தோழர் நாகார்ஜூனன் தனது சினிமா குறித்த நினைவுகளால் மலர்ந்ததை தொடர்ந்து அடுத்து ஐகாரஸாரும் அதை தொடர்ந்து தோழர் ஸ்ரீஸ்ரீ பூஜ்ய ஸ்ரீ லக்கிலுக்கானந்த சுவாமிகளும் நினைவுகளால் மலர்ந்த இந்த சினிமா குறித்த தொடர் விளையாட்டில் லக்கி சுவாமிகள் அடுத்த இதனை என்னையும் இன்னும் சிலரையும் தொடர சொல்லியிருந்ததால் அதோ எனது பதிவு .
நினைவுகளாய் மலரும் சினிமா சினிமா சினிமா......... ;
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
நான் விபரம் தெரிந்து பத்து வயதில் பார்த்த படம் கரகாட்டக்காரன், கோவையில் நாஸ் தியேட்டர் என்று நினைக்கிறேன் . இப்படத்தின் நகைச்சுவைகாட்சிகளை மட்டுமே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது , அந்நகைசுவைக்காட்சிகளை பல நடிகர்களும் செய்வதாக அப்போது மிமிக்ரி செய்து பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் மற்ற படி படத்தின் கதையோ இசையோ என்னால் உணரமுடியவில்லை. நான் பிறந்து முதல் மாதமே நானும் என் அம்மாவும் அவரது தோழிகளும் போன படம் ''கோழிகூவுது'' ( இது என் அம்மா கூறியே எனக்கு தெரியும் ) . தியேட்டர் பெயர் லட்சுமி .. அந்த தியேட்டர் இப்போது ஏபிடி குடோனாக இருக்கிறது .
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ஒரு நல்ல நண்பருடன் சக்கரக்கட்டி என்னும் தமிழ்சினிமாவையே புரட்டிப்போட்ட ஒரு மகத்தான திரைப்படத்தை பார்த்தேன் . அந்த தோழர் வாழ்க .
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சென்றவாரம் எனது அறையில் இரவு சன்டிவியில் சிவாஜி கணேசன் நடித்த ''அந்த நாள் '' திரைப்படம் பார்த்தேன் , ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் , இப்படம் மட்டும் ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஒரு புதிய உத்தியை அப்படத்தின் இயக்குனர் கையாண்டிருப்பதை உணர முடியும் . இப்படத்தினூடே இழையோடும் மெல்லிய வகை நகைச்சுவையை உணர முடிந்தது .இது தவிர இப்படம் நிகழும் காலகட்டம் அது ஜப்பான் சென்னையின் மேல் மூன்று குண்டுகளை போட்ட ஒரு நாளில் துவங்குகிறது . அது குறித்து சில விபரங்களை சேகரித்த போது சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் குறித்த எனது எண்ணங்களிலும் ஒருவித மாற்றத்திற்கும் வித்திட்டது .
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
''ரத்தக் கண்ணீர் '' மற்றும் மௌனராகம் இவ்விரண்டு படங்களும் வெவ்வேறு விதங்களில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி படைத்தது .
ரத்தகண்ணீர் திரைப்படத்தை இது வரை நான் 200 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன் , ஆனால் ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் அது மிகப்புதிதாகவே தெரிவது அப்படத்தின் ஆற்றல் .
ரத்தகண்ணீர் திடைப்படத்தில் எம்.ஆர். ராதா அவர்களின் நடிப்பின் ஆளுமையும் அவர் தோன்றும் காட்சிகளின் வசீகரமும் அப்படத்தினை ஒரு முறை பார்த்தாலே உணர இயலும் .
மௌனராகம் திரைப்படத்தின் மென்மையும் படம் முழுக்க விரவியிருக்கும் இசைஞானியின் பிண்ணனி இசையும் காலத்தால் அழிக்க முடியாதவை. அப்படத்தின் எளிமையும் ஒரு பெண்ணின் கோணத்தில் செல்லும் காட்சியமைப்பும் அதன் பிறகு வெளியான எந்த திரைப்படத்திலும் சொல்லப்படாதவை . மௌனராகம் திரைப்படம் பிடிக்காதவர் யாரேனும் இருக்க முடியுமா.
சமீபத்தில் '' மொழி '' _______
5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
பாபா v/s பாமக ....
லூசுத்தனமான ஒரு சண்டை , தேவையில்லாத விளம்பரம் , மற்றும் புஸ்ஸாகிப்போன ஒரு புரட்சி .
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
விக்ரம் திரைப்படம் , அப்படத்தின் கதைக்களம் மற்றும் சூழல் தமிழ் சினிமாவிற்கு மிகப்புதிது . எனக்கு சைன்ஸ் பிக்சனை அறிமுகப்படுத்திய ஒரு திரைப்படம் .
விக்ரம் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் பாராச்சூட்டில் கமலும் அப்படத்தின் கதாநாயகியும் (பெயர் நினைவில்லை ) பேசியபடியே வானில் இருந்து விழும் காட்சி மிக அருகாமையில் படமாக்கப்பட்டிருக்கும் *(குளோசப்பில் ) , பல நாட்கள் அக்காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள் என சிந்தித்திருக்கிறேன் . (பிற்காலத்தில் அது மிக எளிமையான ஒரு முறையில் அமைக்கப்பட்ட கிராபிக்ஸ் என்பது தெரிந்தது ) . அதே போல விட்டாலாச்சார்யா படங்களின் மோசன் கிராபிக்ஸ் வகைகளும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றன் .
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வாரமலரில் துணுக்குமூட்டை , 10 வயதிலிருந்தே படித்து வருகிறேன் ,அதே போல தினதந்தியின் வெள்ளி மலர் , குமுதம் , ஆனந்தவிகடனில் வரும் சினிமா செய்திகள் , தற்காலத்தில் ROTTEN TOMATOES.COM போன்ற தளங்களும் இணையத்தில் ஒரும் செய்திகளும் வாசிப்பதோடு சரி . பிற மொழித் திரைப்படங்கள் பார்க்கையில் அது குறித்த செய்திகளை இணையத்தில் தேடி படிப்பதும் உண்டு .
7.தமிழ்ச்சினிமா இசை?
தமிழ்ச்சினிமா இசை மிக நன்றாக முன்னேறியுள்ளது , முன்னாலெல்லாம் தேவா காப்பியடிப்பது தெரிவதுபோல இசையமைத்து மாட்டிக்கொள்வார் , இப்போதெல்லாம் அது தெரியாத வண்ணம் பூசி மெழுகிவிடுகின்றனர் .அதும் அமெரிக்க இசையை தவிர்த்து மொராக்கோ போன்ற நமக்கு பரிச்சயமில்லாத இசையை காப்பியடிப்பதால் அப்படி . தற்காலத்தில் வரும் பாடல்களில் சில நல்ல பாடல்களை வித்யாசாகர்,ஹாரிஸ் , பரத்வாஜு , யுவன் போன்றோரிடமிருந்து வருவது குறிப்பித்தக்கது .
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
உலகமொழிசினிமா அதிகம் பார்க்க வாய்ப்பில்லையென்றாலும் கடைகளில் தேடிப்பிடித்து டிவிடியில் பார்ப்பேன் , சமீபத்தில் பார்த்த தி ஹிட்டன் பார்ட்டரஸ் ( the hidden fortress ) திரைப்படம் , அகிராகுரோசோவாவின் இப்படம் ஒரு கடைநிலை கதாபாத்திரத்தின்( சந்திரமுகி படத்தின் கதை வடிவேலு பாத்திரத்தின் பார்வையில் நகர்ந்தால் எப்படி இருக்கும் ) கண்ணோட்டத்தில் நகரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் . ஹிந்தியில் என்னை மிகவும் தாக்கிய திரைப்படம் தாரே ஜமீன் பர் தான் அதற்கு முக்கிய காரணம் அப்படத்தின் கதைக்கு மொழி அவசியமில்லை என்பதே . அதே போல ஆங்கிலத்தில் FORREST GUMP என்னை மிகவும் தாக்கிய ஒரு திரைப்படம் .
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
சென்னைக்கு 6 வருடங்களுக்கு முன் வந்த புதிதில் சிலபல மாம்பலம் மேன்சன் உதவி இயக்குனர்களின் நட்பிருந்தது , சில நல்ல படங்களில் கதை விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் . அவர்களது பழக்கத்தால் எனது சினிமா மீதான மோகம் அதிகரித்தது , ஆனால் குடும்ப சூழ்நிலைகள் மற்றும் பண நெருக்கடி மற்றும் சினிமாவின் நிலையற்றத்தன்மை அக்கனவை முளையிலேயே கிள்ளி எறிந்தது . எஸ்.ஜே.சூர்யாவிடம் கூட உதவி இயக்குனராய் சேர முயற்ச்சித்து அது தோல்வியடைந்திருக்கிறது .
ஆனால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் தமிழ்சினிமாவில் ஏதாவதொரு வகையில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆவல் மட்டும் குறைந்ததில்லை . அதற்குண்டான வாய்ப்பும் சூழலும் வாய்க்கையில் நிச்சயம் தமிழ்சினிமாவின் பணியாற்றுவவன் .
என்னால் தமிழ்சினிமா மேம்படுமா என்பது தெரியாது . ஒரு வேளை நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நான் நிச்சயம் தமிழ்சினிமாவால் மேம்படுவேன் .
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்சினிமாவிற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது , உலக அரங்கில் தமிழனின் ஆக்கங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் . மக்களின் மாறிவரும் ரசனையும் தற்போது வெளியான ''மிக நல்ல'' படங்களில் வெற்றியும் இதனை உறுதி செய்வதாக தெரிகிறது.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த கேள்வியே வசீகரமாக இருக்கிறது , ரஜினி,கமலெல்லாம் நிம்மதியாக இருப்பார்கள் , நமிதா , நயன்தாரா சிம்பு போன்றோர்கள் கிசுகிசுக்களை SMSல் பரப்ப முயற்சிக்கலாம் ,சினிமா நடிகர்கள் ஒரு வருடம் ஓய்வெடுப்பார்கள் , சினிமா தொழிலாளர்கள் வாழ்க்கை நசிந்து போகலாம் . நமக்கு பிரச்சனையில்லை சினிமா இல்லையேல் இருக்கவே இருக்கிறது அரசியல் அதுவும் போரடித்தால் கிரிக்கெட் , அதுவும் போரடித்தால் நிறைய புத்தகங்கள் படிக்கலாம் , அதுவும் போரடித்தால் நாமே புத்தகம் எழுதலாம் சினிமா பார்க்காமல் இருப்பது எப்படி என்று .
தமிழர்களுக்கு என்ன ஆகப்போகிறது , ஒன்றும் ஆகாது , ஆங்கிலபடங்கள் பார்ப்பார்கள் , ஆன்மீகத்தில் ஈடுபடுவார்கள் , சாமியார்கள் அதிகரிக்கலாம் , அரசியல்வாதிகள் சினிமா நடிகர்களிடமிருந்து நம்மை மீட்டு அவர்களுக்கு அடிமையாக்க முயற்சிக்கலாம் . நாடகங்கள் நடக்கலாம் , தெருக்கூத்து , கரகாட்டம் , பொய்க்கால்குதிரை , ஒயிலாட்டக்கலைஞர்களுக்கு மறுவாழ்வு உண்டாகலாம் , திருவிழாக்கள் அதிகம் நடத்தப்படும் , அதில் மானாட மயிலாட ரேஞ்சில் நடனங்கள் பார்க்கலாம் . மீண்டும் கேப்ரே டேன்சுகளுக்கு மவுசு கூடலாம்.
கோவில்களில் நாட்டிய நாடகங்கள் நடக்கலாம் , சுற்றுலாத்துறை வளர்ச்சியடையலாம் . ( தமிழர்கள் தங்களத் குடும்பத்தோடு பல ஊர்களுக்கு சுற்றுவதால் )
இவையெல்லாம் இருந்தாலும் ஒரு வருடம்தானே இந்த தடை அதனால் நிச்சயம் தமிழரின் சினிமா மோகம் குறையாது . ( வெறிபிடித்த தமிழ் ரசிகனும் பொங்கலுக்கும் , தீபாவளிக்கும் , தன்தலைவன் படம் வராத இந்த தீபாவளி கறுப்பு தீபாவளி என எப்போதும் போல போஸ்டர் அடிப்பான் , தமிழகம் முழுக்க இவ்வகை போஸ்டர்களால் அல்லோலகல்லோலப்படும் )
____________________________________________________________________________________
இப்பதிவை தொடர்ந்து இந்த சினிமா நினைவுகள் குறித்த பதிவை தொடர்ந்து எழுத
1.பாலபாரதி
2.வடகரைவேலன் போன்ற பழம் பெரும் பதிவர்களையும்
2.வடகரைவேலன் போன்ற பழம் பெரும் பதிவர்களையும்
1.குப்பன்யாகூ
2.சென்
3.பாலா ( சந்தர் ) ஆகிய பழம் பெறாத பதிவர்களையும் அழைக்கிறேன் .
_____________________________________________________________________________________
அவ்ளோதான்பா.... ;-)
_____________________________________________________________________________________