Pages

20 February 2023

நூறுரூபாய்தானே


நேற்று தியாகராயர் நகரில் என் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். போக்குவரத்து காவல்துறையினர் இடைமறித்து நிறுத்தினர். என்னிடம் எல்லா டாகுமென்ட்களும் இருப்பதாக சொன்னேன். இது அதற்கில்லை, ‘’உங்கள் வண்டியின் மீது ஏற்கனவே எதாவது அபாரதம் நிலுவையாக இருக்கிறதா என பார்க்கப்போகிறோம். இருந்தால் கட்டுங்க இல்லாட்டி கிளம்பலாம் என்று வண்டியை ஒரங்கட்டினார்கள். 

பார்த்தால் நூறுரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். எதற்கு என்று விசாரிக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக என்றார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்போது எங்கே மீறினேன் என்று கேட்டேன். அப்படித்தான் காட்டுது சார் நீங்க நூறு ரூபாய் கொடுத்தால்தான் போக முடியும் என்று சொல்லிவிட்டார், நானோ ‘’எனக்கு விபரம் தரமால் பணம் கொடுக்க முடியாது’’ என சண்டையிடத்தொடங்கினேன். 

கடைசியில் காவல்துறை அதிகாரியும் நானுமாக விபரங்களை தேடிபிடித்து கண்டுபிடித்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாநகர் திருமங்கலம் சிக்னலில் தானியங்கி போக்குவரத்து கட்டுப்பாட்டு கருவி ஒன்று மாட்டப்பட்டது. அது சாலையில் சிக்னல்களை மீறுவோர், ஹெல்மெட் அணியாதோர், கோட்டைத்தாண்டி நிற்பவர்கள் என கண்டுபிடித்து அதுவாகவே பைன் போட்டுவிடும். அது சில மாதங்கள் செயல்படுத்தி பிறகு கைவிட்டுவிட்டனர் என்று நினைக்கிறேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் செய்யப்பட்ட ஏற்பாடு இது! 

அப்படித்தான் அந்த கருவி என்னுடைய பிழையை கண்டுபிடித்திருக்கிறது. அதற்குரிய புகைப்படத்தையும் அது இணைத்திருக்கிறது. புகைப்படத்தை பார்த்தபோது என் மீது எந்த பிழையும் இல்லை. அது கருவியின் தவறு. சிக்னல் கோட்டுக்கு பின்னால்தான் நிற்கிறேன். ஹெல்மெட் அணிந்திருக்கிறேன். சிகப்பு விளக்கை தாண்டிச்செல்லவும் இல்லை. ஆனால் தொழில்நுட்ப கோளாறால் எனக்கு அப்படி ஒரு அபாரதம் விதிக்கப்பட்டிருக்கிறது. காவலரோடு வாக்குவாதம் தொடங்கியது. ‘’சார் உங்களுக்கு டிஸ்ப்யூட் இருந்தா முன்னாலயே நீங்க சொல்லிருக்கணும். அதுக்குதான் உங்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டு ஒருமாதம் டைம் குடுத்துருக்காங்களே உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்திருக்குமே’’ என்றார் காவலர். ‘’வண்டி ரெஜிஸ்டர் பண்ணினப்ப யூஸ்பண்ண மொபைல் இப்ப பண்ணல, அப்புறம் அது தப்புன்னா நான் ஏன் சார் சொல்லணும். நீங்க பாத்துக்க மாட்டீங்களா… என்னால காசு தரமுடியாது’’ என சண்டை போடத்தொடங்கினேன். 

காவலரோ அப்பாவியாக இருந்தார். சார் என்னால எதுவுமே பண்ணமுடியாது. எப்படியும் நான் விட்டாலும் வேற அதிகாரி புடிச்சார்னா அவர்கிட்டயும் நீங்க வாக்குவாதம் பண்ணவேண்டி இருக்கும் பேசாம கட்டிருங்க என்றார். நான் கட்டமாட்டேன் வேறு யாராவது ஆள் பிடித்தால் அங்கும் என் தரப்பு பிரச்சனையை சொல்கிறேன் என்றேன். காவல் அதிகாரியோ விடாப்பிடியாக பேசி என்னை சமாதானப்படுத்தி பணத்தை கட்ட சம்மதிக்க வைத்துவிட்டார். 

என்னுடைய டெபிட் கார்டை கொடுக்க… அதை தேய்த்து பணமெடுக்க முயற்சி செய்தார். ஆனால் டிக்ளைன் ஆகிக்கொண்டே இருந்தது. என்ன சார் காசே வரலை என்றார். நானும் முயற்சி பண்ணினேன். வரவில்லை. வேறு கார்ட் கொடுத்தேன். அதிலும் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது அக்கவுண்டில் பணமில்லை. ‘’சார் என்னசார் நூறுரூவா கூட இல்லாமயா வாழ்ந்துட்டு இருக்கீங்க… நீங்க கிளம்புங்க சார் பரவால்ல…’’ என்றார். ‘’அந்த அக்கவுண்ட்ல இல்ல போல சார் நான் பேடிஎம்ல கட்றேன்’’ என்று சொல்லி பணத்தை கட்டிவிட்டு வந்தேன். 

எனக்கு நூறு ரூபாய் என்பதால் கட்டிவிட்டேன். இதுவே ஆயிரக்கணக்கில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன். கட்டித்தான் ஆகவேண்டும் என்றோ அல்லது ஜெயிலுக்கு போ என்றால் போக முடியுமா.. என்கிற மனக்குழப்பங்கள் இருந்துகொண்டே இருந்தன. 

உலகெங்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முன்பைவிட பன்மடங்காக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற தானியங்கி கண்காணிப்பு கருவிகள் பல நாடுகளில் வந்துவிட்டன. சீனா போன்ற நாடுகளில் மனிதர்களின் முகங்களை, கைரேகைகளை, கண்களை ஸ்கேன் பண்ணி இன்னார் இன்ன இடத்திற்கு போகிறான் வருகிறான் இங்கே இதை செய்கிறான் என்று பார்த்து தண்டனை கொடுக்கத் தொடங்கிவிட்டதாம். 

இங்கேயும் அது எதிர்காலத்தில் வரக்கூடும். யோசித்துப்பாருங்கள் யாரோ திருடனுடைய முகத்தை பார்த்து நம்முடைய முகம் அதுபோல இருக்கிறது என நம்மை கைது செய்தாலோ அல்லது தண்டிக்கப்பட்டாலோ என்ன செய்வது என்கிற அச்சம் வருகிறது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கமுடியாது. அது வந்துதான் தீரும்!