Pages

06 September 2008

சரோஜா : எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்...!!


மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பட்டையை கிளப்பிய சென்னை-28 அணியின் அடுத்த மேட்சிற்க்காக பல நாள் காத்திருந்து நேற்று வெளியான அந்த அணியின் அடுத்த இன்னிங்ஸான சரோஜா படத்தை பார்க்க நேர்ந்தது .

படம் ஆங்கிலப்படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கிறது , புதுமையான கதை சொல்லும் பாணி , பாதி படம் முழுவதும் இருட்டிலேயே எடுக்கப்பட்டது , மற்றும் உலகதரத்தில் பிண்ணனி இசை என அதகளபடுத்தியிருக்கிறது சரோஜா டீம் .

ஆனால் எதுவுமே மனதில் ஒட்டவில்லை எனபதே மிக சோகமான ஒரு உண்மை . அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு என்று ஒரு பழமொழி உண்டு , அது போல இப்படத்திலும் மிக சிரத்தையுடன் , அதிக உழைப்பை கொட்டி '' நெய் அதிகமாகிய கேசரி போல '' திகட்ட திகட்ட படத்தை தந்துள்ளனர் .


படத்தின் கதையை ஒரு பக்க பேப்பரில் அரைபக்கத்தில் எழுதிவிடலாம் , கிரிக்கெட் மாட்சு பார்க்க ஹைதராபாத் செல்லும் நான்கு இளைஞர்கள் , பிரபலமான தொழிலதிபரின் கடத்தபடும் மகள் , ஒரு ரவுடி கும்பல் என மூன்று பகுதிகளாக படம் பயணிக்கிறது , இம்மூன்று கதைகளும் சேருமிடத்தில் கிளைமாக்ஸ் .


மிக வித்தியாசமான இக்கதையையும் , 21கிராம்,கிரஷ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட கதை சொல்லும் பாணியையும் எடுத்துக்கொண்ட இயக்குனர் திரைக்கதையில் கோட்டைவிட்டிருக்கிறார் . த்ரில்லர் கதைக்கே உரிய சஸ்பெண்ஸ் படத்தின் நடுவிலேயே உடைக்கப்படுவதும் கிளைமாக்ஸில் அரதப்பழசான ஒரு டுவிஸ்டையும் பயன்படுத்தியிருப்பது ஒரு திரில்லர் படத்திற்குண்டான ஒரு கிக் இல்லாமல் செய்கிறது . படத்தின் இயக்குனர் இன்னும் தனது முந்தைய படத்தின் தாக்கத்தில் இருந்து மீள வில்லையோ என தோன்றுகிறது , படத்தின் மிக அருமையான மற்றும் உணர்வு குறித்த காட்சிகளில் கூட தேவையில்லாத காமடி வசனங்கள் திணிக்கப்பட்டிருப்பது படம் பார்க்கும் பார்வையாளனை எரிச்சலூட்டக்கூடும் .


படத்தின் மிகப்பெரிய பலமாக கருதுவது பிண்ணனி இசை , அது கூட சமயங்களில் மட்டுமே சிலிர்க்க வைக்கிறது , மற்ற நேரங்களில் காதுக்குள் குருவி பறக்கிறது , இரைச்சலாக இசையமைப்பதே ஆங்கிலபடங்களுக்ககிணையானது என யாரோ தவறாக யுவனுக்கு அறிவுறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது , படம் முழுவிதும் பிண்ணனி இசையென்னும் இரைச்சலால் எரிச்சலூட்டுகிறார் . ( அவரது தந்தையின் புன்னைகை மன்னன் மற்றும் மௌனராகம் படங்களின் பிண்ணனி இசையை ஒரு முறை கேட்டால் அவருக்கு உலகத்தரத்தின் அர்த்தம் புரியலாம் ) , தோஸ்த்து படா தோஸ்த்து பாடலை தவிர மற்ற பாடல்கள் இரைச்சல் . வில்லனுடனான ஒரு பாட்டு நன்கு காட்சியமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் ஜெயராம், பிரகாஷ்ராஜ் போன்ற நல்ல நடிகர்களை வீண்டித்திருக்கிறார்கள் . பிரேம்ஜியின் காமடி மட்டுமே படத்திற்கு பலம் .

படத்தின் வசனங்கள் பல இடங்களிலும் சிரிக்க வைத்தாலும் இந்த கதைக்கும் அது பயணிக்கும் தளத்திற்கும் அந்த வசனங்கள் தேவையில்லையோ என எண்ண வைக்கின்றன .
படத்தின் முக்கியமான நான்கு பாத்திரங்களில் ஒன்று மட்டும் நகைச்சுவையாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் நால்வருமே காமெடி பண்ணுவதால் அந்தபாத்திரங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளின் வலியோ அதன் தாக்கமோ பார்வையாளனின் மனதில் பதிய தவறுகிறது , படத்தின் காமெடியும் அதை ஒட்டிய காட்சிகளும் தாமரை இலை தண்ணீர் போல இருக்கிறது .


கேமரா பல இடங்களிலும் விதவிதமாக மாறுகிறது , பல வண்ணக்கலவைகளையும் கண்முன் நிறுத்துகிறது , டமால் டுமீல் என மாறுகிறது , ஒடுகிறது , ஆடுகிறது ஆனால் ஒரிடத்தில் உருப்படியாய் நின்று கதை சொல்லதவறுகிறது . ( நல்ல உதாரணம் . தோஸ்து பாடல் )


எடிட்டிங் மிக அதிகமாக வேலை வாங்கப்பட்டிருக்கிறார் , அது தவிர அவரது அயராத உழைப்பை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும். அவரை சரியாக உபயோகிக்காதது இயக்குனரின் தவறு .


படத்தில் அதிக பாரட்டுக்கிரியவர் கலை இயக்குனர் , அது நிஜ தொழிறசாலையா இல்லை செட்டா என யூகிக்க முடியாத அளவுக்கு மிக அருமை . அவருக்கு ஒரு ஸ்பெசல் சபாஷ்


முதல் பாடல் படத்தில் சொருகப்பட்டதோடு மட்டுமின்றி மிக மொக்கையாக வும் இருக்கிறது ( டிஸ்கொத்தேகளில் கலக்கலாம் )

முதல் பாதியில் வரும் நான்கு இளைஞர்கள் பற்றிய யதார்த்தமான காட்சிகள் ஓகே ரகம்.

மிர்ச்சி சிவா பாத்திரத்தின் மூலம் மெகாசீரியல்களை நன்றாக வாரியுள்ளனர்.
படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் தொடர்ச்சியாக இருட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளதாலும் பிண்ணனி இசை வேறு மண்டையை உடைப்பதால் தலைவலிதான் ஏற்படுகிறது , ( அக்காட்சிகளையாவது சுவாரசியமாக எடுத்திருக்கலாம் )
மற்ற படி படத்தின் பிளஸ் - பாத்திரபடைப்பு , நகைச்சுவை வசனங்கள் , கலை

படத்தின் மைனஸ் - மற்ற எல்லாமே
படத்தின் இயக்குனர் படத்தை ஆங்கில படம் போல் எடுக்க வேண்டும் உலகத்தரத்தில் எடுக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்ட சிரத்தையை கொஞ்சம் திரைக்கதையில் எடுத்திருந்தால் படம் நிச்சயம் அருமையாக வந்திருக்கும் . அல்லது படத்தை முழுமையாக காமெடியாகவோ அல்லது முழு சீரியஸாகவோ எடுத்திருந்தாலும் அருமையாய் இருந்திருக்கும் . குட்டிகுட்டியாக நிறைய விசயங்கள் அட போட வைத்தாலும் , முழுமையான படமாக பார்க்கும் போது அடபோங்கடா என சொல்லவே தோன்றுகிறது.
பத்துபத்து மற்றும் நாயகன் போன்ற மூன்றாம் தர படங்களில் அனுபவித்த ஒரு திரில் அனுபவத்தை இப்படம் தரவில்லை என்பதே உண்மை.

சரோஜா - சரோஜாதேவி போல எல்லாமே கொஞ்சம் ஓவரு


நம்ம மார்க் 39 / 100


_____________________________________________________________________________________