குத் தரும் அஞ்சலி , அஞ்சலி வரிசையில் தள்ள ,முரளி ரேகாவை தள்ள , ரேகா அம்பியைத் தள்ள , அம்பிகா கோபியை தள்ள கோபி குமரன் முதுகில் கைவைத்து அம்பியைபின்னால் தள்ளினான் , அஞ்சலி மல்லாக்க விழுந்தாள் . சத்துணவு மாஸ்டர் ஓடி வந்தார் .

நாற்ப்பத்தி ஏழு , நாற்பத்தி எட்டு , நாற்பத்தி ஒன்பது , அதை சற்றும் கவனியாத குமரன் முட்டைகளை எண்ணியபடி முன்னால் நகர்ந்தான் . வரிசை மிக மெதுவாக நகர்ந்தது , முட்டைகள் தீர்ந்து விடுமோ என்கிற பயம் வேறு வந்து வந்து மிரட்டியது , முட்டைகள் தீர்ந்து விட்டால் அவ்வளவுதான் இனி அடுத்த வெள்ளிக்கிழமைதான் .

வரிசையில் நிற்கையில் யாரோ அவனது பிருஷ்டத்தில் பேப்பரால் தேய்ப்பது போலுணர்ந்தான் , அரண்டு போய் பின்னால் கைவைக்க பின்னால் கிழிந்து போன அவனது காக்கி நிற டிராயரின் நூல் நூலாய் நைந்து போன துளையில் கோபி பேப்பரை மடித்து வைத்திருந்தான் . ஏ போஸ்ட்டு பாக்ஸு போஸ்ட்டு பாக்ஸு என்று பின்னால் இருந்து முரளி,அம்பிகா,காஞ்சனா,கோமதி முன்னால் இளவரசன் , தேவி என கூப்பிடுவதை கேட்டு திரும்பி பார்க்காமல் நின்றான் .


அவனுக்கு மிகப்பிடித்த அஞ்சலிகூட அப்படியே கூப்பிடட்டாள். அவனப்பாவை மனதிற்குள்ளேயே வைந்து கொண்டான் .ஆயிரம்தான் இருந்தாலும் அஞ்சலி அப்படி சொல்லியிருக்கக் கூடாது . அவனுக்கு அவளை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா.. அவனிடம் கேட்டால் ரெண்டு கையையும் அகல விரித்து காட்டுவான் . என்னிடம் இப்போது கேட்டால் இன்பினிட்டி என்பேன் . அஞ்சலி அழகானவள் அவளுக்கும் அவனை பிடித்திருந்தது .

அவனுக்கு அழ வேண்டும் போல் இருந்தது. முட்டையை கூட சாப்பிடவில்லை . அவன் முட்டை சாப்பிடாததால் யாருமே மகிழ்ச்சியின்றி இருப்பதை போல உணர்ந்தான் . அந்த மஞ்சள் நிற குண்டு சோற்றையும் மங்கிய சாம்பாரையும் அப்படியே வைத்து விட்டான் . எதுவும் தின்னாமல் அந்த பள்ளியின் மைதானத்தில் விளையாடும் சக மாணவர்களின் டிராயர்களை பார்த்தபடி யாரிடமும் பேசாமல் மரத்தடியில் அமர்ந்திருந்தான் . எந்த பையன் டவுசரிலும் ஒட்டையில்லை . அஞ்சலியை பார்த்தான் அவள் பாவாடைதான் போட்டிருந்தாள் .

அதுவும் பல வித டவுசர்கள், துணிகள் , எல்லாமே காக்கிதான் என்றாலும் அதிலும் பல சேடுகள் சில பச்சை கலந்தது , சில மஞ்சள் , சில காப்பி , சில பட்டு போல மின்னும் , சில வரிவரியாய் , சில நைந்து போய் .

அவனுடைய டவுசர் சத்துணவில் கொடுக்கப்பட்டது . அது பருத்தியில் நெய்தது போல இருக்கும் , காற்றோட்டமாய் , சன்னமாய் , எளிதில் நைந்து விடும் .

டே குமரா வாடா தொட்டு விளையாட்டுக்கு என அஞ்சலி அழைக்க , போடி என்று விரட்டினான் . அவளை கல்லால் அடிக்க வேண்டும் போல் இருந்தது . அவளை கொல்ல வேண்டும் போல் இருந்திருக்கவேண்டும் அவள் மீதிருந்த எதுவோ ஒன்று அதை தடுத்திருக்கலாம் . கணக்கில் நல்ல மார்க் எடுத்து பணக்காரனாகி நிறைய டவுசர்கள் வாங்க வேண்டும் என எண்ணிக்கொண்டான் .

பள்ளி முடிந்தது , பள்ளி சுவற்றில் ஒட்டியிருந்த காவலுக்கு கெட்டிக்காரன் பட போஸ்டரை கவனித்தபடி நடந்தான் , அதில் பிரபுவின் காக்கி பேண்ட் அவனை வெகுவாய் கவர்ந்தது , அழகாக இருந்தது . அப்படத்தில் பிரபு போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார் அவருக்கு ஜோடி அஞ்சலியை போன்ற முகமுடைய ஒரு நடிகை பெயர் தெரியாது , அவன் பள்ளியில் அமர்ந்து கொண்டு சிவாலாயா தியேட்டரில் படம் ஓடும் போது அவ்வசனங்களை கேட்டு கேட்டு மனனம் செய்து வைத்திருந்தான் .

முழு டவுசர் போட்டு பாத்துக்கொண்டான் கற்பனையில்... அழகாக இருந்தது . முழு டவுசர் போட்டபடி ராக்கம்மாவுடன் (அஞ்சலியுடன் அவளுக்கு மஞ்சள் கலர் பாவாடை சட்டைபோட்டிருந்ததாக நினைவில் இல்லை) கைய தட்டினான் ... சிரிப்பு சிரிப்பாய் வந்தது , வெட்கப்பட்டுக்கொண்டான் ,அஞ்சலியை நினைத்தாலே அப்படித்தான். 

****************************



இன்னைக்கு எப்படியாவது அப்பாகிட்ட சொல்லி ஒரு டவுசர் வாங்கனும் வீட்டிற்கு சென்று வீட்டுப்பாடங்களை சீக்கிரம் முடித்துவிட்டு போட்டோஅண்ணன் வீட்டில் போய் சிறுவர்மலர் படிக்க வேண்டும். பலமுக மன்னன் ஜோ,விக்ரமன்கதை,சீனியூர் சீனிவாசன் கதை இப்படி நிறைய எண்ணிய படி இஸ்கூல் முடிந்துவிட்டபடியால் நட(க)ந்து வந்து கொண்டிருந்தான் .

வீட்டை அடைய வானம் இருட்டியிருந்தது .

அகண்டு பரந்த சேரி ,அதன் பக்கத்தில் சாக்கடை , சாக்கடை நெடுக மலம் , சிறுநீர் , திறந்தவெளி இலவச கக்கூஸ் , அதை சுற்றி பார்த்தீனிய செடிகள் , குண்டு விளையாடும் இளைஞர்கள் , மேல ரெண்டு , கீழ ஒண்ணு , பந்தயம் , வரிசையாய் ஒட்டி ஒட்டி குடிசைகள் , காலனி , அதிமுக கொடிகம்பம் , திமுக கொடி கம்பம் , காங்கிரஸ் , கம்யூனிசுடு , குண்டி கழுவாத நிர்வாண குழந்தைகள் , புரதமில்லாத வத்திபோன முலைகளுடன் அதன் அம்மாக்கள் , வொயின் ஷாப் , கையில் பாட்டிலுடன் சில்க் விளம்பரம் , சில்லைரைகாசுகளோடு வாசலில் கு.த க்கள் , பக்கத்து சந்தில் பத்து ரூபாய் விபச்சாரி , அதற்கு பக்கத்து சந்தில் குமரனின் வீடு அமைந்திருந்தது.

பூட்டில்லாத குடிசைவீட்டின் கதவை திறந்து பார்க்க அவனம்மா இன்னும் வந்திருக்கவில்லை , வீடு முழுதும் கும்மிருட்டு , தீப்பெட்டியை சாமி அலமாரியில் தேட அங்கேயுமில்லை , சாமி அலமாரி என்றால் சின்னதுதான் ஒரே ஒரு பிள்ளையார் மட்டும் இருப்பார் பக்கத்தில் காமாட்சி விளக்கு , பக்கத்திவீட்டு ராமாக்கா வீட்டில் போய் தீப்பெட்டி வாங்கி வந்து விளக்கேற்றி , தனது ஷோபா துணிக்கடை மஞ்சள்நிற புத்தகப்பையை ஒரு மூலையில் வைத்தான் . போன வருஷம் தீபாவளிக்கு அவனம்மா அவனுக்கு புதுச்சட்டை வாங்கி தந்தபோது கிடைச்சது .

தெருக்குழாயடியில் குப்பம்மாக்காவும் மீன் விக்கும் தேவகியக்காவும் தலைமயிறை கையில் பற்றியபடி அடித்துக்கொண்டிருந்தனர் . '' தேவிடியா முண்டை ஒன் புருஷன் தாண்டி வந்து என் _____ய நக்கினான் '' . '' உம் புருஷன்தாண்டி ஊர்ல இருக்கிற கிழவி _____ ______ கூட நக்கினான் '' , '' நீ அந்த மயிரான வளைச்சு போட்டது தெரியாதா '' '' அந்த மயிரானோட ______ _தான நீ மீன் கடை நடத்துற'' , போர்க்களம் போல் இருந்த அந்த குழாய் அருகில் அவர்கள் சண்டையிட அவன் சாவகாசமாய் அவர்களினூடே புகுந்து குழாயடியில் முகத்தை கழுவிக்கொண்டு கை கால்களில் தண்ணீர் விட்டு துடைத்து விட்டு , அந்த தெருச்சண்டைகளுக்கு நடுவிலே மீண்டும் புகுந்த வீட்டை அடைந்தான்.

பிள்ளையார் சாமி கும்பிட்டு , நெற்றியில் திருநீர் பூசி , வீட்டுப்பாடங்கள் செய்யலாமென புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு அப்பாவிடம் எப்படி கால்சட்டையும் செறுப்பும் கேட்பதென்று யோசித்தபடி கணக்கு புத்தகத்தின் மத்தியில் இருந்த மயிலிறகு குட்டிப்போட்டுவிட்டதா என பார்த்தபடி அமர்ந்திருந்தான் .

அந்த கருமம் புடிச்ச மயிரிலகு மயிரிலகு இல்லை இல்லை மயிலிறகு இன்னும் குட்டி போடவில்லை .

அம்மா வந்தா சொல்லணும் டவுசர் வாங்கித்தரச்சொல்லி , அம்மா எப்படி பசங்கள்ளாம் கிண்டல் பண்ணாங்க தெரிமா , ஒத்திகை பார்த்தபடியிருந்தான் .

வீட்டிற்குள் பீடி புகையும் , சாராய நாற்றமும் பரவுவதை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தான் . வீட்டின் ஒரு மூலையில் வாயில் பீடியை தனது இரண்டு விரல்களால் பிடித்து இஸ் என இழுத்தபடி , குந்தவைத்து அமர்ந்திருந்தான் .

''ஏன்டா குமரா படிக்கிறியா ''

''ஆமாங்ப்பா'' ,

''என்ன படிக்கற கண்ணு '' ,

''கணக்குங்ப்பா'' ,

''ம்ம்நல்லாபட்றா கண்ணு ''

''உங்காத்தா எங்கடா ''

''இன்னும் வரலங்ப்பா ''

''எவனோட ஊர்மேய போயிருக்கா !! ''

''யப்பா அம்மா வேலைக்கு போயிருக்காங்கப்பா'' ( ஊர் மேய்வதென்றால் என்ன வென்று அவனுக்கு தெரியாது , )

ஸ்ஸ்ஸ் பீடீயை நன்கு இழுத்தபடி '' அதான் 6மணிக்கு முடிஞ்சிடும்ல இன்னும் என்ன மணி ஆட்டற கலெக்டரு உத்தியோகம் ''

''அப்பா அம்மா பாவம்பா எதுனா வேலையிருக்கும் , அந்த பெரிய வூட்டு ஆயா எதுனா வேலை குடுத்துருக்கும்ங்ப்பா '' முகத்தை பார்க்காமல் கணக்குபுத்தகத்தை பார்த்தபடி பதிலளித்தான்.

பீடியை அணைத்து பக்கத்தில் இருந்த சின்ன டப்பாவில் போட்டு மூடினான் . சரியாக அணைக்கவில்லை போல அதிலிருந்து புகை வருவது குமரனுக்கு எரிச்சலாக இருந்தது.

அம்மாவும் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தாள் , கையிலிருந்த டிபனில் பெரியவீட்டம்மா தந்த பழைய பிரியாணியும் , இன்னொரு கையில் காய்கறி கூடையும் , தனது கூந்தலை தூக்கி இருக்க கொண்டைபோல கட்டிக்கொண்டு குமரனின் அருகில் சென்று '' கும்ரா, எதனா தின்னியா , இது ஏன் இப்படி உக்காந்திருக்கு ''என்றபடி துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்று , கூட்டி வாரிவிட்டு , உள்ளே வந்து காய்கறிகளை கொட்டி அதிலிருந்து சிலதை மட்டும் எடுத்து சிறிய பாத்திரத்தில் போட்டுவிட்டு , மீதியை குமரனின் மஞ்சள் பை அருகே வைத்து விட்டு காய்களை வெட்ட ஆரம்பித்தாள் அரிவாள்மனையில் . உர்ரென அவளையே பார்த்தபடி இருந்தவனை அவள் சட்டை செய்யாததால் , அவனே ஆரம்பித்தான் , தினமும் நடக்கு அதே சண்டையை ,

'' ஏன்டி தேவிடியா முண்டை இவ்ளோ நேரம் எவனோட படுத்துட்டு வந்த '' என்று கத்த ஆரம்பித்தான் ,

''அப்பா , சண்டை போடதப்பா ''

'' ஏன்டா , இன்னைக்கு எவனும் சிக்கல நீ வேணா எவனையாவது கூட்டிட்டு வந்து வுடேன் , ஒங்குடும்பத்துக்கு ஒங்குடுபத்துக்குதான் அது ஒன்னும் புதுசில்லல்ல ''

'' அம்மா , வேண்டாம்மா ''

''நீ சும்மா இருடா , ''

'' _____________ மகளே , உங்கப்பன்தான்டி ஊரையே கூட்டிகுடுத்து ஓத்து தின்னவன் ''

பேச்சு முற்றி அவன் அம்மாவை அடித்து உதைக்க ஆரம்பித்தான் , குமரன் கையிலிருந்த கணக்கு பாடபுத்தகத்தை கீழே போட்டு விட்டு '' அப்பா அப்பா வேணாம்ப்பா அப்பா வேணாம்ப்பபா '' என்று தந்தையை கையை பிடித்து கொண்டு அவன் கதற ,

அவனம்மாவின் முடியை பிடித்து சுவற்றில் முட்ட , அவள் தலையில் ரத்தம் வடிவதை கண்டு அவன் மேலும் அழ , அவனது கையை பிடித்து அடுப்பங்கரையில் தள்ளிய படி , அவனம்மாவை விடாமல் அடிக்க , அவள் தலையில் ரத்தம் வடிந்தது , விடாமல் சுவற்றில் அவனம்மாவின் தலையை முட்டியபடியே இருந்தான் , மேலும் ரத்தம் வடிந்தது , மேலும் வடிந்தது .

கையில் கிடைத்த விறகால் அவனது காலில் அடிக்க , அவள் அவன் பிடியிலிருந்து தப்பி தலையில் வடியும் ரத்தத்தை கையால் அடைத்தபடி வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்து ஊராரை கூட்டினாள்.

ராமாக்கா புருஷன் கர்ணன் வந்து இதனை தட்டி கேட்டான் , அவனை பார்த்து நீதான் எம்பொண்டாட்டிய வச்சிருக்கியா ,_______ பொண்டாட்டி _____ நக்கின நாயே , நீயே உம்பொண்டாட்டிய ஊர்மேயவிட்டு உக்காந்து தின்றவன் வந்துட்டான் பிராது குடுக்கு என்று அவனப்பா கேள்வி கேட்க அவன் இவன் மேல் பாய , ஊரே சேர்ந்து இருவரையும் பிரித்து விட்டது , இல்லாவிட்டால் யாராவது ஒருவர் செத்திருப்பார் , அவளை அழைத்துக்கொண்டு ராமாக்கா தன் வீட்டிற்கு கூட்டிச்சென்றாள் .

''அக்கா நான் வீட்டுக்கு போயி அந்த புள்ளைக்கு எதையாவுது குடுத்து இஸ்கூலுக்கு அனுப்பிட்டு வரேன் , ரவைக்கு என்னத்த தின்னுச்சோ தெரில , எனக்கு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுதான் தெரியும் , பச்ச புள்ளனு கூட பாக்காம அந்த பாவிபரப்பான் புள்ளைய நேத்து அடிச்சி தள்ளிவிட்டுட்டான் ,'' என்றபடி அடிபட்ட தலையை ஒரு கையால் பிடித்தபடி நடக்கலானாள் .காதோரம் லேசாக வலியிருந்தது .

வீடு திறந்து கிடந்தது , திண்ணையில் அவனப்பா படுத்திருந்தான் , லுங்கி விலகி அவனது உள்ளாடைகள் வெளியில் தெறிய கைகளை விரித்தபடி படுத்து கிடந்தான் ,அவனது வாயில் ஈக்கள் மொய்த்து கொண்டிருந்தது . ஏதோ கெட்ட வாடை வீடெங்கும் . சாராயம் , பீடி என பல வகை...

அவள் அவனை பார்த்து தூ பொறுக்கி _____மகனே என்றபடி வாசலில் கிடந்த துடைப்பத்தால் வீட்டின் வாசலில் கிடந்த குப்பைகளை விரட்டிவிட்டு , உள்ளே நுழைய வீட்டின் இடது ஓரத்தில் அடுப்பின் அருகில் குப்புற படுத்திருந்தான் குமரன் , அவனது கிழிந்து போன அரைடிராயரை பார்த்து ஏக்க பெருமூச்சுடன் தன் மகனுக்கு ஒரு நல்ல டவுசர் அவள் வேலை செய்யும் வீட்டம்மாவிடம் சொல்லி இன்று வாங்கித்தரவேண்டுமென்று எண்ணியபடி மூலையில் கிடந்த துணிகளை ஒதுக்கி தள்ளினாள் .

''டேய் குமரா , எழுந்திருடா , மணி ஏழாச்சு , இஸ்கூலுக்கு போணிமில்ல , இன்னைக்கு அர நாளுதான '' என்ற அவனை அழைத்துக் கொண்டிருக்க , வீட்டுக்குள் கையில் புஸ்தக பையோடு குமரா என்ற படி ஓடி வந்தாள் அஞ்சலி ,

அவனம்மாவை எதிர்பார்க்காத அவள்'' உமாக்கா குமரன் எழுந்துட்டானா , வீட்டுபாடம்லா பண்ணிட்டானானு பாக்க வந்தேங்க்கா!!'' என்று பம்மினாள் .. ''வாடி இவளே பாரு இந்த புள்ளைய இன்னும் தூங்கிட்டுருக்கறத, இரு அவன எழுப்பறேன் , தினத்திக்கும் காலைல இவன பாக்காட்டி உன்னால இருக்க முடியாதோ'' என்று புன்னகைத்தபடி நடந்தாள்.

அவன் அப்படியே கிடந்தான் , தலையை இருக்கி முடிந்தபடி அவனப்பானாட்டம் இவனுக்கும் வர வர சோம்பேறித்தனம் அதிகமாகிடுச்சு என்றபடி அருகில் சென்று அவனை தட்டி எழுப்ப முயல அவன் சட்டையின் முன்பக்கமெங்கும் ரத்தம் , அவனது நெஞ்சில் அரிவாள்மனை அவனது வெள்ளை சட்டையெல்லாம் ஈரம் . குமரன் செத்திருந்தான் . . அன்று ஊரில் நல்ல மழை .
***************************
***************************