அண்மையில் ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட படமான தாரே ஜமீன் பர் திரைப்படம் குறித்து இயக்குனர் அமீரிடம் டெக்கான் குரோனிக்கிள் நிருபர்கள் கேட்ட போது அவர் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வடநாட்டு படங்களாகவும் இந்தி படங்களாக இருப்பதாகவும் , அவர் கூறினார் . மேலும் அவர் கூறுகையில் தனது பருத்திவீரன் போன்ற படங்கள் இந்தியாவின் கலச்சாரம் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் தாரே ஜமீன் பர் திரைப்பட்டதோடு தனது திரைப்படம் எவ்விதத்திலும் சளைத்ததல்ல என்றும் கூறியிருந்தார் . இவ்விரு படங்களின் இயக்குனர்களின் பெயர்களும் அமீர் என்பது இக்கட்டுரைக்கு மேலும் அழகூட்டுவதாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . நமது கட்டுரை அமீரின் பேட்டி குறித்த விவாதத்தை பற்றியதல்ல , அவ்விரு படங்கள் பற்றியது என்பதை முன்பே கூறிவிடுவது நல்லது .
பருத்திவீரன் படமும் தா.ஜ.ப படமும் இரு வேறு தளங்களில் வெவ்வேறு கதைகள் மற்றும் கருத்துக்களங்களையும் அடிப்படையாக் கொண்ட திரைப்படங்கள் , இதில் இவ்விரண்டு படங்களையும் ஒப்பிடுவதே தவறான ஒரு விடயமாகும் , அதனால் இப்படங்களை ஓப்பிடாமல் அது குறித்தான கண்ணோட்டத்தை மட்டும் பார்க்கலாம் .
பருத்திவீரன் திரைப்படம் தென்னிந்தியாவின் பெரும்பாலான கிராமவாசிகளின் இருண்ட பக்கத்தை பதிவு செய்யும் படமாகவும் , அவர்களது வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக பதிவிடப்பட்ட படமாகவே அறியப்படுகிறது , அப்படமும் அப்படியே . படம் முழுக்க விரவியிருந்த ஒரு கிராம இளைஞனின் ஊதாரித்தனமும் முரட்டுத்தனமும் வன்முறையும் படிப்பறிவுமின்றி இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா தென்னியந்திய கிராமங்களிலும் நாம் சகஜமாக பார்க்கக் கூடிய பல இளைஞர்களின் வாழ்க்கையையும் , அதனூடே செல்லும் ஒரு காதலையும் கிளைமாக்ஸ் தவிர மிக இயல்பாகவும் படோடோபமில்லாமலும் பதிந்த படம் பருத்திவீரன். இப்படத்தில் அந்த கிளைமாக்ஸ் வன்முறையை தவிர்த்து வேறு எந்த விதத்திலும் குறை சொல்ல இயலாது . இப்படம் இந்தியாவின் கிராமத்து வாழ்க்கை குறித்த ஒரு நல்ல பதிவு .
தாரே ஜமீன் பர் திரைப்படம் ஒரு பாடங்களை புரிந்துகொள்வதில் குறைப்பாடுள்ள ( DYSLEXIC என்னும் ஒரு வகை குறைபாடு ) ஒரு சிறுவன் எப்படி தனது குடும்பம் மற்றும் சமூகத்தை எதிர்கொள்கிறான் , அவனது மனநிலை மற்றும் அவனது குறைக்கான நிரந்தர தீர்வென்ன என்பதையும் குழந்தைகள் முதல் வயதான தாத்தா வரை அனைவரையும் மிகையில்லா திரைக்கதையாலும் அச்சிறுவனின் இயல்பான நடிப்பாற்றலாலும் ரசிக்க வைத்த திரைப்படம் .
இவ்விரு படங்களும் இது போல வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்க கூடியவை , இருப்பினும் நான் கவனித்த விடயங்கள் ,
பருத்திவீரன் படம் கொண்டாட்டங்களோடு தொடங்கி , காதலோடு பயணமாகி வெறுமையில் முடியும் வகைத்திரைப்படம் .
தாரே ஜமீன் பர் திரைப்படமும் ஒரு குழந்தையின் குரும்புடன் தொடங்கி பின் அக்குழந்தையின் இருளில் நகர்ந்து பின் கொண்டாட்டத்தில் முடியும் வகைப்படம் .
இவ்விரு படங்களின் முடிவிலும் ஒரு சாதாரண ரசிகனின் கண்களில் கண்ணீரை கட்டாயம் நம்மால் காண இயலும் . பருத்திவீரனில் வெறுமையால் உண்டாகும் கண்ணீர் தாரேஜமீன் பரில் மகிழ்ச்சியாலும் உற்சாகத்தாலும் நம் வீட்டு குழந்தையின் வெற்றியில் உண்டாகும் களிப்பால் ஏற்படும் இன்பத்தால் கண்களில் பெருகும் கண்ணீர்.
இவ்விருபடங்களிலும் காணக்கிடைக்கும் இன்னொரு விடயம் இந்தியா குறித்த இவ்விரு படங்களும் பதிவு செய்துள்ள விடயங்கள் , அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தியாவை இன்னும் காட்டுமிராண்டிகளின் நாடாகவே பார்க்கும் பழக்கம் இருந்துவருவது தவிர்க்க இயலாத உண்மை , பருத்திவீரன் படத்தின் தவறு அதுதான் அப்படத்தில் இந்திய இளைஞர்களை பிரதிபலிப்பதாக அப்பட நாயகனின் பாத்திரபடைப்பு அமைந்து விட வாய்ப்புண்டு ( இது எனது சொந்தக்கருத்தே ) , ஆனால் தாரே ஜமீன் பர் திரைப்படத்தில் இப்படி ஒரு பிரச்சனை இல்லை . அதற்காக பருத்திவீரன் திரைப்படம் மோசமான படமல்ல அது உண்மையை உணர்வு பூர்வமாக உரக்கச் சொன்ன ஒரு திரைப்படம் , ஆனால் தாரே ஜமீன் பரின் குட்டி பையனின் சிரிப்பில் பருத்திவீரன் தோற்றுத்தான் போகிறான் , எப்போதும் குழந்தைகளின் சிரிப்புக்கும் கண்ணீருக்கும் சக்தி அதிகமல்லவா!!
ஆஸ்கர் பரிந்துரைப்பிலும் அந்த களிப்பின் கண்ணீரும் இந்தியா குறித்த அன்னிய பார்வைக்கு நமது படைப்புகளின் ஆக்கமும் இங்கே இவ்விரு படங்களின் ஆஸ்கர் தரத்தை நிர்ணயித்ததாக எண்ணுகிறேன் . அமெரிக்கர்களால் நிச்சயம் நம் பருத்திவீரன் படத்தின் மண் வாசனையையும் அக்கதையின் வலி மற்றும் வேதனையை உணர இயலுமா என்பது கேள்விக்குறியே , ஆனால் தாரே ஜமீன் பர் திரைப்படம் ஒரு பொதுவான விடயத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளதும் அப்படத்தின் இன்னொரு பலம் அதுதவிர படம் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையினூடே பயணிப்பது இன்னுமொரு பலம் .
இவையெல்லாவற்றையும் விட ஆஸ்கர் குறித்தும் அதன் நடுவர்கள் குறித்தும் நன்கு அறிந்த அமீர்கானின் ( அமீர்கான் ஏற்கனவே லகான் படத்தை பிறமொழி படங்களுக்கான சிறந்த படத்திற்கான விருதுக்காக முதல் ஐந்து இடம் வரை கொண்டு சென்றவர் ) படமென்பதால் இப்படம் ஆஸ்கரை வெல்லத் தேவையான வேலைகளை ( மார்க்கெட்டிங் மற்றும் நடுவர்களை படத்தை முழுவதுமாக காணவைப்பது ) இம்முறை மிகச்சரியாக செய்து பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் ஆஸ்கர் கனவை பூர்த்தி செய்வார் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம் .
இதுதவிர ஆஸ்கரில் இதுவரை வெற்றி பெற்ற படங்களில் பல படங்களும் மனம் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்களை பற்றிய படங்களாகவும் மிக பிரமாண்டமான படங்களாகவும் இருந்திருக்கிறது , இது போன்ற படங்களின் வெற்றி பெரும் வாய்ப்பு மிக அதிகம் என்பது ஆஸ்கரில் இது வரை வென்ற படங்களின் பட்டியல் அறிந்தோர்க்கு நன்கு தெரியும , உதாரணமாக ரெயின் மேன் , பாரஸ்ட் கம்ப் மற்றும் ஏ பியுட்டிபுல் மைன்ட் போன்ற திரைப்படங்கள் ,இப்படங்களின் நாயகன் அல்லது நாயகன் சார்ந்த பாத்திரம் மனம் சார்ந்த குறைபாடுள்ளவர்களை பற்றியது , ஆதலால் நம்மூரில் தயாரான தாரே ஜமீன் பர் திரைப்படமும் வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன் .
பல வருடங்களாக நம்மூர் கமலஹாசனும் ஆஸ்கருக்காக போராடி வரும் இவ்வேளையில் வட இந்திய தயாரிப்பு , தென்னிந்திய தயாரிப்பு என்ற பாகுபாடின்றி நம் இந்திய தயாரிப்பான இப்படம் ஆஸ்கரில் வெற்றி பெற்றால் அது நிச்சயம் இந்திய கலைத்துறைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன் .
ஆஸ்கரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ள இப்படம் இனிவரும் சுற்றுகளிலும் அனைவரையும் கவர்ந்து ஆஸ்கரை வெல்லும் என்பதில் நம்பிக்கை எப்போதையும் விட இம்முறை மிக அதிகமாய் இருப்பதே அப்படத்தின் வெற்றிக்கு சாட்சி .
_____________________________________________________________________________________
அடுத்த வருட சிறந்த பிற மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதை தாரே ஜமீன் பர் திரைப்படம் வெல்ல அதிஷா மற்றும் அனைத்து தமிழ் வலையுல நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .
_____________________________________________________________________________________