'' ராமா எப்படியாவுது இன்னைக்கு அந்த படத்துக்கு போயிறணும்டா, !!!! '' கிருஷ்ணனும் ஒரு வாரமாக தினமும் பத்து முறையாவது இப்படி சொல்லிக்கொண்டே இருந்தான் . கிருஷணன் புதுக்கல்லூரியில் போன மாதம் சேர்ந்த பின் கிடைத்த நண்பன்தான் ராமன் , பால்மணம் கொஞ்சம் மாறிய பாலக இளைஞர்கள் , கிருஷ்ணனுக்கு அந்த பட போஸ்டரை பார்த்ததிலிருந்து நிலை கொள்ளவில்லை . ஒரு வாரமாக தினமும் வீட்டிலிருந்து கிளம்பும் போதும் வீட்டிற்கு திரும்பும் போதும் அந்த போஸ்டரை ஐந்து நிமிடமாவது பார்த்து ரசித்து விட்டுத்தான் மறுவேலை .
'' கிருஷணா அந்த படத்துல அப்படி என்னதான்டா இருக்கு '' தன் அக்ரகாரத்தை தவிர எதையும் அறியாத ராமன் தலையை சொறிந்தபடி கேட்க ,
''ராமா அதுக்குதான்டா!! ஒரு தடவ அந்த படத்த பார்த்துடலாம்டா !!
அந்த படம் பேர பாத்தியா இளநெஞ்சை கிள்ளாதேனு வச்சுருக்காங்க பேர கேட்டாலே உனக்கு ஒரு மாதிரி இல்ல ''
'' ஆமாடா நேக்கும் ஏதோ மாதிரிதான் இருக்குடா , சரி அந்த சினிமா எந்த தியேட்டர்ல ஒடுறது ''
''ஜோதிலடா , ஒரு வாரம்தான்டா அந்த படம் ஒடும் , இன்னிக்கு புதன்ல நாளானிக்கு வேற படம் மாத்திருவான் ''
'' ஐய்யயோ ஜோதியா!!! கிருஷ்ணா அங்க பக்கத்துல தான் எங்க அத்திம்பேர் வீடு இருக்கு , அவரு இல்ல அவருக்கு தெரிஞ்சவங்க பாத்துட்டா , அது சரி அந்த தியேட்டர் பத்தி இவ்ளோ மேட்டர் எப்படிடா தெரிஞ்சுது ''
'' உங்க அத்திம்பேர பத்தி கவலப்படாத , நாம காலைல காலேஜ் கட் பண்ணிட்டு , 8 மணிக்கே போயி தியேட்டர்ல உக்காந்துருவோம் , ஓகேவா, உங்க அத்திம்பேர் மட்டுமில்ல ஊரே ஆபிஸ் போற பிஸில இருப்பாங்க , பயப்படாதே''
''என்னடா காலேஜ் வேற கட்டா , தப்பு மேல தப்பு செய்ய சொல்றியே , பராவால்ல அப்ப நாளைக்கு காலைல சரியா வந்துடு '' என்று தனது பேருந்து வரவும் அதில் படபடவென ஏறி வீட்டிற்கு கிளம்பினான் .
இரவு இருவருக்கும் தூக்கமே வரவில்லை , முதலிரவுக்கு காத்திருக்கும் மணமகனைப்போல மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் , கிருஷ்ணாவுக்கு அந்த பட கதாநாயகி ரேஷ்மா பற்றியே கற்பனை , ராமனுக்கு அவனது அத்திம்பேர் பற்றியே கற்பனை !!!! . படத்தில் பிட் இருக்குமா , இருந்தால் பாதி காட்டுவார்களா அல்ல முழுதாக காட்டுவார்களா , கதை இருக்குமா , சண்டை இருக்குமா , கதாநாயகன் யாரு , அவர் படம் ஏன் அந்த போஸ்டரில் இல்லை , படப்பேருக்கேத்த மாதிரி காட்சி இருக்கமா , யாராவது பார்த்துட்டா என்ன செய்ய , வீட்டில மாட்டிகிட்டா என்ன சொல்றது , டிக்கெட் விலை எவ்வளவு , இது தப்பில்லையா என இரவெல்லாம் மனதிற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் , சரியான தூக்கமே இல்லை இருவருக்கும் , வீட்டிலிருந்து 7 மணிக்கே இருவரும் கிளம்பினர் .
7.30க்கு சரியாக பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர் , அங்கிருந்து ஒரு பேருந்தை பிடித்து திரையரங்கை 10 நிமிடங்களில் அடைந்துவிட்டனர் . வழியில் இருவரும் இரவு தூங்காமல் யோசித்து கொண்டிருந்ததை குறித்தே பேசிக்கொண்டிருந்தனர் . பரங்கிமலை ஜோதி சென்னையில் பலருக்கும் பாலியலை அறிமுகப்படுத்திய அந்த அற்புத திரையரங்கு இன்னும் அந்த இருவருக்காக திறக்கவில்லை , இருவரும் மனம் நொந்து போய் பக்கத்தில் இருந்த பெட்டிகடையில் விசாரித்ததில் தான் தெரிந்தது படம் 12 மணிக்கென்று , அதுவரைக்கும் என்ன செய்வது எனப்புரியாமல் திரையரங்கு வாசலில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்து 12 மணிக்கு காத்திருந்தனர் .
இருவரும் இரவு உறங்காததால் அப்படியே அங்கேயே உறங்கிபோனார்கள் , கனவுகளிலும் அந்த படம் பற்றிய நினைவுகளே , இருவருக்கும் . கனவில் மழை பெய்தது
11.30 மணிவாக்கில் கிருஷ்ணா படாரென விழித்துக்கொண்டான், பக்கத்தில் யாரோ மூத்திரம் போய் கொண்டிருக்க ராமனை எழுப்பினான் , ராமனுக்கும் அப்போதுதான் நினைவு வந்தது , '' மச்சி வாடா தியேட்டர் திறந்துட்டாங்க வா போயி டிக்கட் எடுக்கலாம் '' கிருஷணா , ராமனை அங்கிருந்து கிளப்பினான் .
'' தம்பிங்களா இந்த படத்துக்கு சின்ன பசங்கள்ளால் வரக்கூடாது , கிளம்புங்க'' டிக்கெட் கொடுப்பவர் விரட்டினார், இப்படி ஒரு பிரச்சனையை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை , அவர்கள் என்ன செய்வார்கள் அவர்களது உருவம் அப்படி .
'' அண்ணா எனக்கும் இவனுக்கும் 18 வயசு ஆயிடுச்சுனா , நம்புங்கண்ணா , காலைலருந்து வெயிட் பண்றேங்கண்ணா '' கிருஷணா போராடினான் , ராமனும் ஆமாம் என்பது போல தலையை அசைத்துக் கொண்டிருந்தான் .
'' தம்பிகளா உங்கள பார்த்தா ரொம்ப சின்ன பசங்களா இருக்கு உங்கள உள்ள விட்டா எங்களுக்குதான்பா பிரச்சனை ''
'' அண்ணா , இந்தாங்கண்ணா என் காலேஜ் ஐடி கார்டு , இதுல வயசு போட்டிருக்கு பாருங்க !!''
'' தம்பிங்களா காலேஜ்ஜா படிக்கிறீங்க ,முதல்லயே சொல்லிருக்கலாம்ல , சரி இந்தாங்க டிக்கெட் ''
கிருஷ்ணாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்ததது . டிக்கெட் கிழிப்பவரிடம் ராமன் ஆர்வத்தில் '' அண்ணா படத்தில பிட்டு இருக்காணா '' , அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது , முறைத்தபடியே டிக்கெட்டை பட்டென்று கிழித்து கையில் கொடுத்தார் .
தியேட்டரின் உள்ளே குமட்டும் நாற்றம் , சீட்டெல்லாம் கிழிந்திருந்தது , திரையரங்கின் இருளான பகுதியாக தேடிபிடித்து அமர்ந்து கொண்டனர் . ராமனுக்கு வயிற்றை பிறட்டியது , கிருஷ்ணன் மிக ஆர்வமாக அமர்ந்து கொண்டிருந்ததால் அவனுக்கு அந்த துர்நாற்றம் தெரியவில்லை . திரையரங்கில் மொத்தமாய் 10 பேர்தான் இருந்தனர் . மணி 12 ஆகியும் படம் தொடங்கவில்லை , 12.30 வரை அதுவே தொடர்ந்தது . மெதுவாக வெள்ளை திரை மேல் இருந்த சிகப்பு திரை மறைய , இருவரும் குஷியாகினர் . இன்னும் படம் தொடங்கவில்லை , இருவரும் மிக ஆர்வமாக திரையையே பார்த்துக்கொண்டிருந்தனர் , வெங்கடாசலபதி தரிசனத்திற்கு காத்திருக்கும் கடைநிலை பக்தர்களைப் போல . இப்போது திரையரங்கில் 30 பேர் கூடியிருப்பர் . அதில் ஒருவன் நேராக இவர்களை நோக்கி வர அதிர்ந்து போயினர் , அவன் '' தம்பி இந்த சீட்டுக்கு யாராவது வராங்களா , '' இருவரும் பயந்த படி இல்லைங்க என்றனர் .
கிருஷ்ணனின் அலுகில் அந்த நபர் அமர்ந்து கொண்டார் , பார்க்க காவல்துறை அதிகாரியை போல ஒரு தோற்றம் , அவர்களிருவருக்கும் கிலி மனதில் மட்டுமல்ல நுரையீரல் வரை பரவியது .
வெள்ளை திரை ஒளிர படம் துவங்கியது , எச்சில் துப்பாதீர்கள் , முன்சீட்டில் கால்வைக்காதீர்கள் , புகைபிடிக்காதீர்கள் , தினகரன் படியுங்கள் , மாலைமுரசு படியுங்கள் என , ஒவ்வொரு ஒளி கீற்றிற்கும் பக்கத்து சீட்டு நபர் கிருஷ்ணனை பார்த்து புன்னகைக்க , கிருஷ்ணனுக்கு குலை நடுங்கியது , படம் துவங்கியது .
'' டேய் ராமா இது என்னடா , யூ சர்டிபிக்கேட் போட்றுக்காங்க '' ,''எங்கிட்ட கேட்டா , உனக்குதான இதெல்லாம் அத்துபடி '' ராமன் கிசுகிசுத்தான் .
படம் பெயர் வந்ததும் தான் கிருஷ்ணனுக்கு நிம்மதியாய் இருந்ததது .
'' இளநெஞ்சை கிள்ளாதே '' '' கனவுகன்னி ரேஷ்மா '' பெயர்கள் ஒடிக்கொண்டே இருந்தது ,
5 நிமிடம் பெயர்கள் மட்டுமே ஓடி கொண்டிருந்தது .
'' நமோ நாராயணா'' ஒரு வயதானவர் கடவுளுக்கு அர்ச்சனை செய்ய படம் துவங்கியது ,
படத்தில் அந்த கிழவரின் இளம் மனைவியை அவர் பல முறை முயன்றும் திருப்தி படுத்த முடியாது கஷ்டப்பட , கதாநாயகன் அந்த பெண்ணை திருப்தி படுத்தினான் . படத்தில் பல முறை மிக நெருக்கமாக இருவரும் நெருங்குவார்கள் சட்டென அடுத்த காட்சி துவங்கிவிடும் . 5 முறை இதுவே தொடர்ந்தது .
படம் ஓடிக்கொண்டிருக்க திரை இருள , எல்லா விளக்குகளும் எரிந்தது . இடைவேளை .
ராமன் கிருஷ்ணனை முறைத்தபடி இருந்தான் , கிருஷணன் ராமனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் .
இடைவேளை முடிந்ததது , இடைவேளையில் இருவரும் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தனர் . விளக்குகள் அணைய படம் தொடர்ந்தது , இருவரும் இப்போதாவது ஏதாவது பிட் வராதா என ஏக்கத்துடன் பார்க்க , படம் துவங்கி 5 நிமிடத்தில் அனைவரும் வெளியேற துவங்கினர் . படம் நிருத்தப்பட்டது . பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவரும் கிளம்ப இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை .
இப்போது திரையரங்கமே காலியாகியிருந்தது , '' தம்பிகளா படம் முடிஞ்சுது கிளம்புங்க !! ''
''அண்ணா கிளைமாக்ஸ் போடவேயில்லையே '' ராமன் ஆர்வமாய் கேட்க '' தோடா கிளம்பு '' என முறைத்தான் திரையரங்க ஊழியன்.
இருவரும் சோகமாக அங்கிருந்து கிளம்பினர் . இருவரும் அந்த படத்திற்கு சென்று திரும்பியதிலிருந்து பேசிக்கொள்வதில்லை . நட்பு முறிந்தது .
இருவரும் அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் போல எதிரில் பார்த்தால் முறைத்து கொள்வர் .
20 வருடங்களுக்கு பிறகு ,
ராமனின் நண்பன் வினோ , அது குறித்து கேட்டான் ,
'' அப்படி என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சனை , ஒரே காலேஜ்ல படிச்சு ஒரே கம்பெனில 15 வருஷமா வேலை செய்றீங்க ''
ராமன் அவனும் கிருஷ்ணனும் பிட்டு படம் பார்க்க போனதை சொன்னான் .
'' அதுல என்னடா பிரச்சனை படத்துல பிட்டு இல்லனா அவன் என்ன செய்வான் , தியேட்டர் காரன் மேலதான உனக்கு கோபம் வரணும் ''
'' என் கோபம் அதுக்கில்லடா , அந்த படத்துல வர கிழவன் பேரு ராமன் , கதாநாயகன் பேரு கிருஷ்ணன் அதுக்குதான்டா , அதுக்காக என்ன பார்த்து கேவலமா சிரிச்சுட்டாண்டா'' கண்களில் கண்ணீருடன் ராமன் .