ஆரம்ப காட்சி ஒரு மேடையிலிருந்து துவங்குகிறது , அங்கே ஆறு ஆண்கள் வந்து அமர படம் துவங்குகிறது . முதலில் ஒருவர் ( யார் கண்ணன் ) பேச துவங்குகிறார் , அவர் நாட்டில் பெண்ணியம் பேசுவோர் அதிகரித்துவிட்டதாகவும் , அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் , ஆண்களே உயர்ந்தவர்கள் என்றும் , அதற்காத்தான் இங்கே நாம் கூடியுள்ளோம் எனக் கூறி அமர்கிறார் . அடுத்தடுத்து வருபவர்களும் அதை முன்மொழிவதோடு பெண்கள் மூட்டைப்பூச்சிகள் , நசுக்கப்படவேண்டியவர்கள் , அவர்களுக்கு பாவம் பார்த்தால் நம்மை அழித்து விடுவார்கள் , பெண்கள் எப்போதும் ஆண்களை விட தாழ்ந்தவர்கள், நம் துன்பங்களுக்கு அவர்களே காரணம் என ஒருவர் பின் ஒருவராக பேசி அமர்கின்றனர் . இவ்வாறு ஒவ்வொருவராக பேசி அமர அவர்களுக்கு முறையே மோர்,இளநீர்,பெப்சி,கோக் தரப்படுகிறது . அந்த வரிசையில் கடைசியாக ஒருவர் பேசுகிறார் , அவர் பெண்களை பற்றி உயர்வாக பேசுகிறார் , பெண்கள் சிறந்தவர்களென்றும் அவர்கள் நமக்கு சமமானவர்கள் என்றும் பேச சக பேச்சாளர்கள் அதிருப்தி அடைகின்றனர் , அவர் தன் பேச்சை முடித்துக்கொண்டு அவரது இருக்கையில் அமர அவர் முன்னால் சில பாட்டில்கள் வைக்கப்படுகிறது , '' மவனே இப்டியே பேசின உனக்கு ஆசிட்தான் '' என கூட்டத்திலிருந்து ஒரு ஒலி கேட்க , படம் முடிகிறது .
இப்படத்தின் சிறப்பம்சமாக நான் கருதுவது படத்தில் யாருடைய முகமும் காட்டப்படவில்லை , நடிகர்களது உடலசைவுகளும்,அவர்களது வாயும் மட்டுமே காட்டப்படுகிறது . படம் பார்த்த எல்லோருக்குமே அது பிடித்திருக்கும் என எண்ணுகிறேன் . அதே போல் ஒவ்வொரு முறை குளிர்பானங்கள் வைக்கும் போதும் நம் மனதிலொரு சிறிய சஸ்பென்ஸ் இழையோடுவது மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது . அந்த முகமறைப்பு ஒளிப்பதிவு யுக்தியும் அருமை .இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் , சொல்ல வந்த கருத்தை அதிகம் ஒலிக்க செய்ததைவிட சிறிது ஒளிக்கவும் செய்திருக்கலாமெனத்தோன்றுகிறது . அந்த ஆசிட் காட்சியும் ஏனோ கதையோடு ஒட்டவில்லை ( அந்த முடிவு பலரை நகைக்க வைக்கலாம் )மற்றபடி படம் அருமையாக உள்ளது . உண்மைத்தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் .
எந்த ஒரு கலைஞனுக்கும் சரியானதொரு களம் அமையும் வரை அவனது திறமைகள் வெளியுலகிற்கு தெரிவதில்லை .
நம் சக பதிவரின் குறும்படத்தை வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சிக்கு பதிவுலக நண்பர்கள் சார்பாக நன்றிகள்