Pages

16 August 2008

படிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)

சுயமில்லா இரவிகளில் :

இரவு வேளைகளில் தனியாக சுற்றிதிரிவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று , சென்ற ஒரு வாரமாகத்தான் நான் எங்கும் செல்வதில்லை , மனநிலை சரியில்லை , மனதில் வெறுமையின் அளவு மிதமிஞ்சிய அளவுக்கு முற்றியிருந்தே காரணம் ,

அவளை இரவுகளில்தான் கண்டெடுத்தேன் , நான் அலைவது தேடலுக்காய் , முற்றுப்பெறாத என் தேடலுக்காய் , பல வருடமாய் தொடரும் என் தேடல் இன்றாவது முற்று பெருமா என்பது போன்ற ஒரு தேடல். அநாதைகளின் வெருமைக்கு அர்த்தமில்லை.

எனது வண்டி இதோ ரயில் நிலையத்தை தாண்டிவிட்டது , ரயில்நிலையத்தின் பின்புறம்தான் அந்த பாழடைந்த பழைய பிரிட்டிஷ் காலத்திய கிடங்கு இருந்தது , அங்குதான் அரவு வேளைகளில் சுற்றி திரிய எனக்கு தேவையான போதை கிடைத்தது ,


அங்கு இரவுகளில் சுற்றும் இளமையில்லா விபச்சாரிகளும் , அரவாணிகளும் , கஞ்சா விற்கும் பிச்சைகார வேடதாரி கிழவர்களும் , லாரி ஓட்டுனர்களும் , அங்குள்ள வண்டி கடையில் டீ விற்கும் பெரியவரும் என அந்த இடத்தின் அனைத்தும் எனக்கு தெரியும் ,

அந்த இடத்தில் பல வருடங்களாக சுற்றியதில் கிடைத்தவை இந்த சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இவர்களும் இவைகளுமே , அவர்களுக்கும் அவைகளுக்கும் ஆயிரமாயிரம் ஏக்கங்களும் , கனவுகளுகளும் , கதைகளும் எப்போதும் இருந்திருக்கின்றன . அவர்கள் சமுதாயத்தை தங்கள் இந்நிலைக்காக கேள்விகள் கேட்டதில்லை .

கேள்விக்குறிகள் ஏன் வளைந்திருக்கின்றன தெரியுமா , கேள்வி கேட்பவன் என்றுமே இந்த சமுதாயத்தில் வளைக்கப்படுவான் , சுவடுகளின்றி அழிக்கப்படுவான் அதற்குத்தான் அந்த குறியின் கீழ் ஒரு புள்ளியோ?

மஞ்சுளாவை எனக்கு நன்றாகத்தெரியும் , அந்த இருள் நிறைந்த பிரிட்டிஷ் கிடங்கியில் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு சிறிய அறைதான் அவளது வசிப்பிடம் , வயது நாற்பத்தைந்துக்கு மிகாமல் இருக்கும் , விபச்சாரி , ஐந்துக்கும் பத்துக்கும் கூட தன் உடலை விற்பவள் , மிக நல்லவள் , என்னை பார்த்தால் பாக்கு மட்டும் கேட்பாள் , என்னை பல முறை அவள் சுகிக்க அழைத்தும் நான் மறுத்திருக்கிறேன் . அவளது அன்பு மட்டும் போதுமென்றிருக்கிறேன் . என்னால் விபச்சாரிகளை புணர இயலுவதில்லை . இவளை கண்ட பிறகுதான் இப்படி .

இவள் வாழ்க்கையில் சந்திக்காத மனிதரில் இல்லை , எல்லா வகை மனிதனையும் சந்தித்திருக்கிறாள் ,

குட்டை,நெட்டை,குண்டு,ஒல்லி,இளைஞன் ,கிழவன் ,குடும்பஸ்தன்,பிரம்மச்சாரி,வழிபோக்கன்,
பிச்சைகாரன்,பணக்காரன்,பார்ப்பனன்,பகுத்தறிவாளன்,கம்யூனிஸ்ட்,எழுத்தாளன்,அரசியல்வாதி,
முதலாளி,தொழலாளி,விவசாயி...............


சுடுகாட்டில் காணும் சமத்துவத்தை , விபச்சாரியின் யோனியிலும் காணலாமோ? , அவளும் அவளது உடலும் கூட ஒரு சுடுகாட்டை போன்றதுதான் .

அவளது உடலில் போலிஸின் பூட்ஸ்கால்கள் படாத இடமென்று எதுவுமேயில்லை , போலிஸூக்கு காமமென்றாலும் , கடுப்பென்றாலும் இவளது உடலே இறையாக்கபட்டிருக்கிறது.
அவள் கூறும் கதைகளென்றால் எனக்கு மிக பிடிக்கும் , ஆயிரமாயிரம் கதைகள் சொல்வாள் , கஞ்சாவின் மயக்கத்தினூடே அவளது கதைகள் அற்புதமாய் என் மனகண்ணில் விரியும்.

அவளது சிரிப்பிலும் சமயங்களில் கடவுள் தெரிந்திருக்கிறார் . அவளது அரவாணி தோழிகளோடு நானும் பல நாட்களில் மது அருந்தியபடி பேசிமகிழும் வேளையில் இவள் மட்டும் கண்களில் எதோ ஒரு கதை எனக்கு மட்டும் புரியும் படி கூறியிருக்கிறாள் . அக்கதை எனக்கு இப்பொது வரை புரிந்ததே இல்லை.

அவளும் உன்னை போல என்னை போல மூன்று வேளை சோறு தின்று , இச்சமூகத்தில் கவுரமென்னும் சங்கிலியோடு தன்னை பிணைத்துக்கொண்டுதான் வாழ்ந்திருக்கிறாள் . இவளது அழகு ( என் காதலியின் அழகு ) இதோ இவளை பல கழுகுகளின் காமத்திற்கு தீனியாக்கியிருக்கிறது , இன்று அவளை பார்த்தால் அவள் அழாகாய் இருந்திருப்பாள் என்று கூட யாரும் ஒத்துக்கொள்ள முடியாதபடி சமுதாயம் அவளை அழகாக்கியிருந்தது .

அவள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்து சீரழிந்த கதை எல்லாரும் அறிந்த ஒன்றுதான் , சீரழிந்த அவளது வாழ்க்கை மேலும் சீரழிய அவளது அன்பின் தேடலும் ஒரு காரணமாய் இருந்தது , அவளுக்கு சென்னை வரும் முன்பே திருமணமாகியிருந்தது , அவளுக்கும் ஒரு மகனிருந்தான் .


இதோ இன்றிரவும் அவளை ஒரு முறை பார்த்து விட்டு என் தேடலை தொடர வேண்டும் , வண்டியை அந்த பிரிட்டிஷ் கிடங்கின் வாசலில் நிறுத்திவிட்டு , உள்ளே நுழைந்தேன் , அவளில்லை , அறையிலும் ஒன்றுமில்லை , வாசலில் பெரியவரிடம் கேட்டபோது அவள் ஜிஹெச்சில் இருப்பதாகவும் ஒரு வாரமாய் வயிற்றுபோக்கும் , காய்ச்சலுமாய் கிடந்ததாகவும் கூற மனது ஏதோ செய்தது , வண்டியுடன் அறைக்கே திரும்பி விட்டேன் .

அடுத்த நாள் காலை அவளை நேரில் சந்திக்கலாமென மருத்துவமனைக்கு செல்ல , அரை நிர்வாணமாய் பாதி உயிரோடு மருத்துவமனை வாயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தாள் , என் கண்களில் துளிர்த்த கண்ணீருக்கு காரணம் தெரியவில்லை என் கண்களுக்கும் எனக்கும் .
தனக்கு எய்ட்ஸ் என கூறினாள் , இனி பிச்சை எடுக்கத்தான் வேண்டுமெனவும் இனி தன் உடலுக்கு மதிப்பேது என வருந்தினாள் , அவளை என் வண்டியில் அமரசெய்து வீட்டிற்கு கிளம்பினேன் . என்னோடு தங்கிவிட வற்புறுத்தினேன் , அவளும் சரியென்று கூறிவிட , எனது வெகு நாள் தேடல் முடிவுக்கு வந்து விட்டதாய் எண்ணினேன் .

என் தாயும் மஞ்சுளாவை போலத்தான் சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடி வந்தவள் , இன்று வரை அவளை எந்த சினிமாவிலும் நான் பார்த்ததில்லை , அவளுக்கும் இது போல ஒரு நிலை வந்திருக்குமோ என்கின்ற என் தேடல்தான் இதோ எனக்கு ஒரு புதிய தாயை கண்டறிய உதவியிருக்கிறது , எனது தேடலுக்கு முற்றுப்புள்ளியாய் மஞ்சுளா வந்ததாய்தான் நினைத்தேன் ,


ஒரு மாதம் என்னோடு இருந்து எனக்கு சிறிய உதவிகள் செய்து கொண்டு மிக நிம்மதியாய் மகிழ்ச்சியாய் , தன் வாழ்வில் முதல் முறையாய் நிம்மதியாய் வாழ்ந்தாள் , அவளுக்கு என்ன தோன்றியதோ , ஒரு வெள்ளி கிழமை காணாமல் போய்விட்டாள் .


தெய்வம் எனக்காய் தந்த ஒன்று , காணாமல் போனது , வாழ்க்கையின் இருபது வருடங்களை தனியே கழித்த எனக்கு வெறுமை தெரிந்தது . இரவுகளில் நிறுத்தப்பட்டிருந்த எனது தேடல் மீண்டும் தொடர்ந்தது . இதோ தினமும் தொடர்கிறது எனது தேடல் ,

அவளை இரவுகளில்தான் நான் கண்டெடுத்தேன் , நான் அலைவது தேடலுக்காய் , முற்றுப்பெறாத என் தேடலுக்காய் , பல வருடமாய் தொடரும் என் தேடல் இன்றாவது முற்று பெருமா என்பது போன்ற ஒரு தேடல் .

____________________________________________________________________________________

மண்டை :


அந்த மனிதரை பார்க்க மிக நல்லவர் போலத்தான் இருந்தது ராமிற்கு , இருந்தாலும் தயக்கத்தோடு எப்படி அவரிடம் கேட்பது , அவர் தன்னை தவறாக நினைத்து விட்டால் , ராமிற்கு இது அடிக்கடி எழுகின்ற சந்தேகம்தான் , ஆனால் பேருந்து நிலையத்தின் தனியே நிற்கும் ஒரு ஆணிடம் எப்படி கேட்பது ,

இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க நீல நிற சட்டையும் கையில் ஆனந்த விகடனுமாய் அமர்ந்திருந்த மோகன் ராமை முறைத்து பார்க்க ராமிற்கு வெட்கமாய் இருந்தது ,

ராம் இப்படி ஒன்றை தேடித்தான் பல வருடமாய் அலைந்திருக்கிறான் , ஆனால் இன்று அது அவன் முன்னே , ஆனால் அவனால் அதை பற்றி கேட்க வெட்கம் பிடுங்கியது , மனதிற்குள் ஒரு முடிவெடுத்தவானாய்,

அவரருகில் சென்று

'' சார் !! '' என்றான்

அவனை மேலும் கீழுமாய் ஒரு பார்வையை உதிர்த்து விட்டு

''சொல்லுங்க சார்''

''சார் தப்பா நினைச்சுகாதீங்க , ''

'' அட என்னப்பா , தயங்காம கேளு ''

'' இந்த விக் எங்க வாங்கினது , ரொம்ப அருமையா இருக்கே , பார்த்தா நிஜம் மாதிரியே இருக்கே சார் ? சொன்னா நானும் ஒன்னு வாங்கிப்பேன் அதான் ''


கடுப்பான மோகன் விருட்டென அங்கிருந்து நகர , நம் கதாநாயகனும் தனது அரைமண்டையை மறைக்கும் அற்புத விக்கின் தேடலைத்தொடர்ந்தான் .


___________________________________________________________________



சென்னை குறித்த அரிய புகைப்படம் : இப்படத்தில் தெரிவது 1925 ஆம் ஆண்டில் கூவம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையமும் .


____________________________________________________________________
வந்தது வந்துட்டீங்க அப்படியே பக்கத்துல கிரிக்கெட்ட விட சிறந்த விளையாட்டா நீங்க கருதும் விளையாட்டு எதுனு வலது பக்கம் ஓட்ட குத்திட்டு போங்கோ .
____________________________________________________________________