சத்யம் - தமிழ் சினிமாவின் மைல்கல் !!! :
சில நாட்களுக்கு முன் , இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான புரட்சித்தளபதி விஷாலின் புதிய திரைப்படமான சத்யம் திரைப்படத்தை எங்களூர் டூரில் டாக்கிஸில் பார்க்க நேர்ந்தது . இப்படம் வருவதற்கு முன்பிருந்தே எனக்கு இப்படம் குறித்து மிக அதிக ஆர்வமிருந்தது , அதற்கு முதல் காரணமாக நான் கருதுவது நயன்தாராவின் வயிறு , இரண்டாவது விஷாலின் வயிறு . ஆறடுக்குகளெனப்படும் ஒரு வகை உடற்பயிற்சியை அவ்விருவரும் இப்படத்திற்காக மேற்கொண்டனர் என கேள்வி பட்டதுமே , அளவில்லா பெரு மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன் .
மிக அதிக எதிர்பார்ப்புடன் அப்படத்திற்கு சென்ற என்னை ,'' சத்யம் '' நான் வணங்கும் காரமடை ரங்கநாதன் சத்தியமாக ஏமாற்றவில்லை என்பதே சத்யமான உண்மை .
முதல் காட்சியிலேயே அனல் பற்றி கொண்டது போல ஒரு சேஸிங்கில் தொடங்கும் படம் , விஷாலின் வருகைக்கு பிறகு வேகமெடுக்கிறது , விஷாலின் நரம்பேறிய முருக்கான உடலும் , கனலாய் காட்சியளிக்கும் கண்களும் , மிடுக்கான ஒரு காவல்துறை அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார் , அவரது உடலசைவு மொழிகளிலேயே அவரது உழைப்பு தெரிகிறது , அடுத்தத்தடுத்த கொலைகளும் அதற்கு காரணமான உபேந்திராவும் , அதற்கான காரணமும் , சட்டத்தின் தோல்வியும் என பயணிக்கும் இப்படத்தில் குளுமைக்கு நயன்தாராவும் தன் கடமையை ஆற்றியிருக்கிறார்.
தீப்பொறி பறக்கும் வசனங்களுக்கு , இயக்குனருக்கு சபாஷ் , இறுதிக்காட்சியில் படத்திற்க்காக தன் தலையை முழுவதும் வழித்துக்கொண்டு 15 நிமிடங்கள் விடாமல் வசனம் பேசும் விஷால் , வசன உச்சரிப்பில் அசத்துகிறார் . உபேந்திரா மட்டும் ஏனோ மனதில் ஒட்டவில்லை . அவர் வரும் காட்சிகளும் வசனங்களும் படத்தின் ஓட்டத்தை குறைக்கும் படியே உள்ளது .
படத்தின் காட்சிக்கேற்ப இனிமையான இசை தந்த ஹாரிஸ் ஜெயராஜிற்கு ஆஸ்கர் வழங்கலாம் . கலக்கியிருக்கிறார் . பாடல்கள் ஒவ்வொன்றும் பார்ப்பவரை இருக்கையோடு கட்டி போடுகின்றன .
சாமிதான் கண்ணைகுத்தணும் , சட்டம்தான் தண்டிக்கணும் எனும் சிறார் முதல் பெரியோர் வரைக்கும் புரியக்கூடிய வசனம் படம் முடிந்து வெளியே வந்த பின்னும் , மனதில் மாறாமல் பதிகிறது .
காமெடி , காதல் , செண்டிமென்ட் , வீரவசனங்கள் , சண்டை , திரைக்கதை முடிச்சுகள் என படத்தை அனைவரும் பார்க்கும் வண்ணம் தந்த இயக்குனர் ராஜசேகருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் , அவர் இது போல இன்னும் பல நூறு படங்களை தமிழிற்கு தர வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களாகிய எங்கள் அவா. அதே போல புரட்சி தளபதி விஷாலும் தனது உருவத்திற்கேற்ற இது போன்ற பாத்திரங்களில் நடித்து விரைவில் தமிழகத்தின் அடுத்த சூப்பர்ஸ்டார் ஆக வாழ்த்துக்கள் .
இப்படம் தமிழில் மட்டுமல்லாது , தெலுங்கிலும் சல்யூட் என்ற பெயரில் வெளி வந்துள்ளதாக அறிந்தேன் அப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மொத்தத்தில் ,
சத்யம் திரைப்படம் - தமிழ்திரையுலகின் மைல்கல்
__________________________________________________________________
இனி என்னோட மனசாட்சியின் விமர்சனம் :
இப்படிலாம் பதிவு போடணும்னுதான் ஆசைப்பட்டு அந்த பாழாப்போன சத்யம் படத்துக்கு காசு செலவு பண்ணி தியேட்டருக்கு போயி பார்த்தேன் , இழவு , படமாடா எடுத்துருக்கீங்க , ங்கொய்யால தமிழ் படம்னா தமிழ் நாட்டுக்கு மட்டும் எடுக்கனும் , நீங்க தெலுங்குக்கும் சேர்த்துல்ல எடுத்துருக்கீங்க , படத்துல ஒரு எடத்துல கூட தமிழ் எழுத்த மருந்துக்கு கூட காமிக்கல , அப்பவே புரிஞ்சு போச்சுடா உங்க வண்டவாளம் ,
விஷால்ரெட்டி இருக்காரே அவருக்கு ரெண்டு ஸ்டேட்லயும் முதலமைச்சர் ஆகணும்னு ஆசை போல , அதான் ரெண்டு ஸ்டேடையும் சரியா கணக்கு பண்ணி படம் எடுத்திருக்காரு , படத்தில பாதிபேருக்கு டப்பிங் வாய்ஸ்தான் ,
படமுழுக்க ஏய் ஏய்னு ஸௌண்டு வேற , இது பத்தாதுனு கிளைமாக்ஸ்ல இதுதான்டா போலீஸ்னு டயலாக்லாம் விடறாறு , விஷால்ரெட்டி சார் !! உங்களுக்கு எதுக்கு இந்த உடம்பு குறைக்கற வேலைலாம் பாத்தா தனுஷ் தாத்தா மாதிரி இருக்கீங்க , அதுல படத்தில பாதி சீன் சட்டையில்லாம வந்து புஜபல பிராமாக்கிரத்த காட்டறேனு வேற எதையோ காட்றீங்க , அதுவும் அந்த 30 பேர அடிக்கிற பைட்டு சுள்ளான் படத்தில தனுஷ் போட்ட சண்டைய விட மிக கேவலாம இருந்துச்சு , உங்களுக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைலாம் , எப்பபவும் உங்களுக்குனே ஒரு கதை இருக்கும்ல , வெளியூர் பையன் உள்ளூர் தாதானு அதையே நடிச்சு நாலு காசு பாப்பிங்களா.. அத விட்டுட்டு காக்கி சட்டை போட்ட கூர்க்கா மாதிரி ஏன் இந்த கொலை வெறி ,
இதுல நயன்தாராவ ஊறுகா மாதிரி இல்ல இல்ல உப்பு மாதிரி யூஸ் பண்ணிருக்காங்க , இப்படியே நாலு படம் , இல்ல இன்னும் ஒரு படம் நடிச்சா போதும் நயனுக்கு தமிழ்திரையுலகம் சங்கூதிரும் , படத்தில இவங்க வர சீன்லலாம் பாட்டு வந்துடுது , தியேட்டர்ல நயன்தாராவ பார்த்தாலே பச்ச புள்ள கூட அலறி துடிக்குது , ஐயயோனு பாட்டு வைக்க போறாங்கனு ,
அதும் பாட்டுங்கள காதால கேக்க முடியல , படத்தில மொத்தமா 5 இன்டர்வெல் . உள்ள போயி படம் பார்த்துட்டு வெளிய வரதுக்குள்ள அரை பாக்கெட் சிகரெட் காலி .
ஹாரிஸ் ஜெயராஜிக்கு சம்பள பாக்கி போல , அவரு படங்கள்ளயே இந்த படத்துக்குதான் மகா மொக்கையான பாட்டுலாம் போட்றுக்காரு.
படத்தோட வசனம்லாம் .........ம்ம்ம் அசிங்கமா வாய்ல வருது , டப்பிங் படங்களுக்கு வசனமெழுதும் மருதபரணியாக இருக்கலாமோனு நினைக்கிறேன் , படத்தில சில சேம்பிள் டயலாக்ஸ்
* ''டேய் பகவான பாக்க பாதயாத்திரை போயிட்டிருந்தவன பகீர்னு புடிச்சு , கூண்டுல நிருத்திட்டியே ''
* ''உன்னாட்டம் எத்தன பேர பாத்துருக்கேன்டா , தர்மத்துக்கு ஒரு பங்கம் வந்தா அத காப்பாத்த நான் வருவேன்டா ''
இப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும் .
படத்தில உபேந்திராவ கூட டப்பிங் பட வாய்ஸ்ல கத்தி கத்தி பேச விட்டு வேடிக்கை பாத்திருக்காங்க , அவரும் ஏமாத்திட்டாரு .
இனிமேலாவது தமிழ்படத்த தமிழ்படமா எடுங்கடா... இல்ல உருப்படியா தெலுங்கு படம் எடுத்து தமிழ்ல டப்பிங் பண்ணி ரீலீஸ் பண்ணுங்கடா...
இப்படி அரைகுறையா படமெடுத்து உயிர வாங்கதீங்க...
மொத்தத்தில் சத்யம் -
தமிழ்சினிமாவே அல்ல, ஒரு வேளை தெலுங்கில ஹிட் ஆனா அவங்க வேணா மைல்கல் , பாறாங்கல், கடப்பாகல்னுலாம் சொல்லிக்கலாம்
____________________________________________________________________
வரலாறு படைத்த ஒரு சினிமா பற்றிய குட்டி செய்தி :
பெரிய உயிரினங்களால் ஏற்படும் அழிவுகள் குறித்து முதன்முதலில் 1933ல் வெளியான கிங்காங் திரைப்படத்தில் STOP MOTION எனப்படும் ஒரு வகை திரையாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட கிங்காங்கின் மாதிரி உருவம் , அந்த மாதிரியை சுற்றி குரங்கை போன்ற உருவம் வருமாரு பஞ்சு அடைக்கப்பட்டு அதன் உடலை மிருக தோலினாலும் அதன் மீது முயலின் ரோமங்களால் மேல் பூச்சும் தரப்பட்டு படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . அதன் உடல் கூடு இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ,அதன் உடலின் எல்லா பாகங்களும் அசையும் வகையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
___________________________________________________________________